Tuesday, September 29, 2009

ஆண்டவன் உங்கள் அருகில்


ஆண்டவன் உங்கள் அருகில்

கொள்ளைக்காரன் ஒருவன், திருடப்போன சமயத்தில் பாகவதர் ஒருவரின் கதாகாலட்சேபத்தைக் கேட்டான்.


பாகவதர், கிருஷ்ணனின் சிறப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். குட்டிக் கிருஷ்ணன், உடம்பு பூராவும் வைர நகைகளை அணிந்திருப்பது பற்றியும், விலை மதிக்க முடியாத கௌஸ்துப மணியை அவன் அணிந்திருப்பது பற்றியும் சொல்லி, அப்போது அந்த இடமே கோடி சூரிய பிரகாசமாக இருக்கும் என்றும் சொன்னார்.


கிருஷ்ணன் அணிந்திருக்கும் நகைகளைக் கொள்ளையடிக்கவேண்டும் என்று நினைத்த திருடன், அன்றைய இரவு பாகவதரைக் கடத்தி, எங்கே இருக்கிறான் கிருஷ்ணன்? என்றான். பயந்து போன அவரும் காட்டிலே நடந்து ஏழு மலைகளைத் தாண்டிச் சென்றால் அங்கே அவன் இருப்பான் என்று, பொய் சொன்னார்!



ஆனால் அதை உண்மை என்று நம்பிய கொள்ளைக்காரன், கிருஷ்ணனைக் காண வேண்டும் என்ற நினைப்பிலேயே ஏழு மலைகளைத் தாண்டினான். அவனுக்கு கிருஷ்ணரும் காட்சி தந்தார். கத்தியைக் காட்டி மிரட்டி, கிருஷ்ணரின் நகைகளைக் கவர முயன்றபோது, பகவான் மேல் அவனது கை பட்டதும் அவனுக்கு ஞானோதயம் ஏற்பட்டது. பின்னர் பகவானும் தன்னுடைய நகைகளை எல்லாம் அவனுக்கு அன்பளிப்பாகத் தந்து அனுப்பினார்.


அந்த நகைகளுடன் பாகவதரை வந்து பார்த்தான் திருடன். அவர் நம்பவே இல்லை. ஒரு கொள்ளையனுக்கு பகவான் காட்சி தருவதாவது? 1000 வருடங்கள் தவம் இருந்தாலும் காட்சி தராதவர் இவனுக்கா தருவார்? என்று நினைத்தார்.


அவரை அழைத்துக் கொண்டு காட்டுக்குக் கிளம்பினான் திருடன். அங்கும் கிருஷ்ணன் அவனுக்குக் காட்சி தந்தாரே தவிர பாகவதருக்குத் தரவில்லை. பகவானிடமே காரணம் கேட்டான் திருடன்.


பாகவதர் பக்திமான்தான். நல்லவர்தான். ஆனால் உன்னைப் போல நம்பிக்கையும் உறுதியும் அவர் உள்ளத்தில் ஏற்படவில்லையே என்று சொன்ன பகவான், சரி, நீ என் கையையும், பாகவதர் கையையும் பிடித்துக் கொள் என்றார். அவனும் அப்படியே செய்தான். என்ன அற்புதம்! பாகவதரின் அகக்கண் திறந்தது. பகவானின் காட்சியும் கிடைத்தது.


கடவுளுக்குக் கொள்ளைக்காரன், பாகவதர் என்று வேற்றுமை எல்லாம் கிடையாது. அவன் வேண்டுவது அசையாத நம்பிக்கை கொண்ட பக்தி உள்ளம். அன்பு, அன்பு, அன்பு! நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை! இதைத்தான் ஆண்டவன் விரும்புகிறான்.


அன்புடன் இருங்கள். நம்பிக்கை வையுங்கள். ஆண்டவன் உங்கள் அருகில்