Sunday, December 25, 2011

வேலை ரெடி, நீங்க ரெடியா?


ஜனனி, என் நண்பனின் தங்கை. எம்.காம் படித்த அவள் படுஷார்ப். கம்பெனி முதல் அக்கவுன்ட்ஸ் வரை பிய்த்து வாங்குவாள். அப்பேர்பட்ட பெண்ணுக்கு வேலை கிடைக்கவில்லை!

டைசியில் நான் அவளை இன்டெர்வியூ செய்தேன். அவளுக்கு வேலை தருவதற்காக அல்ல, அவளுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்வதற்காக. படித்த படிப்பில் அவள் கெட்டிக்காரியாக இருந்தாலும் சில குறைகள் இருப்பதைக் கண்டுபிடித்தேன். ஒரு சகோதரர் போல நான் அதை எடுத்துச் சொல்ல, அடுத்த இன்டெர்வியூ ஜனனிக்கு சக்ஸஸ்.

உங்கள் குறைகள், பலவீனங்களில் இருந்து நீங்கள் வெளியே வரவேண்டுமா? அதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, அந்த குறைகளை ஏற்றுக் கொள்வதே! குறைகளை ஏற்றுக் கொள்வது தோல்வி மனப்பான்மை அல்ல; நமக்கிருக்கும் குறைகளை பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருப்பதுதான் தோல்வி மனப்பான்மை.

நம் குறைகளை ஏற்றுக் கொள்வதற்குப் பொறுப்புணர்ச்சி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு துணிவும் அவசியம். இதுதான் சுய ஏற்றுக் கொள்ளுதலுக்கு அடிப்படை. ஜனனிக்கு இந்த அடிப்படையை விளக்கிச் சொன்னவுடன் அந்த குறை போய்விட்டது.



நம் குறைகளைப் புரிந்து கொள்ள நாம் இரண்டு முக்கியமான கேள்விகள் கேட்பது அவசியம். முதல் கேள்வி, நம் குறைக்கு அடிப்படை உள்காரணங்களா? இல்லை, வெளிக் காரணங்களா? உதாரணத்திற்கு, நீங்கள் இன்டெர்வியூ சமயத்தில் அதிகம் டென்ஷன் ஆகக் காரணம் உங்கள் பெற்றோர் தரும் அதிக பிரஷரா? அல்லது உங்கள் தயாரிப்பின்மையா? என்று பாருங்கள்.

'இது ஒன்னோட அம்பதாவது இன்டெர்வியூ. இதுலயாவது உனக்கு வேலை கிடைக்குமா?' - இன்டெர்வியூ கிளம்பும் சமயத்தில் வீட்டில் இருப்பவர்கள் இப்படி சொன்னால் எப்படி இருக்கும்? அல்லது இன்டெர்வியூக்கு முதல்நாள்கூட நீங்கள் அது பற்றி கவலைப்படாமல் கிரிக்கெட் பார்த்தால், இன்டெர்வியூவில் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? இப்படி காரணம் என்ன வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், இன்டெர்வியூ அட்டன்ட் செய்யப்போவது நீங்கள்தான். எனவே, இந்த டென்ஷனை சமாளிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்குத்தான் சேரும்.

நாம் கேட்க வேண்டிய இரண்டாவது கேள்வி, இந்த குறையை முழுவதும் நீக்க முடியுமா, இல்லை வெறும் மேனேஜ் மட்டும்தான் செய்ய முடியுமா? ஏனெனில் சில குறைகளை முழுதாக நீக்க முடியாது. ஆனால், மேனேஜ் செய்லாம்.

உதாரணமாக, நீங்கள் நல்ல குண்டு. வேலைக்காக உங்கள் உடல் எடையை திடீரென குறைத்து, பிஃப்டி கேஜி தாஜ்மஹால் ஜஸ்வர்யா ராய் மாதிரி ஆகிவிட முடியாது. ஆனால், உடல் பருமனை குறைத்து காட்டும் டிசைன் அல்லது நிறம் உடைய உடைகளை அணியலாம்.

சில சமயம் நாம் குறைகள் என்று நினைக்கும் குணங்களைச் சரியான சூழலில் பயன்படுத்தி நிறைகளாக மாற்ற முடியும். என் கல்லூரி நண்பன் சந்துரு ஒரு தனிமை விரும்பி. பலரும் அவனை கேலி செய்வார்கள். அவனோ அதுபற்றி கவலைப்படாமல் கவிதை, சிறுகதைகள் என்று எழுதினான். இன்று அவன் நல்ல கதாசிரியன். ஆக, ஒரு குணம் நம் பலமாகவோ பலவீனமாகவோ ஆவது நாம் அதை எந்த சூழ்நிலையில், எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துதான்.

அது சரி, நம் நிறைகளை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள முடியும்போது, ஏன் குறைகளை கண்டு இவ்வளவு பதற்றம் அடையறோம்? ஏனெனில், இந்த சமூகம் நம்மை ஏற்றுக்கொள்ள சில நிபந்தனைகளை வைப்பதைபோல நாமும் நம்மை ஏற்றுக்கொள்ள சில நிபந்தனைகளை வைக்கிறோம். இந்த நிபந்தனைகள் கடுமையாகும்போது, நம் குறைகளை பார்க்கக்கூடிய துணிவு நமக்கு குறைந்துவிடும்.

