அப்துற் ரகீம் எழுதிய, 'வாழ்க்கையில் வெற்றி' நூலிலிருந்து: உங்கள் லட்சிய புருஷர்களைப் பற்றிய நூல்களை படித்து, அவர்களின் வரலாறுகளை அறிந்து கொள்ளுங்கள். அவர்கள், எந்த நல்லியல்புகளால் வாழ்க்கைப் போரில் வெற்றி கண்டனர் என்பதை உணர்ந்து, அவற்றை, உங்கள் வாழ்க்கையிலும் கடைபிடியுங்கள். உங்களுடைய லட்சிய புருஷர்கள் பற்றிய நூல்கள், உங்களுக்கு உணர்ச்சி யூட்டி, ஊக்கத்தை அளிக்கும் என்பது திண்ணம். அவையே உங்களை பண்படுத்தி, உங்களுக்கு வெற்றி மாலை சூட்டும்; இது உலகறிந்த உண்மை.
பைபிளையும், டால்ஸ்டாயின் நூல்களையும் படித்ததால் தான், காந்திஜி மகாத்மாவானார். நெப்போலியனின் ராணுவ வரலாறல்லவோ முஸ்தபா கமாலை, 'அட்டாதுர்க்' ஆக்கியது. எதிர்பாரா வண்ணம், தாம் பார்த்த ஹனிபாலின் வரலாறு தான், ஐசன்ஹோவரின் வாழ்க்கையையே மாற்றியமைத்து, அவரைப் பெரும் தளபதியாக்கியது.
காரல் மார்க்சின் மூலதனமே, சமதர்ம ரஷ்யாவை உருவாக்க லெனினுக்கு காரணமாக இருந்தது. 'வெள்ளை மாளிகையின் சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும் ஆப்ரகாம் லிங்கனின் உருவப்படம் தான், நான் சோர்வுற்ற சமயங்களில் எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஊட்டியது...' என்று தியோடர் ரூஸ்வெல்ட் அடிக்கடி வியந்து கூறுவார்.
ஆகவே, நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமாயின், உங்களுடைய லட்சிய புருஷர்கள் காட்டிச் சென்ற வழியில் பின்தொடர்ந்து செல்லுங்கள். அவர்களுடைய நல்லியல்புகளை, உங்களுடைய நல்லியல்புகளாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
'உலகப் பிரபலங்கள்' நூலிலிருந்து: அமெரிக்க ஜனாதிபதி யாக இருந்த ரூஸ்வெல்ட், 1923ல் நியூயார்க்கில் உள்ள ஒரு பெரிய கம்பெனியில், முக்கிய அதிகாரியாக இருந்தார். சினிமாவுக்கு கதை எழுதி, புகழ் பெற வேண்டுமென்ற ஆசையால், ஒரு கதை எழுதி, 'பாரமவுண்ட் பிக்சர்ஸ்' என்ற பிரபல பட கம்பெனிக்கு அனுப்பினார். கதை தேர்வு செய்யும் பொறுப்பில் இருந்தவள் ஜேன் வெஸ்ட் என்ற பெண்மணி. ரூஸ்வெல்ட் அனுப்பிய கதை, திருப்தியாக இல்லாததால், திருப்பி அனுப்பி விட்டாள். இதனால், மிகுந்த வருத்தமடைந்தார் ரூஸ்வெல்ட்.
அமெரிக்க கடற்படை அதிகாரி, கேப்டன் வால்டன் என்பவரை மணந்தாள் ஜேன்வெஸ்ட். 15 ஆண்டு களுக்கு பின், இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆன ரூஸ்வெல்ட், கேப்டன் வால்டனை ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார். கேப்டனுடன் வந்திருந்த ஜேனை, ஜனாதிபதி அடையாளம் கண்டு கொண்டார்.
'உங்க கதையை ஏற்றுக் கொள்ளாமல் போனோமே என்று அச்சினிமா கம்பெனியினர் இப்போது வருந்துகின்றனர்...' என்றாள் ஜேன்.
'என் கதையை மட்டும், அப்போது அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால், இப்போது நாம் ஜனாதிபதி மாளிகையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க முடியுமா...' என்று சிரித்துக் கொண்டே கேட்டார் ரூஸ்வெல்ட்.
நம் முயற்சி, ஒரு துறையில் தோற்றுவிட்டால், அத்துடன், நம் வாழ்வு முடிந்து விடப் போவதில்லை என்ற பாடத்தை அவர் உணர்ந்திருந்ததால் தான், அடுத்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, ஜனாதிபதியாகும் அளவுக்கு உயர்ந்தார்.