Monday, November 7, 2011

பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி

'நானெல்லாம் காலையில சாப்பிடறதே இல்ல...' என்றபடி காலை உணவை பலரும் 'ஸ்கிப்' செய்வது ஃபேஷனாகிவிட்டது. 'இந்தப் பழக்கம் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்' என்று உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கை மணி அடிக்கத்தான் செய்கிறார்கள். என்றாலும்... அலுவலகம், பள்ளி, கல்லூரி என்று பரபரக்கும் நேரத்தில் 'இன்னிக்கு என்ன பிரேக்ஃபாஸ்ட் செய்வது?' என்று குழம்பிப் போய்த் தவி(ர்)ப்பவர்கள்தான் அதிகம்!

குழப்பத்துக்கு விடை அளிப்பதோடு, எளிதாக செய்யத்தக்க, சத்து மிகுந்த ரெசிபிகளை இங்கே பரிமாறுகிறார் சமையல் கலை நிபுணர் சீதா சம்பத்.

 ஓட்ஸ் ஸ்வீட் பொங்கல்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், வேக வைத்த பாசிப்பருப்பு - கால் கப், ஏலக்காய் - 4, முந்திரிப் பருப்பு - 10, பொடித்த வெல்லம் - அரை கப், நெய் - கால் கப்.

செய்முறை: ஓட்ஸை தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும். வேக வைத்த பாசிப்பருப்பு, ஊற வைத்த ஓட்ஸை வாணலியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கிளறவும். ஓட்ஸ் வெந்து வரும்போது பொடித்த வெல்லத்தைச் சேர்த்துக் கிளறவும். நன்கு கெட்டியாகி, பச்சை வாசனை போனதும், கொஞ்சம் நெய் விட்டு அடிபிடிக்காமல் மேலும் கிளறவும். வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காய், மீதமுள்ள நெய் விட்டு கலந்து இறக்கவும்.

புதுமையான ஓட்ஸ் ஸ்வீட் பொங்கல் ரெடி!

 ராகி இனிப்பு அடை

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி - 10, நெய் - கால் கப்.

செய்முறை: கடாயில் தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு நன்கு கரையவிடவும். கொதித்ததும் கேழ்வரகு மாவைத் தூவி கிளறவும். இறுகி வரும்போது தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து கிளறி எடுக்கவும். முந்திரிகளைத் துண்டுகளாக்கி சேர்த்துக் கலக்கவும். வாழை இலையில் நெய் தடவி மாவு கலவையில் கொஞ்சம் எடுத்து, உருட்டி தட்டவும். சூடான தவாவில் நெய் தடவி, தட்டி வைத்த அடையை போடவும். பிறகு திருப்பிப் போடவும். சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு: இதை இரண்டு நாட்கள் வைத்திருந்து  சாப்பிடலாம். அவசரத்துக்கு முதல் நாளே செய்து வைத்துக் கொள்ளலாம்.

 

ஆனியன் அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு (மூன்றும் சேர்ந்து) -  ஒரு கப்,  நறுக்கிய வெங்காயம் - 2, காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை கலந்து ஊற வைக்கவும். தண்ணீர் வடித்து, காய்ந்த மிளகாய்  சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். மாவில் நறுக்கிய  இஞ்சி, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், சேர்த்துக் கலக்கவும். பிறகு, உப்பு போட்டு கலக்கவும். சூடான தவாவில் எண்ணெய் தடவி, மாவை கரண்டி அளவு விட்டு வட்டமாக, கொஞ்சம் கனமாக தேய்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விடவும். நடுவில் துளை செய்து கொஞ்சம் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்ததும் திருப்பி போடவும். நன்கு வெந்து பொன் முறுவலாக வந்ததும் எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு எல்லா சட்னியும் தொட்டு சாப்பிட ஏற்றது.

 சில்லி கார்லிக் நூடுல்ஸ்

தேவையானவை: நூடுல்ஸ் (வெந்தது) - அரை கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், துருவிய கேரட் - அரை கப், இஞ்சி -  பூண்டு - பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயம், கேரட், இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும். வதங்கியதும் வெந்த நூடுல்ஸை போட்டு கலக்கவும். நன்கு கலந்து வந்ததும் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு: இந்த  அவசரயுகத்தில் இதை காலை நேர டிபனாக 5 நிமிடத்தில் செய்து அசத்தலாம்.

