இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!
நிறுவனம் ஒன்றில், பொறுப்பான அதிகாரி பதவிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுப் பதற்கான தேர்வு நடைபெற்றது. அதில் மற்ற வினாக்களுடன், வினோதமான கேள்வி ஒன்றும் கேட்கப்பட்டது.
'அது புயல் மழையுடன் கூடிய நள்ளிரவு. நீங்கள் அதிகம் போக்குவரத்து இல்லாத சாலை ஒன்றில், காரில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பாதையில் ஒரு கட்டடத்தின் ஓரத்தில், மூன்று பேர் குளிரில் நடுங்கியபடி நிற்கின்றனர். அவர்களில் ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ள வயதான பெண்மணி. மற்றவர் உங்கள் உயிரை ஒரு முறை காப்பாற்றிய மருத்துவர். மூன்றாமவர், நீங்கள் திருமணம் செய்து கொள்ளத் துடிக்கும் இளம்பெண் அல்லது ஆண். உங்களது காரில் பொருட்கள் நிறைய உள்ளதால், அவர்களில் ஒருவரை மட்டும்தான் ஏற்றிக் கொண்டு போக முடியும். இந்த மூவரில் யாருக்கு உதவி செய்வீர்கள்?'
'இதில் முடிவெடுப்பதில் என்ன கஷ்டம்? உடல்நிலை சரியில்லாத, வயதான பெண்மணியைத்தான் காரில் ஏற்றிச் செல்லவேண்டும்' என்று சிலர் நினைக்கலாம்.
'மோசமாக நோய்வாய்ப்பட்டுள்ள அந்தப் பெண்மணியை கூட்டிப் போய் மருத்துவ உதவி அளித்தாலும், அவள் பிழைக்காமல் போகலாம். ஆனால், உயிரைக் காப்பாற்றி பேருதவி புரிந்த மருத்துவருக்கு இது போன்ற தருணத்தில் உதவி செய்வது என்பது, நம் கடமையும் கைமாறும் ஆகும். ஆகவே, அவரைத்தான் காரில் ஏற்றிச் செல்ல வேண்டும்' என்று சொல்பவர்களும் இருக்கலாம்.
'மருத்துவருக்கு இன்னும் எவ்வளவோ விதங்களில் நம் நன்றியை தெரியப்படுத்தலாம். ஆனால், நாம் உயிருக்கு உயிராக காதலிக்கும் அந்த இளம்பெண் அல்லது ஆணுக்கு இதுபோன்ற தருணத்தில் உதவி செய்யத் தவறினால், அவரை நாம் எப்போதும் அடைய முடியாமலே போய் விடலாம். ஆகவே, காரில் அழைத்துச் செல்லப்பட வேண்டியவர் எதிர்கால வாழ்க்கைத் துணைதான்' என்று கருதுபவர்களும் இருக்கலாம்.
ஆனால், தேர்வு எழுதிய முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்களில், அந்தப் பதவிக்காக இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அளித்த விடை இதுதான்
'நான் இறங்கிக் கொண்டு, காரை மருத்துவரிடம் ஒப்படைத்து, அவரிடம் நோய்வாய்ப்பட்டுள்ள பெண்மணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லச் சொல்வேன். வேறு வாகனமோ அல்லது உதவியோ வரும் வரை எனது வாழ்க்கைத் துணையா கப் போகிறவருடன் அங்கு பொறுமையாகக் காத் திருப்பேன்!'
இந்த பதில், இதன் அழகுக்காக மட்டுமல்ல; இதில் உள்ள ஆழ்ந்த கருத்துக்காகவும் இளைஞர்களால் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும்.
புயல்- மழையுடன் கூடிய நள்ளிரவில், அதிகப் போக்குவரத்து இல்லாத அந்தப் பகுதியில் உங்களிடம் இருக்கும் கார், மிகவும் முக்கியமான ஒரு சாதனம். ஆனால், அதை நீங்கள் விட்டுக் கொடுக்கும் வரை உங்களுக்கும் சரி, மற்றவருக்கும் சரி... அதன் முழுப் பலன் கிடைக்காது.
வானவெளியில் கம்பீரமாக வட்டமிடும் கழுகைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? பறவை இனத்தில் நீண்ட நாட்கள் உயிர் வாழக்கூடிய பறவை கழுகு தான். அது, சுமார் எழுபது ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது. ஆனால், அவ்வளவு ஆண்டுகள் நல்ல வலிமையுடன் இருக்க வேண்டுமானால், கழுகு கடும் சோதனை ஒன்றுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளவேண்டும்.
கழுகுக்குச் சுமார் நாற்பது வயதாகும்போது, அதன் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அதன் நீண்ட- கூரிய நகங்கள், பலமிழந்து இரைகளைச் சரியாகப் பற்றிக் கொள்ள இயலாதவையாக மாறி விடுகின்றன. பலம் பொருந்திய அலகு, மிகவும் வளைந்து போய், இரையைக் கிழித்து உண்ணும் திறமையை இழந்து விடும். பரந்து விரிந்திருக்கும் அடர்த்தியான றெக்கை கள், தடித்துப்போய், உடலுடன் ஒட்டிக் கொண்டு, எங்கும் பறந்து போய் இரை தேட இயலாத நிலையை உருவாக்கி விடுகின்றன.
இந்த நிலையில் கழுகுக்கு இரண்டே வழிகள்தான் உண்டு. ஒன்று, இறந்து போவது. மற்றொன்று, தன் உடலிலேயே ஆச்சரியமான பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது.
கழுகு சாவதில்லை. மாறாக, பெரும் வேதனையை சகித்துக் கொள்ளத் தக்க இரண்டாவது வழிமுறையை, சுமார் ஐந்து மாதங்கள் வரை மேற் கொள்கிறது கழுகு.
