நம் முன்னோர், அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து கடைபிடித்த அரிய விஷயங்களை எல்லாம், 'இது செய், உனக்கு நல்லது; இதை செய்யாதே, உனக்கு கெடுதல்' என்று சொல்லியிருக்கின்றனர். இப்படி அவர்கள் சொல்லியிருப்பது, எதிர் கால சந்ததியரின் உடல் நலம், மன நலம் கருதி தான்.
நம் முன்னோர் திறனை வியந்து, அயல் நாட்டினர் வியக்கின்றனர். ஆனால் நாம், பழைய சம்பிரதாயங்களை, மூடப் பழக்கங்கள் என்று உதறி தள்ளி, முன்னேறி விட்டோம் என, மார்தட்டிக் கொள்கிறோம். சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் வாழ்க்கையை பிரச்னையின்றி எதிர் கொள்ள உதவும் எளிய வழிமுறைகள். இன்றைய இளைய சமுதாயம், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.
நம் முன்னோர் திறனை வியந்து, அயல் நாட்டினர் வியக்கின்றனர். ஆனால் நாம், பழைய சம்பிரதாயங்களை, மூடப் பழக்கங்கள் என்று உதறி தள்ளி, முன்னேறி விட்டோம் என, மார்தட்டிக் கொள்கிறோம். சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் வாழ்க்கையை பிரச்னையின்றி எதிர் கொள்ள உதவும் எளிய வழிமுறைகள். இன்றைய இளைய சமுதாயம், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.
'ஒருவர் கடைபிடிக்கிறாரே என்பதற்காக, நானும் ஒன்றை கடைபிடிக்க முடியாது' என்று இந்த சம்பிரதாயங்களை, மொத்தமாகப் புறந்தள்ளி விட்டு, வாழ்க்கையை புதிதாக தன் அறிவு சொல்கிறபடி அல்லது தன் வசதிப்படி ஆரம்பிக்கின்றனர் இன்று.
தற்சமயம் நாம் யாருமே, நம் வீட்டில், எந்த சடங்கையும், பண்டிகையையும், முறையாக தெரிந்து புரிந்து செய்வதில், ஆர்வம் காட்டுவது இல்லை. வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சடங்கையும், அதற்கான காரணங்களையும் பற்றித் தெரிந்து கொள்ளாமல், காரியங்களை மட்டுமே நாம் செய்யத் துவங்கும்போது தான், பிரச்னையையும், மற்றவர்களின் விமர்சனங்களையும் நாம் சந்திக்க நேரிடுகிறது. முக்கியமாக, அந்த சடங்குகளால் நமக்கு என்ன நல்லது, நம் குடும்பத்திற்கு என்ன பலன் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்துவது சரியில்லை.
தமிழ் சமுதாயம் என்பது தாய்வழிச் சமூகமாகவே முன்னிலை படுத்தப்படுகிறது. அதனால், பெண்களின் மனம் கோணாமல் நடந்து கொண்டால் தான், வீடும், வாழ்க்கையும் சிறந்து விளங்கும் என்பது அக்கறையோடு வழி நடத்தப்படுகிறது. எந்த ஒரு சடங்கும், பெண் என்பவளின் நோக்கிலேயே எடுத்து செய்யப்படுகிறது.
காரணம் உண்டு
திருமணத்தின் போது தாலி கட்டுவது அவசியமா? கட்டிய தாலியை அறுத்து எறிவது தான் சுதந்திரம் என்றெல்லாம் தர்க்கம் பண்ணி, நம் முன்னோரின் பழக்க வழக்கங்களையும், சம்பிரதாயங்களையும் துாக்கி குப்பையில் போட முயலும் இந்த காலகட்டத்தில், தேவையான, தெரிந்து கொள்ள வேண்டிய பல சங்கதிகள் உண்டு. திருமணம் என்பது ஏதோ வேலையில்லாதவர்களின் சடங்கு இல்லை, நினைத்தவுடன் தாலியை கழற்றி துாக்கி எறிய; திருமணத்தின் போது செய்யும் ஒவ்வொரு சடங்கிற்கும், ஒரு காரண காரியம் உண்டு.
முதல் சடங்கான, பூவரசன் மரக்கிளை, ஒதியன் மரக்கிளை நடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது நம் முன்னோரின் வாழ்க்கை தத்துவம். அந்த மரக் கிளைகளை நட்டு, தண்ணீர் விட்டு வளர்க்கணும் என்பதே, வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் திட்டம் தான்.
மாமன் பட்டம், நாத்தி பட்டம் கட்டுவதும், உறவுகள் தொடரும்; பொன் பொருள் சேரும்; வீட்டை லட்சுமிகரமாக வைத்துக் கொள் என்று பெண்ணிற்கு கூறுவது போல் தான்.