 மிக்ஸ்டு வெஜ் பராத்தா

 தேவையானவை: கோதுமை மாவு - கால் கிலோ, உருளைக்கிழங்கு (வேக வைத்தது மசித்தது), வெங்காயம் (பொடியாக நறுக்கியது), நறுக்கிய தக்காளி - தலா ஒன்று, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவில் உப்பு கலந்து தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, பிசைந்து கொள்ளவும். மாவை கொஞ்சம் எடுத்து (சிறிய கமலா ஆரஞ்சு சைஸ்) வட்டமாக இட்டு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தடவி, காய்கறி கலவையில் 2 டீஸ்பூன் அளவு வைத்து மூடவும். மீண்டும் சிறிது கனமாக இட்டு சூடான தவாவில் போட்டு, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடவும். சுற்றிலும் எண்ணெய் தடவும். மேலேயும் ஸ்பூனால் லைட்டாக எண்ணெய் தடவவும். வெந்ததும் எடுத்தால்.... மிக்ஸ்டு வெஜ் பராத்தா தயார்.

குறிப்பு: அசத்தலான மணம், ருசியுடன் இருக்கும் இது காலை வேளை டிபனுக்கு ஏற்றது. ஒன்று சாப்பிட்டால்கூட போதும்.

நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்

தேவையானவை: நூடுல்ஸ் (வேக வைத்தது) - கால் கப், பிரெட் - 10 துண்டுகள், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு சிறு துண்டு (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய பச்சை மிளகாய் - 2, கேரட் துருவல், குடமிளகாய் துண்டுகள் - தலா டேபிள்ஸ்பூன்,  தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், சீஸ் துருவல் (விருப்பப்பட்டால்) - 2 டேபிள்

ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெயை சேர்க்கவும். உருகியதும் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கேரட், குடமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறி வதங்கியதும் வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்துக் கலக்கவும். பிறகு, தக்காளி சாஸ் விட்டு கலக்கவும். ஒரு ஸ்லைஸ் பிரெட் எடுத்து,  2 டேபிள்ஸ்பூன் அளவு கலவையை பரவலாக வைத்து, சீஸ் தூவி, மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி பரிமாறவும்.

குறிப்பு: இதை 5 நிமிடத்தில் செய்துவிடலாம்... சத்து நிறைந்தது.

 ரவா - சேமியா மினி இட்லி

தேவையானவை: ரவை - ஒரு கப், சேமியா - அரை கப், புளிப்புத் தயிர் - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), நறுக்கிய பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை வறுக்கவும். அதனுடன் ரவை, சேமியாவை சேர்த்து வறுக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதை புளிப்புத் தயிரில் சேர்த்துக் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, 10 நிமிடம் ஊற விடவும். மினி இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, தயாரித்து வைத்துள்ள கலவையை  விட்டு, சிறு இட்லிகளாக ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு எல்லாவித சட்னிகளும் தொட்டு சாப்பிடலாம்.

 

இட்லி வெஜ் உசிலி

தேவையானவை: இட்லி (உதிர்த்தது) - 3, வெங்காயம், கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை சேர்த்து வறுக்கவும். பிறகு வெங்காய துண்டுகள், கேரட், குடமிளகாய் துண்டுகள், உப்பு சேர்த்துக் கிளறவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து, காய்கள் நன்கு வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள இட்லி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்துக் கிளறி எடுக்கவும்.

 ஸ்பைசி டோக்ளா

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், புளிப்புத் தயிர் - முக்கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தயிரில் கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூளை கலக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, ஃப்ரூட் சால்ட் போட்டு கெட்டியாகக் கலக்கவும். கலவையை  எண்ணெய் தடவிய தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் துண்டுகள் போட்டால்... டோக்ளா ரெடி!  

கடாயில் எண்ணெய் விட்டு... சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள் போட்டு கலக்கவும். டோக்ளா துண்டுகளை சேர்த்து லேசாக கிளறவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் போட்டு கலந்து எடுத்து வைத்தால்...  டோக்ளா தயார்.

குறிப்பு: சட்னி தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். புரோட்டீன், கால்ஷியம் நிரம்பியது.

 புளி அவல்

தேவையானவை: அவல் (கெட்டி அவல்) - ஒரு கப், புளி - நெல்லிகாய் அளவு, கடுகு - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, ரசப்பொடி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியைக் கரைத்து வடிகட்டி எடுக்கவும். உப்பு, ரசப்பொடி கலந்து, அதில் அவலை கலந்து ஊறவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும். பிசிறிய அவலை போட்டு 2 நிமிடம் கிளறவும். நன்கு உதிர்ந்து வந்ததும் இறக்கினால்... புளி அவல் தயார்.

குறிப்பு: குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய இந்த காலை டிபன், சுகர் கம்ப்ளெய்ன்ட் இருப்பவர்கள் உட்பட எல்லோருக்கும் ஏற்றது.

