சிகரெட், பீடி, பான் பொருட்கள், புகையிலை மெல்லுதல் என புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழக்கின்றனர். புகையிலைப் பழக்கத்தால் மாரடைப்பு, சர்க்கரை நோய், சிறுநீரகச் செயல் இழப்பு, பக்கவாதம், புற்றுநோய் என பல பாதிப்புகள் ஏற்படலாம். புகைப்பவர்களில் 10-ல் 9 பேர் உயிர் இழக்கின்றனர். ஆனால், உயிரோடு இருக்கும் ஒருவரைப் பார்த்து திருப்தி அடைகிறோம். புகையிலைப் பழக்கத்தால் உயிர் இழந்தவர்களைப் பற்றி யாருக்கும் தெரிவது இல்லை, அப்படியே தெரிந்தாலும் அதை மறந்துவிடுகிறோம்.
சிகரெட் புகைக்கும்போது, அதில் உள்ள நூற்றுக் கணக்கான ரசாயனங்கள் உடலில் சென்று, பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில ரசாயனங்கள் உடலின் மரபணுவையே மாற்றி, புற்றுநோயை ஏற்படுத்திவிடுகின்றன. புகைத்தல், மெல்லுதல் என எந்த வடிவத்தில் புகையிலை எடுப்பவர்களாக இருந்தாலும், வாய், தொண்டை, நுரையீரல், உணவுக் குழாய், வயிறு, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புக்களில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது. சிகரெட் புகைப்பதால் மட்டும் அல்ல, ஒருவர் புகைத்து வெளியேற்றும் புகையை மற்றவர் சுவாசிக்கும்போது, அவருக்கும் புற்றுநோய் ஏற்படும்.
புகையிலைப் பழக்கத்தை நிறுத்த ஐந்து ஏ பரிந்துரைக்கிறோம். அனைத்துப் புற்றுநோய் சிகிச்சை மையங்கள், டிஅடிக்ஷன் சென்டர்களில் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ASK (கேட்டறிதல்) புகைபிடிப்பவரின் தற்போதைய நிலை, எத்தனை ஆண்டுகளாக, இந்தப் பழக்கம் உள்ளது என்று கேட்டறிதல்.
ADVISE (ஆலோசனை) புகையிலைப் பழக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பைப் பற்றி விளக்குதல்.
ASSESS (கணித்தல்) புகையிலைப் பழக்கத்தால் அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிதல்.
ASSIST (உதவுதல்) புகையிலைப் பழக்கத்தை கைவிடத் தேவையான மனநல, மருத்துவ உதவிகள் அளித்தல். மிகவும் தீவிரமாகப் புகை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு, சில மருந்துகள் அளித்து அதில் இருந்து விடுபட உதவுதல்.
ARRANGE (ஏற்பாடு செய்தல்) ஒருமுறை புகையிலைப் பழக்கத்தை நிறுத்திவிட்டால், அவர்கள் மீண்டும் அந்த பழக்கத்துக்குள் செல்ல வாய்ப்பு அதிகம். எனவே, அவர்களுக்குத் தொடர் கவுன்சலிங்குக்கு ஏற்பாடு செய்து, மீண்டும் அந்தப் பழக்கத்துக்கு செல்லாமல் தவிர்த்தல்.
புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர்