அத்தியாவசிய வீட்டுச் சாதனங்களில் ஒன்றாகிவிட்டது ஃப்ரிட்ஜ். சரி, ஃப்ரிட்ஜை முறையாக, முழுமையாக எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளலாமா?
'நம் ஊரின் அறை வெப்ப நிலை 70 டிகிரி ஃபாரன்ஹீட். ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் ஃப்ரீஸரின் வெப்ப நிலை ஜீரோ டிகிரி பாரன்ஹீட். ஃப்ரீஸர் தவிர்த்த மற்றப் பகுதிகளை ரெஃப்ரிஜிரேட்டர் என்கிறோம். இதன் வெப்ப நிலை 37 - 40 டிகிரி ஃபாரன்ஹீட்''
''ஃப்ரீஸரில் ஐஸ் க்ரீம், ஐஸ் கட்டி, அசைவ உணவுகள் போன்றவற்றை வைக்கலாம். ஃப்ரீஸருக்குக் கீழே உள்ள பகுதி 'சில்லர்' எனப்படும். இதில் பால் பாக்கெட், தண்ணீர் பாக்கெட் போன்றவற்றை வைக்கலாம். அடுத்து உள்ள பகுதிகளில் மாவு, பூ எனப் பாதுகாக்க வேண்டிய எந்தப் பொருட்களையும் வைக்கலாம். காய்கறி மற்றும் பழங்கள் வைப்பதற்காகத் தனிப் பெட்டி இருக்கும். அதில் மட்டுமே காய்கறி, பழங்களை வைக்க வேண்டும். கதவுப் பகுதியில் தண்ணீர் பாட்டில், ஜூஸ் பாட்டில், மருந்துப் பொருட்கள், சாக்லேட், அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றை வைக்கலாம்.
பொதுவாக ஃப்ரிட்ஜுக்குள் பொருட்களை வைக்கும்போது அது எந்தப் பொருளாக இருந்தாலும் தனித் தனி பாலிதீன் அல்லது துணிப் பைக்குள் வைத்துத்தான் வைக்க வேண்டும். ஆனால், அந்தப் பைகளில் சிறிய சிறிய துளைகள் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் ஈரப்பதம் சரியாகப் பராமரிக்கப்படும்.
மாவு, துவையல் மற்றும் பூ, இஞ்சி, பூண்டு விழுது போன்ற வாசனைப் பொருட்களைக் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்துவைக்கலாம். இப்படி வைக்கும்போதுதான் ஒரு பொருளில் உள்ள வாசனை அடுத்த பொருளுக்குப் பரவாது. மேலும், சில பொருட்களுக்கு வாயுவை உண்டாக்கக்கூடிய தன்மை இயல்பாக இருக்கும். அப்படி உருவாகும்போது, அது மற்ற பொருட்களையும் பாதிக்கும். உதாரணமாக, ஆப்பிளுக்கு ஈதரை உருவாக்கக் கூடிய தன்மை உண்டு. மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளோடு ஆப்பிளையும் சேர்த்துவைக்கும்போது எல்லாமே கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. கேக் வகைகளுக்குப் பிற பொருட்களின் மணத்தை எளிதில் ஈர்த்துக்கொள்ளும் தன்மை இருப்பதால், அலுமினியம் ஃபாயில் பேப்பரால் நன்றாகச் சுற்றிவைக்க வேண்டும்''
'பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்களைப் பொருத்தவரை, பிரிக்காமல் இருக்கும்பட்சத்தில் அதில் அச்சிடப்பட்டு உள்ள தேதி வரையிலும் வைத்துப் பயன்படுத்தலாம். பிரித்துவிட்டால், சில நாட்களுக்குள் முழுவதையும் பயன்படுத்திவிட வேண்டும். இல்லை என்றால், ஒவ்வொரு முறையும் நீங்கள் ஸ்பூனைப் பயன்படுத்தி எடுக்கும்போது, அதன் வழியாகக் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு.
பிஸ்கட், பிரெட் போன்றவற்றை அறை வெப்ப நிலையிலேயே வைத்திருக்கலாம். ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அதன் வெப்ப நிலை குறைந்து வறண்ட நிலைக்கு மாறிவிடும். காய்கறி, பழங்களைப் பொருத்தவரை மொத்தமாக வாங்கிவைத்துப் பயன்படுத்தும்போது, முதலில் நீர்ச் சத்து அதிகம் உள்ளவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதால், சத்துக்களின் அளவில் மாற்றமோ அல்லது வேறு பிரச்னைகளோ கிடையாது. குறிப்பிட்ட தேதியையும் தாண்டிப் பொருட்களைப் பயன்படுத்துவது, ஃப்ரிட்ஜை அசுத்தமாகவைத்திருப்பது, அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவது மற்றும் வெப்ப நிலை மாறுவது போன்ற சூழ்நிலைகளில்தான் ஃப்ரிட்ஜுக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஏற்கெனவே சமைத்த உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜுக்குள் வைத்திருந்துவிட்டு திரும்பவும் பயன்படுத்தினால், மறுபடியும் 140 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலைக்கு சூடுபடுத்திய பிறகே சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதில் இருக்கும் பாக்டீரியா தொற்று அழியும். சமைத்த பொருட்களை அடிக்கடி ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து சூடுபடுத்தி மறுபடியும் ஃப்ரிட்ஜுக்குள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி வெப்ப நிலை மாறுவதால் உணவின் தரமும் சுவையும் மாறுவதோடு தொற்றுகளும் ஏற்படலாம்'' என்று எச்சரிக்கிறார் திவ்யா.