 

 ஆலுபுவா

தேவையானவை: அவல் - ஒரு கப், உருளைக்கிழங்கு (வேக வைத்தது) -  கேரட் (சிறியது), வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாயை கிள்ளிப் போடவும், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். வெங்காயத் துண்டுகளை போட்டு கிளறவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், உருளைகிழங்கு, கேரட் துண்டுகள், உப்பு சேர்த்து,

மஞ்சள்தூள் போட்டு கலக்கவும். பிசிறிய அவலை போட்டு (உதிர்த்து போட்டு) கலக்கவும். நன்கு சூடானதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கினால்.... ஆலுபுவா தயார்.

குறிப்பு: இதை அப்படியே சாப்பிடலாம். தேவைப்பட்டால் சட்னி தொட்டும் சாப்பிடலாம்.

 பேப்பர் ரோஸ்ட்

தேவையானவை: அரிசி - 3 கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், சாதம் - ஒரு கப், எண்ணெய், உப்பு - - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பை தனித்தனியாக ஊற வைத்து நைஸாக அரைத்து எடுத்து ஒன்றாகக் கலக்கவும். இதனுடன் சாதத்தைக் கலக்கவும் (சாதத்தை... ஊற வைத்த அரிசி, உளுந்துடன் சேர்த்தும் அரைக்கலாம்). தேவையான அளவு உப்பு கலந்து முதல் நாள் தயார் செய்துவிடவும். மறுநாள் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி, மாவை எடுத்து கல்லில் 2 கரண்டி அளவு விட்டு... வட்டமாக, மெல்லியதாக தேய்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விடவும். முறுவலாக வந்ததும் எடுக்கவும்.

குறிப்பு: தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி ஆகியவை இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

 மோர் கேக்

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், புளித்த தயிர் - அரை கப், மோர் மிளகாய் - 2 அல்லது 3, காய்ந்த மிளகாய் - 1, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தயிரில் உப்பு, அரிசி மாவு போட்டு கட்டியில்லாது கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், மோர் மிளகாய் சேர்த்துக் கிளறி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி போட்டு வறுக்கவும். கரைத்து வைத்ததை அதில் கொட்டி கிளறவும். வெந்து இறுகி வரும் சமயம் எண்ணெய் தடவிய தட்டில் பரவலாக கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

குறிப்பு: இட்லி மிளகாய்பொடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

 பிடி கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி ரவை - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையானஅளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்க்கவும். உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, வறுபட்டதும் கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும். 2 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். அரிசி ரவை, தேங்காய் துருவலை சேர்த்துக் கலக்கவும். கெட்டியாக வந்ததும் இறக்கவும். கையில் தண்ணீர் தொட்டுக் கொண்டு கலவையில் சிறிது சிறிதாக எடுத்து உருண்டைகளாக பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு எல்லா வகை சட்னியும் தொட்டுக் கொள்ளலாம். ஆவியில் வேக வைப்பதால் எளிதில் ஜீரணம் ஆகும்.

 வீட் பொங்கல்

தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், வேக வைத்த பாசிப்பருப்பு  - கால் கப், மிளகு (ஒன்று இரண்டாக உடைத்தது) - அரை டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டேபிள்ஸ்பூன், வறுத்த முந்திரி - 8, பட்டாணி - 1 டேபிள்ஸ்பூன், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்), உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கோதுமை ரவையை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். இன்னொரு கடாயில் சிறிது நெய் விட்டு... சீரகம், மிளகு போட்டு வறுக்கவும். பிறகு, பட்டாணி, இஞ்சி, கேரட் துருவல், முந்திரிப் பருப்பு போட்டு வதக்கி, கோதுமை கலவையில் கலந்து, மீதமுள்ள நெய் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

 ஸ்டஃப்டு பிடிகொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி ரவை (நொய்) - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், பொடித்த வெல்லம் - கால் கப், ஏலக்காய்த்தூள்  - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் அரிசி ரவையை (நொய்) போட்டு கெட்டியாக கிளறி எடுக்கவும்.

தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூளை ஒன்றாகக் கலக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி கலவையில் பெரிய எலுமிச்சம் பழ அளவுக்கு எடுத்து உருட்டி, குழிவாக செய்து அதனுள் 2 ஸ்பூன் அளவு தேங்காய் கலவையை வைத்து மூடவும். இதே போல் மொத்தத்தையும் தயார் செய்யவும்.

தயாரித்தவற்றை ஆவியில் வேகவிட்டு எடுக்கத்தால்... ஸ்டஃப்டு பிடிகொழுக்கட்டை தயார்.

