''சாப்பாட்டுக்காகத்தான் நிற்க நேரம் இல்லாமல் ஓடுகிறோம். ஓடி ஓடி உழைக்கிறோம்... ஆனால், அந்தச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது என எத்தனை பேருக்குத் தெரிகிறது? சாப்பாட்டில் நாம் காட்டும் அலட்சியம்தான் பின்னாளில் இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்குமே வேட்டு வைக்கிறது!''
அதிகாலை உணவு அதிமுக்கியம்!
இரவுச் சாப்பாட்டுக்கும் காலை நேரச் சிற்றுண்டிக்கும் இடையேயான இடைவெளி அதிகம். எனவே, காலை உணவினைத் தவிர்க்கவே கூடாது.
உணவை தள்ளிப்போடக் கூடாது!
வேலை வேலை என்று காரணம் சொல்லி சிலர் நேரத்துக்கு சாப்பிட மாட்டார்கள். இது தவறு. உணவு செரிமானத்துக்குத் தேவையான ஹைட்ரோ குளோரிக் அமிலம், குறித்த நேரத்தில் சுரக்க ஆரம்பிக்கும்போதே, பசி உணர்வு ஏற்படுகிறது. அப்போது உடனடியாக நாம் சாப்பிடாவிட்டால், சுரந்த அமிலமானது இரைப்பைச் சுவரை அரிக்க ஆரம்பித்துவிடும். இதனைத் தொடர்ந்து ஏப்பம், வயிற்றில் எரிச்சல், நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். நாளடைவில், இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் இந்த அமில அரிப்பினால், புண்கள் தோன்றும். இந்த வயிற்றுப் புண்ணே பெப்டிக் அல்சராக (Peptic Ulcer) மாறிவிடும், எச்சரிக்கை.
சாப்பிட வாங்க...
வயிற்றைக் காலியாக வைத்திருப்பது எந்த அளவு தவறோ, அதே அளவு வயிறு முட்ட சாப்பிடுவதும் தவறு. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுங்கள். அதுவும் ஒரே வேளையில் மூக்குப் பிடிக்கச் சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அதீத வேலை வைப்பதோடு சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தும். எனவே, அவரவர் உடல்நலத்துக்கு ஏற்றவாறு நான்கு அல்லது ஐந்து வேளைகளாகக்கூட உணவைப் பிரித்துச் சாப்பிட்டுப் பழகலாம். இது எளிதான செரிமானத்துக்கு உதவும்.
அடிக்கடி டீ...
டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிகாலையில் ஒருமுறை டீ குடிக்கலாம். பின்னர் மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையிலான மாலை வேளையில் ஒரு கோப்பை டீ குடிக்கலாம். இதைத் தவிர்த்து அடிக்கடி காபி, டீ அருந்துவது பசி உணர்வை மட்டுப்படுத்தி பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
சாப்பிட்ட உடனேயே சாய்ந்துவிடலாமா?
இரவு சாப்பிட்ட உடன் தூங்கச் சென்றால் அஜீரணம், மலச்சிக்கல், தூக்கமின்மை எனப் பல பிரச்னைகள் உண்டாகும். சாப்பிட்ட உணவானது இரைப்பை, சிறுகுடல் எனச் செரிமானப் பாதையைக் கடப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் தேவைப்படும். ஆனால், இரவில் சாப்பிட்டு முடித்ததும் தூங்க ஆரம்பித்துவிட்டால், சாப்பிட்ட உணவானது செரிமானப் பாதையைக் கடக்கவே சிரமப்படும். அந்த நேரத்தில் செரிமான உறுப்புகளும் ஓய்வு நிலையில் இருப்பதால், உணவானது விரைவாக ஜீரணிக்கப்படாமல், நெஞ்சு எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, இரவு உணவை உண்ட பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரமாவது விழித்திருந்து அதன் பிறகே படுக்கைக்குச் செல்லலாம். சாப்பிட்ட உடன் சில நூறு அடிகள் நடப்பதும் செரிமானத்துக்கு உதவியாக இருக்கும்.
சர்க்கரையில் வேண்டும் அக்கறை!