உயர்ந்த மலைப்பகுதியில் இருக்கும் தனது கூட்டுக்கு அது திரும்புகிறது. ஒரு மலைப்பாறை மேல் அமர்ந்து, தன் அலகைப் பாறை மீது மீண்டும் மீண்டும் மோதி, அதை மெதுவாக வெளியே இழுத்துப் போடுகிறது. அந்த இடத்தில் புது அலகு வளரும் வரை பொறுமையாகக் காத்திருக்கிறது. பலமான அலகு வந்ததும், அதன் உதவியால், தனது கால் நகங்களையும் மெதுவாகப் பிய்த்து எறிகிறது. புது நகங்கள் வரும் வரை மீண்டும் காத்திருக்கிறது. கூரிய- வளைந்த நகங்கள் வளர்ந்ததும், அவற்றாலும், அலகாலும் தன் இறகுகளையும் பிய்த்து எறிகிறது. அடர்ந்த, பெரிய, கறுத்த இறக்கைகள் மீண்டும் வளர்கின்றன.
இப்படி பெரும் முயற்சிக்குப் பின் மறுபிறவி எடுக்கும் கழுகு, தனது எல்லா திறன்களும் முழுமையாகக் கைவரப்பட்டு, மேலும் சுமார் முப்பது ஆண்டுகள் வரை பெருவாழ்வு வாழ்கிறது.
இங்கு சொல்லப்பட்டவற்றில் இருந்து இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
பலவற்றைப் பெறுவதற்காக வாழ்க்கையில் நாம் சிலவற்றை தியாகம் செய்துதான் தீர வேண்டும் என்பதுதான் அது.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்?
பயிர்களை நாசமாக்கி, மக்களுக்குத் தொல்லை தரும் குரங்குகளைப் பிடிக்க வேடிக்கையான வழி முறை ஒன்று கையாளப்படுகிறது.
பெட்டிகள் பலவற்றை தயாரித்து, அவற்றுள் குரங்குகளுக்கு மிகவும் பிடித்தமான கொட்டைகள், தின்பண்டங்கள், வாசனையான பழங்கள் ஆகியவற்றை வைத்து விடுவர்.
பெட்டிகளில் குரங்குகளின் கை மட்டுமே நுழையக் கூடிய அளவில் சிறிய ஓட்டைகள் போடப் பட்டிருக்கும்.
பெட்டியில் இருந்து வெளிப் படும் வாசனையால் கவரப்பட்டு, அதிலுள்ள துவாரத்தில் குரங்கு தன் கையை குவித்து நுழைத்து, உள்ளே இருக்கும் தின்பண்டங்களை உள்ளங்கையில் அள்ளிக் கொள்ளும். இதனால் அதன் கை பெருத்து விடும். பெட்டியின் சிறிய துவாரத்தின் வழியே கையை வெளியே எடுக்க குரங்கு முயலும்போது, கை வெளியே வர இயலாமல் உள்ளேயே சிக்கிக் கொள்ளும்.
இப்போது குரங்கின் முன்னால் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, உள்ளங்கையில் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களை தியாகம் செய்து அங்கேயே விட்டு விடுவது. அப்படிச் செய்தால், ஓட்டை வழியாக கையை சுலபமாக வெளியே எடுத்துவிட முடியும். சுதந்திரமாக ஓடி விடவும் முடியும்.
மற்றொரு வழி, தின்பண்டங்களை விடாமல் பற்றிக் கொண்டே இருப்பது. இந்த நிலையில் குரங்கு, அது எவ்வளவு முயன்றாலும் பெட்டியில் இருந்து கையை வெளியே எடுக்க முடியாது. ஆனால் அப்படி சிக்கிக் கொண்ட குரங்குகள், மற்றவர்களிடம் எளிதாகப் பிடிபட்டு விடும். தப்பித்துச் செல்ல வழி இருந்தும், குரங்குகள் பண்டங்களை விடாமல் பற்றிக் கொண்டிருந்து, பிறரிடம் மாட்டுவது என்பது வழக்கமாக நடப்பதாகும்.
கையில் பிடித்திருக்கும் சில கொட்டைகளுக்காகத் தனது சுதந்திரத்தையும், சில நேரங்களில் உயிரையும் கூட இழக்கும் முட்டாள் குரங்குகளைப் போல, விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் முட்டாள்தனமான எண்ணங்களால், நாம் நமது எதிர்காலத்தையே இழந்து விடுகிறோம்.
ஓ.., என்னால் இது முடியாது!
நான் அதிர்ஷ்டம் இல்லாதவன்!
இதற்கெல்லாம் எனக்கு வயது போதாது!
இந்த உடல் குறையை வைத்துக் கொண்டு என்னால் என்ன செய்ய முடியும்?
எனக்கு படிப்பு போதாது, பணம் போதாது, அழகு போதாது, நேரம் போதாது.
ஓ.. நான் மட்டும் அவனைப் போல பணக்கார வீட்டில் பிறந்திருந்தால்...?
இதுபோன்ற உபயோகம் இல்லாத எண்ணங்களை வளர்த்துக் கொண்டும், அவற்றை விடாமல் பிடித்துக் கொண்டும் இருக்கிறோம். நமது சக்தியையும், செயல் திறனையும், நம்மையே உணர விடாமல் மறைக்கும் இது போன்ற எதிர்மறை எண்ணங்கள்தான் இளைஞர்களின் நல்வாழ்வுக்கான எதிரிகள்.
முன்னேற விடாமல் தடுக்கும் சுமைகளைத் தியாகம் செய்து, நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.
எதிர்காலம் உங்களுக்காக அரியாசனத்தோடு காத்திருக்கிறது.