குறிப்பு: அந்தக் காலத்தில் வயதானவர்கள், ஏகாதசி அன்று ஒரு வேளை மட்டும் இதனை சாப்பிட்டு விரதம் இருப்பார்கள்.

 சாபுதானா கிச்சடி

தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - இஞ்சி துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, வேர்க்கடலை (ஒன்று இரண்டாக உடைத்தது) - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்

ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை கொஞ்சம் தண்ணீர்விட்டு பிசிறி ஊற வைக்கவும். (கிச்சடி செய்வதற்கு 3 மணி நேரம் முன்னதாக ஊற வைக்கவும்).

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். பெருங்காயத்தூள் இஞ்சி - பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலை போட்டு கிளறவும். பொன் னிறம் ஆனதும் பிசிறி வைத் துள்ள ஜவ்வரிசி, உப்பு சேர்த்து மேலும் கிளறவும். ஜவ்வரிசி வெந்ததும் வேர்க்கடலை தூளை சேர்த்து நன்றாகக் கிளறவும் நல்ல மணம் வந்ததும் இறக்கவும்.

 வெஜ் பணியாரம்

தேவையானவை: இட்லி மாவு - ஒரு கப், நறுக்கிய வெங்காய துண்டுகள், கேரட் துருவல், முட்டை கோஸ் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன்,  கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி - பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டேபிள்

ஸ்பூன், எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இட்லி மாவில் வெங்காய துண்டுகள், கேரட் துருவல், முட்டைகோஸ் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, இஞ்சி - பச்சை மிளாய் துண்டுகள், உப்பு  சேர்த்துக் கலக்கவும். குழி சட்டியில் எண்ணெய் கொஞ்சம் விட்டு, மாவு கலவையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து விடவும். வெந்ததும் திருப்பி விடவும். நன்கு வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு: சத்து நிரம்பிய இந்த பணியாரம், எல்லா சட்னியும் தொட்டு சாப்பிட ஏற்றது.

 பம்கின் பூரி

தேவையானவை: பரங்கிக்காய் துருவல் - 2 கப், கோதுமை மாவு - 3 கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை: கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் பரங்கிக் காய் துருவலை போட்டு வதக்கவும். வெல்லம், உப்பு சேர்த்துக் கலந்து விடவும். நன்கு ஆறியதும் கோதுமை மாவுடன் சேர்த்துப்  பிசையவும்.

மாவு கலவையில் சிறிது எடுத்து வட்டமாக இட்டு, சூடான எண்ணெயில் போட்டு, பொரிந்து வந்ததும் திருப்பிவிட்டு, வெந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.

 எனர்ஜி சாலட்

தேவையானவை: முளைகட்டிய பயறு - 2 கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், வெள்ளரிக்காய் துண்டுகள் - அரை கப், லெட்டூஸ் இலை துண்டுகள் - கால் கப், வறுத்த வேர்க்கடலை - கால் கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பயறு, வேர்க்கடலை, வெங்காயம், வெள்ளரிக்காய், லெட்டூஸ் இலை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு... உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கினால்... சாலட் தயார்.

குறிப்பு: இது, பசி தாங்க கூடியது... சத்து நிரம்பியது.

 பிரேக்ஃபாஸ்ட் ஆப்பிள் ஜூஸ்

தேவையானவை: மீடியம் சைஸ் ஆப்பிள் - ஒன்று, கேரட் - 2 அல்லது 3, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேன் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை : ஆப்பிள், கேரட், இஞ்சியை தோல் சீவி, துண்டுகள் செய்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தேவையான அளவு மினரல் வாட்டர் கலந்து வடிகட்டி, தேன் விட்டு கலக்கினால்... பிரேக்ஃபாஸ்ட் ஆப்பிள் ஜூஸ் தயார்.

 தாணிய பணியாரம்

தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, நறுக்கிய இஞ்சி - பச்சை மிளகாய் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : அரிசி, பருப்பு வகைககளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். உப்பு, தேங்காய் துருவல், இஞ்சி - பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லியை கிள்ளிப் போட்டு கலக்கவும்.குழி சட்டியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் மாவு கலவையை அரை குழி வருமாறு விடவும். வெந்ததும் குச்சியால் திருப்பி விடவும், பொன்னிறமானதும் எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு தக்காளி சாஸ், சட்னி சிறந்த காம்பினேஷன்.

 

ராகி புட்டு

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, ராகி மாவு, உப்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை  ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீர் விட்டு பிசிறினாற்போல் கலக்கவும்.

