'`குழந்தை நடுசாமத்துல கண்விழிச்சு `வீல் வீல்'னு அழுதுகிட்டே இருக்கான்... அவனோட அழுகைக்குக் காரணம் என்னனு கண்டுபிடிக்க முடியல டாக்டர்!''
- இந்தக் காலத்து இளம்தாய்மார்கள் அநேகம் பேர் குழந்தைகள் நல மருத்துவர்களிடம் இப்படிப் புலம்புவதைப் பார்த்திருக்கிறோம். அந்த மருத்துவரும் அவருக்குத் தெரிந்த வரையில் வைத்தியப் புலனாய்வு செய்து அழுகையை நிறுத்த முயற்சிப்பார்.
சரி... மருத்துவ வசதி குறைந்த அந்தக் காலத்தில் பச்சிளம்குழந்தைகள் இதுபோல திடீரென அழும்போது... ஏன், எதற்கு அழுகிறது என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள்? இதோ சொல்ல வருகிறார், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி நல்லம்மாள்.
''மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூ செண்டாலே...
அத்தை அடிச்சாளோ அமுதூட்டும் கையாலே...
யார் அடிச்சார் நீ அழவே...
அடிச்சாரை சொல்லியழு..!''
- தனது இரண்டு வயது கொள்ளுப்பேத்தியை மடியில் கிடத்தி தாலாட்டுப் பாடிக்கொண்டே நம்மிடம் பேசினார் நல்லம்மாள்...
''எனக்கு 70 வயசுங்க. பேரன், பேத்தி, கொள்ளுப்பேத்தினு எடுத்தாச்சுங்க. பச்சைப் புள்ளைங்க அழுதா, 'எனக்கு தூக்கம் வந்துருச்சு'னு சொல்லுதுனு அர்த்தம். தொட்டில்ல போட்டு மெதுவா தாலாட்டுப் பாடி தூங்க வைப்போமுங்க. அதுக்கும் தூங்காம அடம் பிடிச்சு அழுதா, அப்போ தூக்கத்தைத் தவிர அதுக்கு வேற ஏதோ பிரச்னைனு தெரிஞ்சுக்குவோம்ங்க.
வயித்து வலி எடுத்தாலும் குழந்தைங்க ஓயாம அழுமுங்க. ரெண்டு வயசு வரையுள்ள கொழந்தைங்கள, 'வௌக்கெண்ணெய் குழந்தை'னு கிராமத்துல சொல்ற அளவுக்கு, வௌக்கெண்ணெய்னு சொல்லப்படுற ஆமணக்கு எண்ணெய், கொழந்தைக்குப் பலவிதங்கள்ல பயன்படும்ங்க. ஓயாம அழும் கொழந்தையை காலு மேல மல்லாக்கப் படுக்க வெச்சு, மூக்கை பிடிச்சபடி, வௌக்கெண்ணயில ரெண்டு சங்கு வாயில ஊத்தி விடுவோம்ங்க. வயிறு கட்டியிருந்தா, அது இளக்கம் கொடுத்து வலி நின்னு போகும்ங்க. அப்புறம் கொழந்த சிரிச்சுக்கிட்டே, அம்மாவைப் கூப்பிடும். தாய்ப்பால் கொடுத்ததும் வயிறு நிறைஞ்சு, நிம்மதியா தூங்கிடும்ங்க.
வெயில் காலங்கள்ல புழுக்கம் அதிகம் இருந்தா, கொழந்தைங்களுக்குச் சிறுநீர்ச்சூடு (நீர்க்கடுப்பு) பிடிச்சிக்கும்ங்க. அதைப் போக்க தொப்புள்ல தேங்காய் எண்ணெய சில சொட்டுக்கள் வெக்கணும். கொஞ்ச நேரத்துல சிறுநீர் போகும். அப்படீன்னா, சூடு பிடிச்சதுதான் அதுக்குப் பிரச்னைனு அர்த்தம். அழுகையும் நின்னுடும்.
தொட்டில்ல புள்ளையைப் போட்டுட்டு கவனிக்காம போயிட்டா, கொழந்த தலையை நீட்டிப் பார்க்க முயற்சிக்கும்போது, தலைகீழா தொங்கிக் கிடக்கலாம்ங்க. அதனால சில சமயம் குடல் இறக்கம் ஏற்படலாம். இதனாலயும் கொழந்த விடாம அழலாம். இதுக்கும் விளக்கெண்ணெய்தான் வைத்தியம். கொழந்த வயித்துல சில சொட்டு விளக்கெண்ணெய் விட்டு, லேசா வலது வட்டமா சில முறையும், இடது வட்டமா சில முறையும் நீவினா குடல் இறக்கம் பழைய நிலைக்குத் திரும்பிடும்; அழுகையும் நின்னுடும்.
தரையில படுக்க வைக்கும்போது சில சமயம் கொழந்தையோட காதுக்குள்ள சின்ன எறும்பு இல்ல பூச்சி ஏதாசும் போயிடும்ங்க. இதனாலயும் கொழந்தை அழலாம். மிதமா சூடு செஞ்சு ஆறவெச்ச (தேங்காய்) எண்ணெய் சில சொட்டு அது காதுல விட்டு, சட்டுனு திருப்பி ஒருக்களிச்சி படுக்க வெச்சா, காதுக்குள்ள போன எறும்பு வெளிய வந்துடும்.
விசேஷ வீடுகளுக்கு குழந்தைகளை தூக்கிட்டுப் போனா, நலக்கம் (தொற்று) ஏற்பட்டு அழுதுகிட்டே இருக்கும்ங்க. கண் இமைகள் குத்தி, நாக்கை நீட்டி அழும்ங்கிறது இதோட அறிகுறி. இதைப் போக்க, ஒரே ஒரு மிளகை மட்டும் பொடிச்சு வெச்சுக்கிட்டு, ரெண்டு, மூணு வேளைக்குத் தாய்ப்பால்ல கலந்து சங்குல ஊத்திவிட்டா, நலக்கம் நீங்கிடும்.
இதையெல்லாம்விட, கொழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்காம புட்டிப்பால் கொடுக்குறது, பசி, அஜீரணம், தொற்றுனு அதை பல விதத்துலயும் அழ வைக்கலாம்ங்க. அதனால, பெத்த கொழந்தைக்குப் பால் கொடுங்க பொண்ணுங்களா!'' என்று முடித்த நல்லம்மாள்,
''அத்தை அடிச்சாரோ அரளிப்பூ செண்டாலே... இல்லை
மாமன் அடிச்சாரோ மயிலிறகு துண்டாலே..!'' - மறுபடியும் தாலாட்டைத் தொடங்கினார்!