நம் வீட்டுக் கழிவறைகளில் இருக்கும் கிருமிகளைவிட, நம் கைகளில் இருக்கும் ரூபாய் நோட்டுக்களில் அதிக அளவில் கிருமிகள் இருக்கின்றன என்றால், உங்கள் ரியாக்ஷன் என்ன? கரன்சியை எப்போது தொட்டாலும் கை கழுவுங்கள் எனச் சொன்னால், அதை நீங்கள் கடைப்பிடிப்பீர்களா?
நம்புங்கள்... வாழ்க்கையில் அத்தனை வளங்களையும் வசந்தங்களையும் உருவாக்குவதற்குக் காரணமாக இருக்கும் கரன்சியில், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் 26 ஆயிரத்துக்கும் அதிகமான பாக்டீரியாக்கள் குடியிருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். கிருமிகள் அதிகம் உள்ள டாப் 10 உலக கரன்சிகளில் இந்திய கரன்சியும் இடம்பிடித்துள்ளது.
இந்திய கரன்சிகள், காகிதங்களால் செய்யப்படுவது அல்ல; பருத்தியும் லினெனும் கலந்த ஒரு பிரத்யேகத் துணியாலேயே உருவாக்கப்படுகின்றன. இதுவே கிருமிகள் குடியேற வசதியாக இருக்கிறது. மற்ற முன்னேறிய நாடுகளில் ஒரு கரன்சியின் வாழ்நாள், ஏறத்தாழ ஐந்து வருடங்கள். ஆனால், நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டுக்களின் வயது? எந்தச் சூழ்நிலையிலும் எங்கு கிடந்தாலும் மக்கள் வெறுங்கையால் உடனே எடுக்கும் ஒரே விஷயம் பணம்தான். சாலையின் ஓரத்திலோ குப்பைமேட்டின் நடுவிலோ 100 ரூபாய் கிடந்தால் 'ஐயே... அழுக்கு' என எடுக்காமல் விடுபவர்கள் யாரேனும் இருக்கிறோமா? அப்படி எடுத்ததும் கைகளைக் கழுவ வேண்டும் என்றாவது நினைக்கிறோமா? அட, அவ்வளவு ஏன்... பணத்தை இன்னும் எச்சில் பண்ணித்தானே எண்ணிக்கொண்டிருக்கி றோம். ஆனால், இவ்வளவு விஷயங்களை விவாதித்தாலே விநோதமாக எதிர்கொள்வார்கள். காரணம், இந்தியாவில் பணம் என்பது தெய்வம். அதை அசுத்தம் என்பதோ, அதோடு தீமையான விஷயங்களைச் சேர்த்து யோசிப்பதோ நம்மவர்களுக்குப் பிடிக்காது.
கரன்சியில் இருக்கும் கிருமிகள் குறித்து ஆய்வு நடத்தியிருக்கிறது இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜினோமிக்ஸ் அண்ட் இன்டகிரேட்டிவ் பயாலஜி மையம். புழக்கத்தில் அதிகம் இருக்கும் 10, 20 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டார்கள். பெட்டிக் கடைகள், சூப்பர் மார்க்கெட், தள்ளுவண்டிக் கடைகள், கெமிக்கல் கடைகள் எனப் பலதரப்பட்ட இடங்களில் இருந்து கரன்சிகளைச் சேகரித்திருக்கிறார்கள். ஆய்வின் முடிவில் நோய் பரப்பும் தன்மைகொண்ட 78 வகையான கிருமிகள், பெரும்பாலான கரன்சிகளில் இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.
எளிதில் கிழியாமல் இருப்பதற்காக இந்திய ரூபாய்கள் கொஞ்சம் கெட்டியாகவே அச்சிடப்படுகின்றன. இதனால், இதில் பாக்டீரியாக்கள் அதிக நாட்கள் வாழ முடியும் என்கின்றன ஆய்வு முடிவுகள். ஈரமாக இருக்கும் தாள்களில் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மேலும், பணம் கையாளப்படும் இடத்தை வைத்தும் கிருமிகள் உருவாகலாம். மருத்துவமனைகளில் புழங்கும் தாள்களில் அதிகக் கிருமிகள் இருக்கின்றன. அடுத்த இடம் இறைச்சிக் கடைகளுக்கு!
இது இந்தியாவில் மட்டும் இருக்கும் பிரச்னை அல்ல. ஜப்பானிலும் உண்டு. ஹிட்டாச்சி நிறுவனத்தார் கரன்சிகளைச் சுத்தம்செய்ய ஒரு கருவியைக் கண்டுபிடித்தார்கள். ஏ.டி.எம் மெஷினுக்குள்ளேயே இருக்கும் அந்தக் கருவி, கரன்சிகளை 320 டிகிரிக்கு சூடாக்கி, அதில் வாழும் கிருமிகளை அழிக்கும். ஆனால், மனிதர்கள் கைக்கு வந்ததும் கிருமிகள் மீண்டும் கரன்சியில் தொற்றிக்கொள்ளும். அதோடு அவ்வளவு சூடாக்கும்போது கரன்சிகளில் இருக்கும் ஹாலோகிராம் முத்திரை மற்றும் மசி ஆகியவை கொஞ்சம் கொஞ்சமாக அழியவும் செய்யும். இதனால் அந்தக் கருவிக்கு மற்ற நாடுகளில் வரவேற்பு இல்லை.