நீர் நிறைந்த பானையில் மோதிரம், எழுத்தாணி, பாலாடை என, சென்டிமென்டாக போட்டு எடுப்பதும், காரண காரியத்துடன் தான். திருமண உறவில் திடீரென்று, ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தொட்டுக் கொள்ள வேண்டிய தயக்கத்தை தளர்த்தி கொள்ள, இது போன்ற சடங்குகள் உதவும். இதே போன்றது தான், மறு வீடு போவதும், திருமணம் முடிந்த மூன்றாவது நாள் துவங்கி, தொடர்ந்து விருந்துக்குப் போவதும், ஒரு காரணத்தோடு தான்.
பிறந்த நாள் முதல், வீட்டிலேயே இருந்த மகள் வேறொரு வீட்டில் வசிக்கத் துவங்கும்போது, தனிமை, வெறுப்புணர்வாக மாறுவதற்கான சூழ்நிலைகள் அதிகம்.
அந்த மன அழுத்தம் ஏற்படக் கூடாது என்பதற்காக கடைபிடிக்கப்படும் சடங்கு இது. இன்றைய பரபரப்பான உலகில், இந்த சடங்கு, தேவையற்ற ஒன்றாக பார்க்கப்படுகிறது. இளைய மனங்கள் இணைந்த ஒரு பக்குவமான உறவுக்கும், ஆழ்ந்த குடும்ப உறவுகளின் நேசத்தைப் புரிந்து கொள்ளவும் அவசியமானவை, இது போன்ற சடங்குகள்.
திருமணமான ஓர் ஆண்டுக்குள், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் இளைய தலைமுறையினர், தமிழகத்தில் தான் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு.இதை தவிர்க்கவே, ஊரைக் கூட்டி திருமணம், சடங்கு, மரக்கிளை நடுவது, தாலி கட்டுவது, மறு வீடு, ஆடி, தலை தீபாவளி, பொங்கல் என்று கொண்டாடுவது ஆகிய சடங்குகளும், சம்பிரதாயங்களும்.
தாலி பெருக்கிப் போடுதல், தாலி பிரித்துக் கூட்டல் என்ற பெயரில் சடங்கு ஒன்றை, பெண் வீட்டார், விழா போன்றே நடத்துவர். பிறந்த வீட்டு உறவு, சிறப்பாக தொடரும் என்பதை உணர்த்தும் சடங்கு இது. பல ஆண்டு ஆகி இருந்தாலும், தாய், தந்தை இல்லையென்றாலும், சகோதரர்கள் மூலம் தொடர்ந்து வரும் சீர்வரிசைக்கென தனிச் சிறப்பு உண்டு. பிறந்த வீட்டோடான சொந்தம், பந்தம் இப்படி தொடர்ந்தபடி இருக்கும் என்பதற்கான துணிவை, அது வழங்கும்.
'நீ புகுந்த வீட்டுக்கு சென்றாலும், பிறந்த வீட்டு வருமானத்தில் உனக்கும் பங்கு உண்டு' என்பதை உணர்த்தும் உயரிய சாத்திரம் இது.
வாழ்வோடு இணைந்து...
கருவுற்றால், ஐந்தாம் மாத மருந்து, ஏழு, ஒன்பதாம் மாத வளைகாப்பு துவங்கி, பிரசவ செலவு வரை பெண் வீட்டாரே ஏற்பது, 'உன் சுமை, உன் வலியெல்லாம் நீ தாங்கிட, எங்கள் துணை என்றும் உண்டு' என்று உணர்த்துவதற்காக தான்.
பெரிய பெண்கள், வளையல் போடும் விழாவுக்கே ஒரு அர்த்தம் உண்டு. 'பிரசவத்தின் போது பயம் தேவையில்லை; எங்களை பார்... நாங்களும் பிள்ளை பெற்றவர்கள் தான்' என்று பெண்ணுக்கு புரிய வைத்து, பயம் அகற்றவே இந்த வளை அடுக்குதல் விழா.இப்படி நம் முன்னோர், ஒவ்வொரு
சடங்கையும், நம் வாழ்வியல் தத்துவத்தோடு இணைத்து, பின்னிப் பிணைத்து ஏற்படுத்தி வைத்துள்ளனர். நடுவில் புகுந்து, 'இது தப்பு, இப்படி செய்யலாமா, இது பெண்ணை அடிமைப்படுத்தும் சடங்கு, பெண்களே ஏன் அடிமையாக இருக்கின்றீர்கள்?' என்றெல்லாம் பேசுவது சரியல்ல என்பது, நாயகியருக்கு புரியும் தானே!