'நீ ரெண்டரை வயசுக் கொழந்தையா இருந்தப்ப கும்பகோணத்திலேர்ந்து திருவிசநல்லூர், சுவாமி மலைன்னு ஒன்னை நடத்தியே கூட்டிட்டுப் போய் வந்திருக்கேன். அந்தப் பாவம்தான் என்னை இப்படிப் படுத்தி எடுக்குதோ என்னவோ..' என்று, ஆஸ்பத்திரிக்கட்டிலில் வலியால் உண்டான முகச்சுழிவுடன் படுத்திருந்த, அம்மா சீரியஸாகவும், விளையாட்டாகவும் கூறினாள்.
'சும்ம்மாரும்மா...' என்று அதட்டினேன்.
அவள் சொன்னது உண்மை. எனது பள்ளி நாட்களில் அம்மா என்னை சினிமா, பீச் என்று அழைத்துச் சென்றதைவிட, கோயில்களுக்கு கூட்டிக்கொண்டு போனதுதான் அதிகம்.
கும்பகோணத்தில் கும்பேஸ்வரன், நாகேஸ்வரன், உப்பிலியப்பன், சக்ரபாணி, சாரங்கபாணி, ராமஸ்வாமி. சென்னையில் மயிலை கபாலி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவேட்டீஸ்வரன், பாண்டுரங்கன், தான்தோன்றி அம்மன், வடபழநி முருகன், கந்தகோட்டம் கந்தஸ்வாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரன், மயிலை ஆஞ்சநேயன், திருவேற்காடு கருமாரி, கூடுதலாக திருத்தணி முருகன், திருப்பதி வேங்கடாசலபதி, கோவிந்தராஜப்பெருமாள், பத்மாவதித் தாயார் என்று தான் அறிந்த கோயில்களுக்கெல்லாம் என்னைக் கைப்பிடித்துக் கூட்டிப் போயிருந்தாள். அதனாலேயே அந்த வயதில் சாலையில் எந்தக் கோயிலைக் கடக்க நேர்ந்தாலும், சந்நிதி நோக்கி நின்று முகவாயை விரல்களால் தொட்டுக் கும்பிடுவேன்.
அம்மா எத்தனைக் கோயில்களில் எத்தனைக் கடவுள்களைக் கும்பிட்டிருக்கிறாள்! அந்தக் கடவுளர்கள் மனசு வைத்தாலே அவளுக்குச் சரியாகிவிடுமே என்று தோன்றியது. அத்தனை தெய்வங்களின் பாதங்களிலும் மானசிகமாக விழுந்தேன்.
'எப்படியாவது அம்மாவைக் குணப்படுத்தி விடுங்கள் சாமிகளா..' என்று பிள்ளையாரிடம் நூற்று எட்டுத்தேங்காய், வேங்கடாசலபதியிடம் மொட்டை, குருவாயூரப்பனிடம் எடைக்கு எடை துலாபார இளநீர், கருமாரியம்மனிடம் மாவிளக்கு, பழநி முருகனிடம் பாதயாத்திரை, ஆஞ்சநேயரிடம் வடைமாலை என்று நேர்ந்துகொண்டேன்.
நம்பிக்கை பிறந்தது. கொஞ்சம் உற்சாகமாய்க் கூட உணர்ந்தேன். அம்மா பழையபடி முற்றத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்து பாத்திரம் தேய்ப்பதையும், துணி துவைப்பதையும், வீடு கழுவுவதையும் மனக்கண்ணில் பார்த்து மகிழ்ந்தேன்.
அப்பாவோ ஜோசியர் ஜோசியராக அம்மாவின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அலைந்தார்.
