Friday, July 17, 2015

தண்ணீர் குடிக்க மறக்கிறீர்களா? நினைவூட்ட ஒரு செயலி!

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் நாம் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்வது எப்படி?

வேலை பளு, மறதி என பல காரணங்களினால் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் நிலையை எப்படி தவிர்ப்பது?

இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருந்தால், அதற்கான பதில் அழகான செயலி வடிவில் இருக்கிறது தெரியுமா? ஆம், மறக்காமல் தண்ணீர் குடிக்க நினைவூட்டுவதற்காக என்றே 'வாட்டர் யுவர் பாடி' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இந்த செயலி நீங்கள் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

இதை கச்சிதமாக செய்ய, முதலில் இந்த செயலியில் உங்கள் உடல் எடையை சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் உங்களுக்கு தேவையான தண்ணீர் அளவை அது தீர்மானித்துக்கொள்கிறது. அடுத்ததாக செயலியில் உள்ள தண்ணீர் பாட்டில் மற்றும் கிளாஸ்களின் அளவை தேர்வு செய்ய வேண்டும். இந்த அளவை கொண்டு நீங்கள் ஒவ்வொரு வேளையும் பருக வேண்டிய தண்ணீரின் அளவை செயலி புரிந்து கொண்டு, அதற்கான நேரம் வந்ததும் சரியாக நினைவூட்டும்.

செயலியில் தோன்றும் கிளாஸ் அளவு பொருத்தமாக இல்லை என்றால், உங்களிடம் உள்ள கிளாஸ் அளவை குறிப்பிடுவதற்கான வசதியும் இருக்கிறது. கிளாஸ் அளவை மட்டும் அல்லாமல், எப்போது தண்ணீர் குடிக்க துவங்குகிறீர்கள், நாள் முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட வேண்டுமா போன்ற விவரங்களையும் நாமே செட் செய்து கொள்ளலாம்.

காலையில் 10 மணிக்கு முதல் கிளாஸ் தண்ணீர் குடித்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அதன் பிறகு உங்களுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ இந்த செயலி அடுத்ததாக எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைவூட்டும். கோடை காலம் என்றால் அடிக்கடி தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும் என்பதால் தண்ணீர் குடிக்க மறக்க மாட்டோம். ஆனால் மற்ற காலங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இந்த செயலியை ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் அது உற்ற நண்பன் போல சரியான நேரங்களில் நினைவூட்டிக்கொண்டே இருக்கும். தண்ணீர் குடிப்பது இயல்பான தேவையாக இருந்தாலும் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது என்பது ஒரு பிரச்னையாகவே இருக்கிறது. சீரான அளவு தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தும் நிலையில், இதற்காக என்றே ஒரு செயலி இருப்பது நல்ல விஷயம்தான். தண்ணீர் குடிப்பதை மறக்காமல் இருக்க உதவுவதோடு அதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது இந்த செயலி.

அத்துடன் தண்ணீர் அளவு பற்றிய விவரங்களையும் வரைபட அறிக்கையாக தந்து அசத்துகிறது. எனவே பிட்ன்ஸ் செயலிகள் பட்டியலில் இந்த செயலியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.northpark.drinkwater&hl=en