இதைத் தவிர்க்க நம்மை நாமே எந்த நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது நாம் என்ன செய்தாலும் சரி என்று சொல்கிற மனநிலை அல்ல இது. தன் குழந்தைகளின் குறையை ஒரு தாய் ஏற்றுக்கொள்வது போல சுய அனுசரணையுடன் நம் குறைகளை ஏற்றுக் கொண்டால், நமக்குள் ஏற்படும் குற்ற உணர்வும், தாழ்வு மனப்பான்மையும் போய்விடும்.

நம் குறைகளை நாம் உணர்ந்து புரிந்துகொண்டுவிட்டால், நம்மை நாமே மதிப்போம். நம்மை நாம் மதிக்கவில்லை எனில் வேறு யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள். சுயமதிப்பு உள்ளவர்களே உயர்ந்த லட்சியங்களை சாதிப்பார்கள். ஏனென்றால், தோல்விகள் ஏற்படும்போது சுயபச்சாதாபமோ, வெறுப்போ கொள்ளாமல், என்னால் இதிலிருந்து எழுந்து வருகிற தகுதி எனக்கு உண்டு என்று பாசிட்டிவ் ஆக சிந்திக்க சுயமதிப்பு அவசியம். சுயமதிப்பு உள்ளவர்கள் வாழ்வில் எப்போதும் தேங்கி நிற்பதில்லை. லட்சியங்களை சாதித்துவிட்டால்கூட மேலும் மேலும் கற்று தங்கள் திறன்களை வளர்த்துகொள்ள அவர்கள் முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள்.

சுயமதிப்பு உள்ளவர்கள் தங்கள் குறைகளைப் போலவே பிறரது குறை களையும் மன்னிப்பார்கள்; அதனால் அவர்கள் உறவுகள் சிறக்கும். அதேபோல் மனநிறைவோடு பிறர் நிறைகளைப் பாராட்டி அவர்களிடமிருந்து நல்ல குணங்களை கற்றுக் கொள்வார்கள்.

எந்த நிபந்தனையும் இல்லாமல் தன்னைத்தானே ஏற்றுக்கொள்ளுதல், சுயமதிப்பு போன்றவை நிஜத்தில் எந்த அளவுக்கு சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம். பொறுமையும், புரிந்துகொள்ளும் முயற்சியும் இருந்தால் இது நிச்சயம் முடியும். கொஞ்சம் முயற்சி செய்து பாருங்களேன்!

(தயாராவோம்)

சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்!

எப்படி தயாராவது?

ன்று நிதி சார்ந்த படிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதில் ஆடிட்டர்களுக்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து மணி நேரம் படித்தால் மூன்றாண்டுக்குள் சி.ஏ. ஆவது உறுதி. இன்றைக்கு நல்ல முறையில் சி.ஏ. படித்து முடித்தவர்களுக்கு ஆரம்பத்திலேயே அறுபதாயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும்.

10-ம் வகுப்பு பாஸ் செய்து முடித்த கையோடு 'காமன் புரஃபீசியன்ஸி டெஸ்ட்' (சுருக்கமாக சி.பி.டி.) எழுத பெயரைப் பதிவு செய்துவிடலாம். ஆனால், 12-ம் வகுப்பு படித்து பாஸ் செய்த பிறகே இந்தப் பரிட்சையை எழுத முடியும். கல்லூரியில் படிக்கிற மாணவ, மாணவியர்கள் எனில் இந்த பரிட்சை நடப்பதற்கு 60 நாட்களுக்கு முன்பு அப்ளை செய்து படிப்பது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத வாக்கில் நடக்கும் இந்த சி.பி.டி. பரிட்சையானது சி.ஏ. படிப்புக்கு ஒரு என்ட்ரன்ஸ் மாதிரி.

சி.பி.டி. பரிட்சையில் பாஸ் செய்துவிட்டால் அடுத்து 'இன்டக்ரேட்டட் புரொபஷனல் கம்பீட்டன்ஸ் கோர்ஸ்' (சுருக்கமாக, ஐ.பி.சி.சி.) படிக்கத் தொடங்கலாம். இந்த காலகட்டத்தில் 35 மணி நேர ஓரியன்டேஷன் புரோகிராமையும் 100 மணி நேர ஐ.டி. பயிற்சியையும் பெறுவது அவசியம். ஒன்பது மாதகால படிப்பான இதில் இரண்டு குரூப்கள் உள்ளன.

இந்த இரண்டு குரூப்பில் முதல் குரூப் அல்லது இரண்டு குரூப்பையும் பாஸ் செய்தால் மட்டுமே மூன்று வருட காலத்திற்கான ஆர்ட்டிக்கிள்ஷிப் டிரைனிங்கில் சேரும் தகுதி கிடைக்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஏதாவது ஒரு பிராக்டிஸிங் சார்டர்ட் அக்கவுன்டிடம் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். இந்த பயிற்சியில் சேர்ந்து இரண்டரை ஆண்டு முடிந்தவுடன் இறுதித் தேர்வை எழுதும் தகுதி பெற்றுவிடுவார்கள். இறுதித் தேர்வை எழுதும் முன்போ, பின்போ 15 நாள் ஜெனரல் மேனேஜ்மென்ட் அண்ட் கம்யூனிகேஷன் ஸ்கில் பயிற்சி பெறுவது அவசியம். இந்த பயிற்சி பெற்றால் மட்டுமே சி.ஏ. இன்ஸ்டிடியூட்டில் உறுப்பினராகி, நீங்கள் ஆடிட்டிங் பணியைத் தொடங்க முடியும்.