'ஃப்ரிட்ஜை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?' என்ற கேள்வியை மெக்கானிக் சரவணன் முன்வைத்தோம்.
'மாதத்துக்கு ஒரு முறை ஆறு மணி நேரம் ஃப்ரிட்ஜைப் பயன்படுத்தக் கூடாது. ஃப்ரிட்ஜில் உள்ள எல்லாப் பொருட்களையும் வெளியில் எடுத்துவிட்டு, சோப் தண்ணீரில் துணியை நனைத்து ஃப்ரிட்ஜை சுத்தமாகத் துடைக்க வேண்டும். பின்னர் இரண்டு எலுமிச்சம் பழங்களை எட்டுத் துண்டுகளாக வெட்டி, ஃப்ரிட்ஜுக்குள் வைக்க வேண்டும். இதனால் ஃப்ரிட்ஜுக்குள் உள்ள கெட்ட வாசனை நீங்கும். சில சமயம் ஃப்ரிட்ஜினுள் வைத்த பொருள் ஏதேனும் கெட்டுப்போக நேரிடலாம். அந்தச் சமயத்தில் கெட்டுப்போன பொருளை வெளியில் எடுத்துவிட்டு எலுமிச்சையை வெட்டிவைத்தால் அழுகல் வாசம் போய்விடும்.
பொதுவாக ஃப்ரிட்ஜ் குளிர்ச்சியாக இருப்பதால் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்ந்துவிடும். இதை ஆவியாக்கும் வசதி ஃப்ரிட்ஜிலேயே உள்ளது. அதற்கென உள்ள பொத்தானை அழுத்தினால் அந்தத் தண்ணீர் இரண்டு மணி நேரத்தில் ஆவியாகிவிடும். ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பட்டனை அழுத்தித் தண்ணீரை ஆவியாக்காமல்விட்டால், கொஞ்ச நாளிலேயே ஃப்ரிட்ஜுக்குள் இருந்து தண்ணீர் வெளியே கசியும்.
கிரைண்டருக்கு அருகில் ஃப்ரிட்ஜை வைக்கக் கூடாது. மாவில் உள்ள ஈரப் பதம் ஃப்ரிட்ஜில் தொடர்ந்து படும்போது விரைவிலேயே துருப்பிடித்துவிடும். ஃப்ரிட்ஜுக்குக் குளிர்ச்சியைக் கொடுப்பதற்காக அம்மோனியா, குளோரோ ஃபுளூரோ கார்பன் போன்ற வாயுக்கள் முன்பு பயன்படுத்தப்பட்டன. இவை ஓசோன் படலத்தில் துளையை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், தற்போது ஃப்ரியான், ஆர்134ஏ போன்ற வாயுக்கள் பயன்படுத்தப்படுகின்றன' என்கிறார் சரவணன்.
'தற்போது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், ஃப்ரிட்ஜின் வெப்ப நிலை ஒரே சீராக இருப்பது இல்லை. இதனால் அதற்குள் இருக்கும் பொருட்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டு, வீணாகிவிடும். அந்தப் பொருட்களைச் சாப்பிடும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு, நெஞ்சு எரிச்சல், செரியாமை போன்ற பிரச்னைகளும் உண்டாகும். சமயங்களில் உணவு நஞ்சாகும் சாத்தியமும் உண்டு. எனவே இரண்டு நாட்களுக்கு மேல் உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜுக்குள் வைத்துப் பயன்படுத்த வேண்டாம். முடிந்த வரை ஃப்ரெஷ்ஷாகச் சாப்பிடுவதே நல்லது'
உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜினுள் வைத்துப் பயன்படுத்தும் கால அளவுகள் இதோ:
புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், பொரியல் போன்ற சமைத்த பொருட்கள் -
ஒரு நாள்
புளிக் குழம்பு, காரக் குழம்பு -
இரண்டு நாட்கள்
உப்பு, காரம் சேர்த்த சமைக்காத அசைவ உணவுப் பொருட்கள் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது, துவையல் - ஒரு வாரம்
கேக் வகைகள் - மூன்று நாட்கள்
தயிர், மோர் - நான்கு நாட்கள்
(புளிக்காத தயிர் என்றால் ஒருநாள் மட்டும்)
சீஸ் - ஆறு மாதங்கள்
முட்டை, பழங்கள், காய்கறிகள் -
மூன்று வாரங்கள்