நான்கூட இதெல்லாம் சும்மா 'ஃபார்மாலிட்டி'க்காக தான் பண்றாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. ஆனா இதுக்குப் பின்னாடி இவ்வளவு விஞ்ஞானம் இருப்பது ஆச்சரியப்படவைத்தது:
வாழை இலை சாப்பாடு ஏன்?
வாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும், வாழை இலை ஒரு கிருமிநாசினியாக செயல்பட்டு, பாதிப்பின் தன்மையை குறைக்கச் செய்துவிடும். மேலும் வாழை இலையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம் உள்பட பல வகையான சத்துக்கள் நாம் உண்ணும் உணவுடன் கலந்து விடுகின்றன.
தோப்புக்கரணம் போடுவது ஏன்?
தோப்புக்கரணம் போடும்போடு இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது, மூளையில் நியூரான்களின் (மூளைச் செல்கள்) செயல்பாடுகள் அதிகரிக்கிறது. மேலும் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகின்றன. மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெறுகின்றன. 'ஆட்டிஸம்' போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தோப்புக்கரணத்தை அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்தக்காலத்தில் ஆசிரியர்கள், படிக்காத மாணவர்களை தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத்திறன் அதிகரிக்கச் செய்யும் உத்தியை அறிந்து வைத்திருந்தார்கள்.
விபூதி பூசுவதன் ஏன்?
தலைக்கு குளித்து விட்டு விபூதியை நெற்றி நிறைய பூசினால் தலையில் கோர்த்துக் கொண்டிருக்கும் தண்ணீரை விபூதி உறிஞ்சி விடும்.
விசேஷ நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?
மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி, மாவிலைகளுக்கு உண்டு. விழாக்களின் போது மக்கள் அதிகம் கூடுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. இந்த நேரத்தில் மாவிலைகள் ஒரு கிருமிநாசினி போல் செயல்பட்டு, காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் தடுத்து நிறுத்துகிறது. மேலும் 'மாவிலை' கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) வெளியிடச் செய்கின்றன.
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்?
சாப்பாட்டுத் தட்டு தரையில் இருப்பதால், நாம் இயல்பாகவே குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால், வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து, நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்கிறது. சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.