ஒரு மலையாள ஜோதிடர் அம்மாவின் ஜாதகத்தை அலசிப் பார்த்துவிட்டு, 'இது ஏவல்.. செய்வினை. அதான் ஒன் பார்யாளைப் போட்டு இந்தப் பாடாப்படுத்தறது. ஒரு எலுமிச்சம்பழத்தை மந்திரிச்சித் தரேன்... அதை நாலா வெட்டி ஒன் ஒய்ஃப் அட்மிட் ஆயிருக்கிற ஆஸ்பத்திரி வாசல்ல நின்னு நாலு திசையிலும் வீசி எறிஞ்சிட்டுத் திரும்பிப் பாக்காம உள்ள போய்டு. அப்புறம், குணமாகலன்னா என் சிண்டைப் பிடிச்சி ஏண்டான்னு கேளு'' என்று அடித்துச் சொல்லி, ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்திருந்தார்.
பயத்துடனும், பக்தியுடனும் அந்தப் பழத்தை எடுத்து வந்து அப்பா ஆஸ்பத்திரி வாசலில் பிள்ளையார் கோயிலுக்கு எதிரில் நின்று நான்கு துண்டங்களாக வெட்டி வீசினார். ஆனால், அடுத்த வாரத்தின் அதிகாலையில் அம்மா செத்துப் போனாள். எல்லா தெய்வங்களும் என் வேண்டுதல்களை கருணையின்றி நிராகரித்துவிட்டன. அப்பா வீசி எறிந்த எலுமிச்சைத் துண்டங்களாவது ஏவல் செய்வினை களை விரட்டி அம்மாவைக் காப்பாற்றி இருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.
அம்மாவை எரித்துவிட்டு வந்த நான்காம் நாள். அப்பா வீட்டில் இல்லை. பூஜையறையில் இருந்த வேங்கடாசலபதியின் படத்தையே முறைத்தபடி உட்கார்ந்திருந்தேன். திடீரென்று ஆவேசமும், ஆத்திரமும் என்னை ஆக்கிரமித்தன.
'அம்மாவைக் கொன்னுட்டியேடா.. பாவி..' என்று கத்தியபடியே எழுந்து போய் அந்தப் படத்தை எடுத்துத் தரையில் வீசினேன். கண்ணாடிச் சுக்கல்கள் சிதறின. வேங்கடாசலபதி என் முகம் பார்க்கப் பிடிக்காமல் தரையில் கவிழ்ந்து அடித்து விழுந்தார்.
வெளியே வந்தேன். பார்த்தால், வீட்டு வாசலில் அப்பா நின்று கொண்டு இன்னோர் எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொண்டிருந்தார்.
'என்னப்பா இது?' என்று கோபக்குரலில் முறைத்தபடி கேட்டேன்.
பரிதாபமாகப் பார்த்தார். 'ஏவலும், செய்வினை யும் ரொம்பத் தீவிரமா இருக்காண்டா.. அதான் அம்மாவை பலி வாங்கிடிச்சாம். இப்ப இன்னொரு பழத்தை அதே மாதிரி வெட்டி வீசாம இருந்தா அது என்னையும் அடிச்சிருமாம். ஜோசியர் சொன்னாரு..' என்றார் முனகலாக.
அவர் கையில் இருந்த எலுமிச்சம்பழத்தைப் பிடுங்கினேன். குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தேன்.
'அறிவிருக்காப்பா ஒனக்கு...? ஜோசியன் சொன்னானாம் இவரு கேக்கறாராம். முதல்ல சொன்னது நெஜமா இருந்திருந்தா இன்னேரம் ஒம் பொண்டாட்டி இந்த வீட்ல உயிரோட இருந்திருக் கணுமே... அப்படி நடந்ததா? இல்லையே! இன்னொரு தடவை இந்த மாதிரி எலுமிச்சம் பழத்தோட வந்தே.. ரொம்பப் பொல்லாதவனாய்டுவேன்' என்று சுட்டு விரலை ஆட்டி அவரை மிரட்டினேன்.
அதன் பிறகு எந்தக் கோயிலிலும் நுழையவில்லை. எந்தக் கடவுளையும் கும்பிடவில்லை.
