'விதின்னு ஒண்ணு இருக்கா ஐயா?' - இப்படி ஒரு மாணவர் எம்.ஏ., வகுப்பில் திடுதிப்பென்று என்னிடம் கேட்டபோது, நான் சற்று குழம்பிப் போனேன்.
'இந்தச் சந்தேகம் உனக்கு ஏன் வந்தது?' என்று கேட்டேன். 'அது ஒண்ணுமில்ல சார், பேப்பர்ல நியூஸ் பார்த்தேன்; பக்கத்து ஊர்ல நேத்து ராத்திரி வீட்டுக்குள்ள படுத்திருந்தவங்க மேல லாரி ஏறி மூணு பேர் இறந்துட்டாங்களாம்; இன்னிக்குக் காலையில தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு கத்திக்கிட்டே மின்சார வயரைப் பிடிச்சுத் தொங்கின ஒருத்தன் உசிர் பொழைச்சுக்கிட்டானாம். காரணம், அந்நேரம் பார்த்து கரண்ட் போயிருச்சாம். கேட்டா இதெல்லாம் 'விதி'ங்கிறாங்க. அதனாலதான் உங்க கிட்ட கேட்கிறேன்' என்றான்.
நான் சற்று யோசிப்பதைப் பார்த்து, 'ஐயாவோட விதியைப் பார்த்தீங்களா? இன்னிக்கு இவன்கிட்ட மாட்டிக்கணும்னு இருக்கு!' என்று ஒரு மாணவர் முனகியது என் காதிலும் விழுந்தது.
'கடவுள் மீது முழு நம்பிக்கை கொண்டவர்கள் விதியை வெல்லும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என்பதை மார்க்கண்டேயனுடைய கதை மூலமாக நாம் அறிகிறோம். 16-வது வயதில், தன் வாழ்நாளின் விதி முடியப் போகிறது எனத் தெரிந்தும், எமன் பாசக்கயிற்றை வீசியபோது, சிவபெருமானிடத்தில் கொண்டிருந்த இடையறாத பக்தியால்- நம்பிக்கையால் அவருடைய லிங்க வடிவ மேனியைத் தழுவிக்கொண்டான் மார்க்கண்டேயன். தன்னைச் சரணடைந்த மார்க்கண்டேயனைக் காக்கும் பொருட்டு சிவபெருமான் எமனை வீழ்த்தினார் எனச் சொல்லப்பட்டிருப்பதை யோசித்துப் பாருங்கள்' என்றேன் நான்.
'அப்படியானால், கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரையும் அவர் காப்பாற்றியிருக்க வேண்டுமே?' என்று ஒரு மாணவி கேட்க, 'உண்மைதான். நம்பியவர்களைக் கடவுள் காப்பாற்றத்தான் செய்வார். இறந்தாலும் இறைவன் இருக்கிற உலகத்திற்குத்தான் செல்வோம் என நம்புகிறவர்களுக்கு மரணம் ஒரு துன்பமில்லை...' என்றேன். தொடர்ந்து...
'எவ்வளவு வலிமையுடையவர்களாக, கல்விமான்களாக இருந்தாலும், விதி அவர்களையும் மதிமயங்க வைக்கும் என்பதை, பஞ்சபாண்டவர்களின் வாழ்க்கையை வைத்துச் சான்று காட்டுகிறார் பாரதியார், தனது 'பாஞ்சாலி சபத'த்தில்! பாரதக் கதையில் துரியோதனன் சூதாட அழைக்கிறான் எனத் தெரிந்தும்கூட பாண்டவர்கள், அவனது நாடான அஸ்தினாபுரத்துக்குச் செல்லும்படி அவர்களை மயக்கியது விதிதான்.
'வலிமையுள்ள சிங்கம் நரியினுடைய சூழ்ச்சியில் மாட்டிக்கொள்ளும்; சிறிய கட்டெறும்பு யானையின் காதுக்குள் சென்று அதனை வீழ்த்திவிடும்; சின்னஞ்சிறு புழுவானது புலியின் கடைவாயில் தோன்றி, அதனைக் கொன்றுவிடும்' என்கிறார் பாரதி. இதையே, வாழ்க்கையில் நமக்கு வருகிற சோதனைகளை விதியின் விளையாட்டு என்று எண்ணி, அஞ்சி நடுங்காமல் நம் மதியால் வெல்ல முற்பட வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்' என்று விளக்கம் தந்தேன் நான்.
'அப்படின்னா மயங்க வைக்கிறது விதி; தெளிய வைக்கிறது மதி; சரிதானே ஐயா?' என்று ஒரு மாணவர் சுருக்கமாகக் கேட்க, 'சபாஷ்! சரியாச் சொன்னே!' என்று நான் உற்சாகமாகப் பாராட்ட, வகுப்பே ஆரவாரம் எழுப்பிக் கை தட்டியது.