Saturday, August 8, 2015

ஜீவன் எப்படி பிரம்மம் ஆகிறது?

ஜீவ பிரம்ம ஐக்கியத்தை மிகவும் எளிமையாக விளங்க வைத்த அந்த ஞானி, பாபா பாஸ்கரானந்தர். ஞான, வேதாந்த நூல்களில் ஆழம் கண்டதோடு மட்டுமல்லாமல், அவற்றில் அனுபவமும் கண்டவர் அவர்.

ஒருநாள், அவர் கங்கைக் கரையில் தன் குடிசையில் அமர்ந்தபடி, ஜபம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவருடைய பக்தர் மாதவதாஸ் என்பவர் அவரிடம் வந்து, 'குருநாதா! எனக்கொரு சந்தேகம். தாங்கள்தான் விளக்க வேண்டும்' என வேண்டினார்.

குரு விவரிக்கத் தொடங்கினார்...

'ஓர் அறையில் மேற்கூரையை இடித்துத் தள்ளினால், அறையின் ஆகாயமும் வெளியே இருக்கும் ஆகாயமும் ஒன்றாக ஆகிறதல்லவா?

அதுபோல், நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் மாயையை இடித்துத் தள்ளினால், ஜீவனும் பிரம்மமும் ஒன்றாகின்றன.

உண்மையில் அறையில் உள்ள ஆகாயமும், வெளியில் உள்ள ஆகாயமும் வேறு வேறல்ல; ஒன்றுதான். அறையில் உள்ள சுவர்களே, அந்த ஒரே ஆகாயத்தை இரண்டாகப் பிரிப்பதுபோல் காட்சியளிக்கின்றன. அதுபோல், மாயையினால்தான் ஜீவனும் பிரம்மமும் வேறு வேறாகக் காட்சியளிக்கின்றன.

தண்ணீர் நிறைந்த குடம் ஒன்று நதியில் உருண்டு ஓடி வருகிறது. அந்தக் குடம் உடைந்தவுடன், அதில் உள்ள நீரும் நதியில் உள்ள நீரும் ஒன்றாகிவிடும்!'

இவ்வாறு விவரித்துக்கொண்டு வந்த குருஜி, 'மாதவதாஸ்! இன்னும் உனக்குத் தெளிவாக விளங்கவேண்டுமென்றால், உள்ளே ஓர் இரும்புப் பெட்டி வைத்திருக்கிறேன். அதைக் கொண்டு வா!' என்றார்.

மாதவதாஸ் போய் இரும்புப் பெட்டியைக் கொண்டு வந்து குருநாதர் முன்னால் வைத்து, 'இதற்குள் என்ன இருக்கிறது?' எனக் கேட்டார்.

'ஸ்பரிச வேதிக்கல் இருக்கிறது' என்றார் குருஜி.

தூக்கிவாரிப் போட்டது மாதவதாஸுக்கு. காரணம்..?

ஸ்பரிச வேதிக்கல் பட்டால், இரும்பு தங்கமாக மாறிவிடும். இரும்புப் பெட்டிக்குள் ஸ்பரிச வேதிக்கல் இருக்கிறது என்றால், இரும்புப் பெட்டி தங்கப்பெட்டியாக மாறியிருக்க வேண்டுமே?! ஆனால், அது இரும்புப் பெட்டியாகத்தானே இருக்கிறது! இந்தச் சந்தேகம் மாதவதாஸுக்கு வந்தது.

அதுமட்டுமல்ல, அவர் ஸ்பரிச வேதிக்கல், பாரசக்கல் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தாரே தவிர, அவற்றைப் பார்த்ததில்லை. அதனால், மாதவதாஸ் தனது சந்தேகத்தைக் குருநாதரிடம் கேட்டார்.

குருநாதரோ, 'நீயே பெட்டியைத் திறந்து பார்!' என்றார்.

மாதவதாஸ் பெட்டியைத் திறந்து பார்த்தார். உள்ளே, காகிதத்தில் சுற்றப்பட்டு ஒரு ஸ்பரிச வேதிக்கல் இருந்தது. காகிதத்தை நீக்கிவிட்டு, ஸ்பரிச வேதிக்கல்லை இரும்புப் பெட்டியில் வைத்ததும், இரும்புப் பெட்டி தங்கப் பெட்டியாக மாறியது!

மாதவதாஸ் வியக்க, ''மாதவதாஸ்! ஸ்பரிச வேதிக்கல் காகிதத்தில் சுற்றப்பட்டு இருந்ததால்தான், இரும்புப் பெட்டி தங்கமாக மாறவில்லை.

அந்தக் காகிதத்தை நீக்கியதும், இரும்புப் பெட்டி தங்கமாக மாறிவிட்டது. அதுபோல, மாயை நம்மை பிரம்மம் ஆகாதபடி சுற்றிச் சூழ்ந்திருக்கிறது. அந்த மாயையை நீக்கிவிட்டால், பிரம்மம் ஆகலாம்' என முடித்தார் குருநாதர்.

அந்தக் குருநாதர் சொன்ன தகவல்களெல்லாம், கைவல்லிய நவநீதத்தில் தத்துவ விளக்கப் படலத்தின் சாரம்.