மாவு கலவையை புட்டு குழாயில் சிறிதளவு போட்டு, தேங்காய் துருவல் சேர்க்கவும். இப்படி மாற்றி மாற்றி மாவு மற்றும் தேங்காய் துருவல் போட்டு குழாயை நிரப்பவும் அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சிறிது ஆறியதும் தட்டினால்,  குழாயை விட்டு புட்டு வெளியே வரும். இதனுடன் சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.  

குறிப்பு: இது, இரும்புச் சத்து நிறைந்தது.

 

பெசரட்

தேவையானவை: பச்சைப்பயறு - ஒரு கப், அரிசி - அரை கப், பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, இஞ்சி - ஒரு துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சைப்பயறு, அரிசியை ஊற வைத்து அரைத்து எடுக்கவும். இதில் பச்சை மிளகாய், சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்துக் கலக்கவும். தவாவில் எண்ணெய் தடவி, மாவு கலவையில் இருந்து 2 கரண்டி எடுத்துவிட்டு தேய்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.

 ஆட்டா காஷீரா

தேவையானவை: கோதுமை மாவு - அரை கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - கால் கப், முந்திரி, பாதாம் - தலா - 5.

செய்முறை: கடாயில் நெய் விட்டு, சூடானதும் கோதுமை மாவை வறுக்கவும். சர்க்கரை, தண்ணீர் தெளித்து கலக்கவும். சர்க்கரை கரைந்து இறுகிவரும் சமயம் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்துக் கலக்கவும். நன்கு கலந்து இறுகி வந்ததும் இறக்கினால்... ஆட்டா காஷீரா ரெடி. இதை விரும்பிய வடிவத்தில் செய்து கொள்ள லாம்.

 பிரேக்ஃபாஸ்ட் வெஜ் ஜூஸ்

தேவையானவை: தக்காளி - 3, வெள்ளரிக்காய் துண்டுகள் - ஒரு கப், செலரி (டிபாட்ர்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒன்று, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை: தக்காளி, வெள்ளரிக்காய், செலரி ஆகியவற்றை அரைத்து எடுக்கவும். மினரல் வட்டர் கலந்து வடிகட்டவும். இந்த ஜூஸில் மிளகுப்பொடி சேர்த்துக் கலக்கவும். பிரேக்ஃபாஸ்ட் வெஜ் ஜூஸ் ரெடி.

கோதுமை ரவை கஞ்சி

தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், பால் - 300 மில்லி, வறுத்த முந்திரி - 4, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை : கடாயில் நெய் விட்டு கோதுமை ரவையை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். கோதுமை ரவை நன்கு வெந்து குழைந்து வந்ததும் இறக்கவும். காய்ச்சிய பாலை சேர்க்கவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... கோதுமை ரவை கஞ்சி தயார்.

குறிப்பு: இனிப்பு பிடிக்காதவர்கள் உப்பு, மோர் கலந்து பருகலாம்.

 லோ கலோரி சாலட்

தேவையானவை: நறுக்கிய கேரட், தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம்  - தலா 2 டேபிள்

ஸ்பூன், இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய் துண்டுகள், சோயா சாஸ் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை டேபிள்ஸ்பூன், சர்க்கரை (விருப்பப்பட்டால்) ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  

செய்முறை: ஒரு பாத்திரத்தில் காய்கறி துண்டுகள், சோயா சாஸ், எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரை எல்லாவற்றையும் போட்டு கலந்து பரிமாறவும்.

 இடியாப்பம்

தேவையானவை: அரிசி மாவு (அரிசியை ஊற வைத்து, களைந்து, உலர்த்தி அரைத்த மாவு) - 1 கப், வெண்ணெய் - அரை டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவில் உப்பு, வெண்ணெய் கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, இடியாப்பம் அச்சில் போட்டு, எண்ணெய் தடவிய  தடவிய தட்டில் பிழிந்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். தேங்கய்ப்பாலில் ஏலக்காய்த்தூள், சர்க்கரையை கலக்கவும். இடியாப்பத்தை தட்டில் வைத்து, கிண்ணத்தில் தேங்காய்ப்பால் வைத்து பரிமாறவும்.

குறிப்பு: ஆவியில் வெந்ததால், இடியாப்பம் எளிதில் ஜீரணமாகும்.

 ஹெர்பல் பால்ஸ்

தேவையானவை: அரிசி மாவு: 1 கப், வெண்ணெய் - டேபிள்டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), நறுக்கிய பச்சை மிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, உப்பு, வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி,  பச்சை மிளகாயை அரைத்து மாவில் போட்டு கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை ஆவியில் வேகவைத்து எடுத்தால்... ஹெர்பல் பால்ஸ் ரெடி!

குறிப்பு: தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம். அப்படியே சாப்பிடலாம்.