'கல்லூரிப் பாடங்களில் நான் டாப்பராக இருந்தாலும், 'பிரசன்டேஷன்' என்று வரும்போது சொதப்பிவிடுகிறேன். என்னைவிட சுமாராகப் படிக்கும் மாணவிகள்கூட, பிரசன்டேஷனில் அதிக மார்க்குகள் வாங்கும்போது, இயலாமையுடன் அவர்களைப் பார்க்கிறேன். பிரசன்டேஷன் விஷயத்தில் நான் ஸ்கோர் செய்ய வழிகாட்டுங்களேன்..!'' என்று கேட்டிருக்கிறார் காஞ்சிபுரம் மாணவி சிண்ட்ரெல்லா. இதுகுறித்த பயிற்சிகளை திருச்சியில் வழங்கிவரும் 'வெர்போ சிட்டி' மையத்தின் சீஃப் டிரெய்னர் ஓவ்னிடா டிக்ருஸ், இங்கே சிண்ட்ரெல்லாவுக்காக விளக்கம் தருகிறார்.
''சிறப்பான பிரசன்டேஷனுக்கு முக்கியமானது, முன் தயாரிப்பு. நீங்கள் எவ்வளவு சிறப்பான மாணவராக இருந்தாலும், முன்யோசனையுடன் கூடிய திட்டமிட்ட தயாரிப்பு மட்டுமே பிரசன்டேஷனில் பிரகாசிக்க வைக்கும். எத்தனை படித்திருந்தாலும், அவற்றைத் தெளிவாகவும் தேவைக்கேற்பவும் வெளிப்படுத்துவதில்தான் இருக்கிறது திறமை என்பதால், எடுத்துக்கொண்ட தலைப்பில் முதலில் தெளிவு பெறுங்கள். கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் எந்த திசையிலிருந்தும் கேள்விகள் எழலாம் என்ற உஷார்தனத்தோடு இந்தத் தயாரிப்பு அமைய வேண்டும். வெறும் குறிப்புகளை கவர்ச்சிகரமாக விரிவுபடுத்துவது என்பதோடு நின்றுவிடாமல், அவற்றை உங்கள் குழுவினர் அல்லது சக மாணவியரோடு விவாதித்து செதுக்கிக்கொள்வது நல்லது. முன்கூட்டியே 'மாதிரி பிரசன்டேஷன்' ஒன்றை மேற்கொள்வதும் அவசியம்.
பெரும்பாலும் கல்லூரி வளாக பிரசன்டேஷன் என்பது... மாணவர், ஆசிரியர் கலவையாகவே இருக்கும். இந்தச் சூழலில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர்களை மனதில் வைத்தே தயாரிப்புகளை மேற்கொள்ளுவார்கள். அது மாணவப் பார்வையாளர்கள் மத்தியில் தடுமாற்றத்தையும், அதை ஒட்டிய குறுக்குக் கேள்விகளையும் அதிகமாக்கும். எனவே, மாணவர்களை மனதில் வைத்தே தயாரிப்பு களை மேற்கொள்வது நல்லது. பார்வையாளர்கள் யார் என்பதோடு, அவர்களின் எண்ணிக்கையிலும் கவனம் வேண்டும். சொற்ப எண்ணிக்கையிலான குழுவினரைப் பார்வையாளராகக் கொண்ட பிரசன்டேஷன்... மிகவும் கூர்மையாக எதிர்கொள்ளப்படும் என்பதை மனதில் கொள்ளவும்.
பிரசன்டேஷன் வழங்கும் பல பங்கேற்பாளர்களில் நீங்களும் ஒருவர் எனில், மற்றவர்களின் தலைப்புகள் பற்றியும் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். யூகத்தின் அடிப்படையிலோ, மற்ற பங்கேற்பாளரின் திறமையை வைத்தோ... அவர் வெளிப்படுத்த வாய்ப்பிருக்கும் கருத்துக்கள் அல்லது உதாரணங்கள் உங்களது பிரசன்டேஷனிலும் ரிபீட் ஆகாத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். குரூப் பிரசன்டேஷன் எனில்... முன் தயாரிப்பு, உதாரணங்கள் சேகரிப்பு, காட்சிப் படுத்துவது, மேடையில் வழங்குவது என அவரவருக்குத் தனிச்சிறப்பானவற்றை ஒவ்வொரு வரும் பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.
பிரசன்டேஷனுக்கும் நேர நிர்வாகம் முக்கியம். கொடுக்கப்பட்ட நேர முழுமைக்கும் உங்கள் தயாரிப்பு களை அடைத்து வைக்காது, சந்தேக நிவர்த்தி மற்றும் கூடுதல் விவாதங்களை மனதில் வைத்தும் திட்டமிடல் அமைய வேண்டும். திடீர் கேள்விகளாக வர வாய்ப்புள்ள கேள்விகள் சிலவற்றுக்கும் உங்களின் முன் தயாரிப்பு அமையும் எனில், அது பார்வை யாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும்.
பார்வையாளர்கள் மத்தியில் பொறுமையை சோதிக்கும் வழக்கமான வாசிப்புகளைத் தவிர்ப்பது நல்லது. அது எவ்வளவு செறிவாக அமைந்திருந் தாலும்... கேட்பவருக்கு சலிப்பையே தரும். படங்கள், கிராஃபிக்ஸ், அனிமேஷன், இணையதள பதிவிறக்கங்கள், பத்திரிகை செய்திகள் என அவை பல தரப்பட்டதாக அமையலாம். அரங்கின் அப்போதைய நாடித் துடிப்பை மனதில் கொண்டு சுயமாக கருத்துக்களை விளக்குவது வரவேற்புக்கு உரியது. சமீபத்திய நிகழ்வாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் செய்திகளைத் தொட்டுச் செல்வதும், நிகழ்வை உயிரோட்டமாக்கும்.
உங்களுக்கு விஷய ஞானம் அதிகம் என்பதற்காக உள்ளடக்கத்திலோ, ஸ்லைடு வழங்கலிலோ ஹை-ஃபை மிரட்டல் வேண்டாம். எதிர்பாராத கேள்விகள் எழுந்தால் அச்சுபிச்சு சமாளிப்புகளால் சமாளிக்க முயற்சித்து மொத்த பிரசன்டேஷனையும் காலி செய்வதற்கு பதில், வெளிப்படையாக 'தெரியாது' என ஒப்புக்கொள்வது நன்மதிப்பையே தரும். அதேபோல அதிமேதாவித்தனத்தோடு, பார்வையாளர்களை துச்சமாக மதித்து பிரசன்டேஷனை கொண்டுசெல்வது, நீங்கள் அறிவு ஜீவியாக இருந்தாலும் எரிச்சலூட்டுவதாக அமையும்... அது நாகரிகமும் அல்ல.
கடைசி விநாடி வரை தயாரிப்புகளை எப்படி 'ரிச்'சாக காட்சிப்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்தி, உள்ளடக்கத்திலும், அவற்றை வெளிப்படுத் துவதிலும் பயிற்சி பெற தவறுவதுதான், பெரும்பாலா னோரின் சொதப்பலுக்கும் தடுமாற்றங்களுக்கும் அடிப்படை. எனவே. தயாரிப்புக்கான உழைப்பைப் போல பயிற்சிக்கும் நேரத்தை ஒதுக்குவது... கடைசி நேர களேபரங்களைத் தவிர்க்கும்!''