தென்னிந்தியர்களைவிடவும் அதிக அளவில் இனிப்பு பதார்த்தங்கள் சாப்பிடக்கூடியவர்கள் வட இந்தியர்கள். ஆனாலும், சர்க்கரை நோய்ப் பாதிப்பு என்னவோ தென்னிந்தியர்களைத்தான் அதிக அளவில் பாதிக்கிறது. இதற்குக் காரணம், நம்முடைய அரிசி வகை உணவுகள்தாம். அரிசி - கோதுமை என இரண்டு தானியங்களிலுமே கலோரி அளவு சமமாகவே உள்ளது. ஆனால், அரிசியைப் பட்டை தீட்டி வெண் நிறமாக்கும்போது, அதில் உள்ள நார்ச் சத்து வீணாகிவிடுகிறது. ஆனால், கோதுமையில் உள்ள நார்ச் சத்தினை இப்படி எல்லாம் வீணாக்காமல் சமைத்து உண்ணுகிறார்கள் வட இந்தியர்கள். அதிலும் குறிப்பாக ரொட்டி போன்ற கடின வகை உணவுகளை நன்றாகக் கடித்து மென்று விழுங்கும்போது உணவோடு உமிழ்நீரும் கலந்து கூழாக்கப்படுகிறது. உணவை ஜீரணிக்கச் செய்வதில் உமிழ்நீரின் பங்கு முக்கியமானது. ஆனால், நார்ச் சத்து இல்லாத அரிசி சாதம் போன்றவற்றை கடித்துச் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லாததால், அவசரம் அவசரமாக ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே அள்ளி விழுங்கிவிடுகிறோம். இப்படித் திடுமென இரைப்பைக்குள் வந்து விழும் அரிசி உணவானது எளிதில் செரித்து மொத்தமாகக் கலோரியை வெளிப்படுத்தும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் தடாலடியாக எகிறிப்போகிறது.
சாப்பிடப் பழகுங்கள்
டி.வி. பார்த்தபடியோ அல்லது புத்தகம் படித்தபடியோ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் என்ன சாப்பிடுகிறோம். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று அளவு தெரியாமல் சாப்பிட்டுவிடுவோம். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியான சூழலில் சாப்பிடுவதே நிறைவைத் தரும். ஆனால், சாப்பாட்டு வேளையில் சத்தமாகப் பேசுவது, சிரிப்பது வேண்டாம். ஏனெனில், உணவானது புரையேறிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, உணர்ச்சிகரமாக எதையும் விவாதிக்காமல் இருப்பதே நல்லது.
உணவுப் பக்குவம் மற்றும் சத்துக்கள்குறித்து குறிப்புகள்
அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணிக்கு எழுந்ததும் திட உணவைச் சாப்பிட முடியாது. அதனால், அவரவர் விருப்பப்படி தண்ணீர், பால், காபி, டீ என்று திரவமாக அருந்தலாம். பின்னர் காலை எட்டு மணிக்கு முன்னரே கட்டாயம் திட உணவு சாப்பிட்டாக வேண்டும்.
இளநீர், ஜூஸ், பழம்... இவற்றில் ஏதாவது ஒன்றை காலை பத்து மணி அளவில் சாப்பிடலாம். பிற்பகல் நான்கு மணிக்குச் சுண்டல், பயிறு, பொட்டுக்கடலை, பட்டாணி, பழம், மோர் அல்லது பிஸ்கட், சாண்ட்விச்... இவற்றில் ஏதாவது ஒன்றைச் சிறுதீனியாகச் சாப்பிடலாம். வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய்ப் பலகாரங்களை அடிக்கடி சாப்பிட வேண்டாம்.
பருப்பில் உள்ள கரைகிற நார்ச் சத்தும் கொழுப்பும் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கவிடாமல் பாதுகாக்கும். அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு, பருப்பில் உள்ள புரோட்டின் சத்து மிகவும் அவசியம். ஆனால், பருப்பு சேர்த்துக்கொண்டால் வாயுத் தொல்லை. ஆகையால், சமைப்பதற்கு முன்பு பருப்பினைத் தண்ணீரில் நன்றாக ஊறவைத்துப் பயன்படுத்தினால், இந்த வாயுத் தொல்லை இருக்காது. மேலும், நமது சமையல் முறையில் (ரசம்) சேர்க்கப்படும் சீரகம், மஞ்சள், பூண்டு, பெருங்காயம் போன்றவையும் வாயுவைத் தடுப்பதோடு ஜீரண சக்தியையும் ஊக்குவிக்கும்.
மாவுச் சத்துக்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதால் மலச்சிக்கல் பிரச்னை நம்மில் பலருக்கும் இருக்கிறது. இவர்கள் சுண்டல், பீன்ஸின் வெளிப்புறத் தோல் போன்றவற்றை உணவோடு சேர்த்துக்கொண்டால், மலச்சிக்கல் வராது.
சாதாரணமாக சாப்பிடுவதற்கு முன்பு அரை டம்ளர் தண்ணீர் அருந்தலாம். சாப்பாட்டின்போது தாகம் அல்லது விக்கல் ஏற்பட்டால் மட்டுமே நீர் அருந்தவேண்டும். சாப்பிட்டு முடித்த பின்னர் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது செரிமானத்துக்கு உதவியாக இருக்கும்.
சமச்சீர் உணவு என்பது தானியம், பருப்பு, காய்கறி-பழம், பால், எண்ணெய் என ஐந்து வகையாக இருக்கின்றன. நமது தென்னிந்திய உணவு வகைகளில் இந்த ஐவகை சத்துக்களும் இருப்பதால், நம்முடைய உணவு வகைகள் சமச்சீர் உணவே!