இதனாலேயே பல நாடுகள் பிளாஸ்டிக் நோட்டுக்களைப் புழக்கத்தில் விடத் தொடங்கியிருக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியும் இந்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் நோட்டுக்களை வெளியிட முடிவுசெய்திருக்கிறது. ஒப்பீட்டு அளவில் இது சாதாரண கரன்சிகளைவிட சுத்தமானது; வாழ்நாளும் அதிகம். வாஷிங் மெஷினில் போட்டுத் துவைத்தாலும் ஒன்றும் ஆகாத பிளாஸ்டிக் நோட்டுக்களை, சில நாடுகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இதன் உற்பத்திச் செலவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பிளாஸ்டிக் ரூபாய்களிலும் கிருமிகள் வாழும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால் உலகம் முழுக்கவே கரன்சிகள் செய்ய ஏற்ற பொருள் எது எனத் தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள்.
எந்தக் கிருமி எந்த நோயைப் பரப்பும் என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியாதபோது, நாம்தான் உஷாராக இருக்க வேண்டும். ஏனென்றால், சர்க்கரை வியாதி வந்தால் சர்க்கரையைத் தவிர்க்கலாம். ஆனால், ரூபாயைத் தவிர்க்க முடியுமா?
கிருமித் தொற்றில் இருந்து தப்புவது எப்படி?
பணத்தைக் கையாளும்போது, முடிந்த அளவுக்குக் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மிக மோசமான நிலையில் இருக்கும் கரன்சிகளைத் தொட்டால், உடனே கைகளைக் கழுவ வேண்டும்.
மிகவும் பழைய நோட்டுக்களை, உடனே வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.
அதிக அளவு பணத்தைக் கையாளும் 'கேஷியர்'கள், சேனிடைஸர் போன்ற சுத்திகரிப்பான்களை அடிக்கடி பயன்படுத்தலாம்.
ரூபாய் நோட்டுக்களை ஈரமாக்கக் கூடாது. ஒருவேளை நனைந்துவிட்டால், உடனே மிதமான சூட்டில் காயவைத்து மொடமொடப்பாக்கிக் கொள்ளுங்கள்.
ரூபாயை எண்ணும்போது, எச்சில் தொட்டு எண்ணக் கூடாது.
ரூபாய் நோட்டுக்களையோ, காயின்களையோ வாயில் வைக்கக் கூடாது!
காசு.. பணம்... துட்டு!
இங்கிலாந்து நாட்டில், பல வருடங்களுக்கு முன்பு ப்ளேக் நோய் தாக்கியது. அதில், பல நூறு பேர் உயிர் இழந்தார்கள். அந்தக் கிராமத்தில் கரன்சிகள் மூலமாகத்தான் ப்ளேக் கிருமிகள் பரவின என அறிந்து, ஊரில் புழக்கத்தில் இருந்த எல்லா நோட்டுக்களையும் வினிகர் கலந்த தண்ணீரில் நனைத்தார்கள். வினிகர், கிருமிகளை அழிக்கும் தன்மைகொண்டது.
உலக அளவில் நடந்த ஆய்வுகளின்படி, பாலஸ்தீன நாட்டு கரன்சிகளில்தான் அதிக அளவு கிருமிகள் வாழ்கின்றனவாம். அங்கு 96.25 சதவிகிதமும், கொலம்பியா கரன்சியில் 91.1 சதவிகிதமும், தென் ஆப்பிரிக்கா கரன்சியில் 90 சதவிகிதமும் நோய்க் கிருமிகள் இருக்கின்றனவாம்.
கரன்சிகளில் மட்டும் பிரச்னை அல்ல; நாணயங்களும் கிருமித் தாக்குதலுக்குத் தப்புவது இல்லை. கட்டணக் கழிப்பிடம் முதல் பிணத்தின் நெற்றிக் காசு வரை பல கைகள் மாறிவரும் நாணயங்களில், பல கிருமிகள் சிறிது காலமேனும் இருக்குமாம். ஆனால் நாம், அந்த நாணயங்களை வாயில் வைத்தெல்லாம் விளையாடுகிறோம்!
ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?
சென்னையில் இருக்கும் ரிசர்வ் வங்கித் தரப்பில் விசாரித்தபோது, இது தொடர்பான தெளிவான விளக்கம் அளிக்க எந்த வழிகாட்டுதலும் இல்லை என்பதே பதிலாகக் கிடைத்தது. ஆனால், ரூபாய் நோட்டுக்களை முறையாகப் பயன்படுத்துவது குறித்து 'க்ளீன் நோட் பாலிசி' என்ற ரிசர்வ் வங்கியின் இணையப்பக்கம் நோட்டுகளில் எழுதுவது குறித்தும், கிழியாமல் பார்த்துக்கொள்வதற்குமான நடைமுறைகளைப் பரிந்துரைக்கிறது!