வருடங்கள் கழிந்தன. வெகு தற்செயலாக ரமண மகரிஷியைப் பற்றி படிக்க நேர்ந்தது. அவரது சரிதத்தின் இறுதியில் அவருக்கு முழங்கையில் புற்று வைத்து அது ஆறாமல் இருந்து அதன் காரணமாகவே அவர் மகாசமாதி அடைந்ததைப் படித்தேன். ஆச்சரியமாய் இருந்தது.
கொல்கத்தா ராமகிருஷ்ணரையும் தொண்டையில் புற்றுநோய் தாக்கி அவருடைய உடலுக்கு முடிவு வந்தது என்று தெரிந்துகொண்டேன். விசிறி சாமியாருக்கும் புற்று நோய். மகாசமாதி.
என்ன இது? விவேகானந்தருக்குக் கடவுளைக்காட்டிய ராமகிருஷ்ணருக்குப் புற்று நோயா? ரமணருக்கும், யோகி ராம்சுரத் குமாருக்கும் அதுவேவா? எதனால் இப்படி?
சத்குரு ஜக்கிவாசுதேவிடம்தான் என்னுடைய கேள்விக்கு விடை கிடைத்தது.
'ரமண மகரிஷிக்கும், ராமகிருஷ்ணருக்கும், யோகி ராம்சுரத்குமாருக்கும் இதுவே இறுதிப் பிறவி. முக்தி எய்தும் நிலையில் இருக்கும் பிறவிகளுக்கு, கர்ம வினைகள் எதுவுமே மிச்சம் இருக்கக்கூடாது. ஒருவன் சில கர்மவினைகளை தனது உடலை வருத்தித்தான் கரைக்கமுடியும். அதனால்தான் அவர்களுக்கெல்லாம் புற்று நோய்..'
என் நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்த மாதிரி இருந்தது. அப்படியானால்... அப்படியானால்... அம்மா முக்தி அடைந்திருக் கிறாளா? இந்நேரம் சொர்க்க சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறாளோ?! அதனால்தான் அவள் உடலால் இவ்வளவு துயரங்களை, வலிகளை, வேதனைகளை அனுபவித்தாளோ..?
கடவுளே உனக்கு அவள் மீது அவ்வளவு கருணையா? அவளை உனக்கருகில் உட்கார்த்தி வைத்து அழகு பார்க்கத்தான் அவளை அந்தப் பாடுபடுத்தி அவளது கர்மவினைகளைக் கரைத்தாயா?
'சத்குரு... நான் எனது கர்மவினை களைக் கரைக்கவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்..?'
'ஆன்மிகம் பேண்..' என்றார்.
'ஆன்மிகம் என்றால்?'
'பணிவுடன் இரு. பார்ப்பவற்றை எல்லாம் வணங்கு. அகங்காரம் அகலும். அகங்காரம் அகன்றால் இறை நிலை எய்துவதற்கான வாய்ப்பு உன்னை வந்தடையும். தியானம் செய். கர்மம் கரையும். செய்யும் செயல்களினால் ஏற்படும் கர்ம வினைகளும் உன்னைப் பற்றாது. அன்பாக இரு. புத்தனும், ரமணரும், அப்படி இருந்துதான் இன்றைக்கு இறைவனாகவே உணரப்படு கிறார்கள்'
சொற்கள் புரிந்தன. ஆனால் உணரவேண்டுமே..
ஒருவருடைய அனுபவம் இருவருக்கும் பாடமானது.
பணிவுடன் இருக்க முயல்கிறோம். யானையை, குதிரையை, நாயை, மரத்தை, செடியை, சூரியனை, சந்திரனை, முருகனை, சிவனை, விஷ்ணுவைஅனைத்தையும் வணங்குகிறோம். உயிர்களிடத்தில் அன்புடன் இருக்கப் பார்க்கிறோம். அகங்காரத்தைக் களைய முயற்சி செய்கிறோம். தினம் தியானம் பயில்கிறோம்.
நாங்கள் அறிந்த ஆன்மிகத்தை கவனத்துடன் நடைமுறைப்படுத்தப் பார்க்கிறோம்.