Saturday, May 16, 2015

எச்சரிகை - மொபைல் போனால் புதுவகை பிரச்னை!

மொபைல் போனால் புதுவகை பிரச்னை!

என் தோழியின் மொபைல் போனுக்கு, ஒரு மர்ம நபர் போன் செய்து, 'உங்க புருஷன் உங்கள நல்லா பாத்துக்கலன்னா கவலைப்படாதீங்க; நான் உங்கள நல்லா பாத்துக்கிறேன்...' என்றதுடன், தோழியின் வீட்டில் நடந்த சில விஷயங்களை கூறி உள்ளான். தன் வீட்டு விஷயம், தன்னையும், தன் பெற்றோரையும் தவிர, வேறு எவருக்கும் தெரியாத நிலையில், குழம்பிப் போனாள்
 
தோழி. ஒரு கட்டத்தில், மர்ம நபரிடம் இருந்து டார்ச்சர் அதிகமாகவே, வீட்டில் கூறி, போலீசாரிடம் புகார் கொடுத்து, விசாரித்த போதுதான் விஷயம் தெரிந்தது.

அந்த மர்ம நபர், தோழியின் அப்பாவுடன் வேலை பார்க்கும் சக ஊழியரின் மகன் என்பது!

ஒரு நாள், தோழி, தன் கணவர் வீட்டில் நடந்த பிரச்னையை, தன் அப்பாவிடம் மொபைல் போனில் கூறி கொண்டு இருந்த போது, அவள் அப்பாவின் மொபைலில், பணம் தீர்த்து விட்டதால், அவசரத்திற்கு சக ஊழியரின் மொபைல் போனிலிருந்து தோழியுடன் பேசி இருக்கிறார்.

அந்த மொபைலில், பேசுபவர்களின் குரல் பதிவாகும் வசதி இருந்திருக்கிறது. அந்த வசதி, தன் மொபைலில் இருப்பது, அந்த அலுவலக நண்பருக்கும் தெரியவில்லை. அவருடைய மகன், அவர் இல்லாத சமயங்களில் மொபைலில், டவுன்லோடு செய்து, அவர் பேசியவற்றை, 'கால் ரிக்கார்டிங்கில்' போட்டு கேட்டுள்ளான். அப்படி கேட்கும் போது தான், தோழியின் அப்பா மற்றும் தோழி பேசியதை கேட்டு, தோழிக்கு, போன் செய்து, 'டார்ச்சர்' கொடுத்துள்ளான்.

இப்படியெல்லாம் கூட, வீட்டு விஷயம் வெளியில் பரவுமா என்று, அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்.

மொபைல் போனில் வீட்டு பிரச்னையோ, அந்தரங்க விஷயங்களோ, உங்கள் வங்கி கணக்கு எண் மற்றும் கிரடிட் கார்ட் எண் போன்றவற்றை சொல்லும் போது, கொஞ்சம் கவனம் தேவை. அதுவும் எக்காரணம் கொண்டும், மற்றவர் மொபைலில் சொந்த விஷயங்கள் பேச வேண்டாம்.

அடுத்தவரின் அந்தரங்கங்களை அறிய ஆவலோடு இருக்கும் இந்த மாதிரி ஜென்மங்கள் இருக்கும் வரை, நாமும் எச்சரிகையோடு இருப்பது நல்லது!