Thursday, November 24, 2011

குழந்தைகள் சண்டை போடணும்

குழந்தைகள் சண்டை போடணும்

ஓயாமல் சண்டை போட்டுக்கொண்டு, உங்களைப் பஞ்சாயத்துக்குக் கூப்பிடும் குழந்தைகளைப் பார்த்துக் கோபம் வருகிறதா? அவர்களை ரெண்டு போடலாம் என்று கிளம்புகிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். அவர்களை சண்டை போட்டுக்கொள்ள விடுங்கள்... அது நல்லதுதான். அப்போதுதான் ஆரோக்கியமான மனநிலை உருவாகும் என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி. இவம் பாரும்மா... என் ஹோம் வொர்க் நோட்டை கிழிச்சிட்டான், இவ என் பென்சிலை உடைச்சிட்டாம்மா... வீட்டுக்கு வீடு கேட்கும் குரல்கள்தான் இவை.  அவர்களது சண்டையைத் தீர்த்துவைக்கும் வழக்கமான நாட்டாமை தீர்ப்பை மாற்றியாக வேண்டிய சீன் இது. அதற்கு என்ன அவசியம் என்பதையும் சொல்கிறார் ஜெயந்தினி.
 
இப்படி இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கிற வீடுகளில் குழந்தைகள் தங்களுக்குள் கோபத்தை மட்டுமல்ல, அன்பையும் சேர்த்தே பகிர்ந்துகொள்கிறார்கள். வெளித்தோற்றத்துக்கு அவர்கள் அதிகப்படியாக சண்டையிடுவதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் அவர்களிடம் விட்டுக் கொடுத்தலும் பாசப் பிணைப்பும் இருக்கத்தான் செய்யும். தவறு செய்யும் குழந்தையை நாம் கண்டிக்கும்போது, ஏதோ செய்யக்கூடாத விஷயத்தைச் செய்துவிட்டு இவன் திட்டு வாங்குகிறான்; நாம் இதைச் செய்யக் கூடாது என இன்னொரு குழந்தை இதைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வளர்கிற குழந்தைகள், எந்தவிதத் தயக்கமும் பயமும் இல்லாமல் வெளியுலகையும் பிரச்னைகளையும் எதிர்கொள்வார்கள்.
 
ஆனால் இதுபோன்ற எந்தப் பகிர்வுகளும் இல்லாமல் தனியாக வளரும் குழந்தைகளுக்குத்தான் அதிக கவனமும் கவனிப்பும் தேவை. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதைப் புரிந்துகொள்ளாததுதான் பிரச்னை என்கிறார் ஜெயந்தினி.

அப்படியானால் சண்டை போட, போட்டி போட, பொம்மையைப் பிடுங்க, பென்சிலை உடைக்க இன்னொரு குழந்தை இல்லாத வீடுகளில் பெற்றோர் என்ன செய்வது? ஒற்றைக் குழந்தையைத் தனியாக வளர்க்கும் பெற்றோர் எப்படி நடந்துகொள்வது? டாக்டர் ஜெயந்தினி சொல்வதைக் கேளுங்கள்...
 
தனியாக வளரும் குழந்தைகள் வீட்டுக்குள் அமைதியாக வளையவந்தாலும், வெளியிடங்களில் தங்களது இன்னொரு முகத்தைக் காட்டுவார்கள். தேவையில்லாமல் மற்ற குழந்தைகளை அடிப்பது, கடிப்பது என்று கோபத்தை வெளிப்படுத்தலாம். இல்லையென்றால் யாருடனும் ஒட்டாமல் இயல்புக்கு மீறிய அமைதியுடன் இருப்பார்கள். குழந்தைகளின் இந்த இயல்பு மாற்றங்கள் அவர்களின் பெற்றோருக்கேகூட தெரியாமல் போக வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளின் இந்த இயல்பு மாற்றத்தைத்தான் சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
 
ஒரு குழந்தைதானே என்று சிலர் அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுப்பார்கள். தங்களுக்குக் கிடைக்காத அத்தனை வசதிகளும் தங்கள் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தை கேட்காததை எல்லாம் வாங்கி அதன் கையில் திணிப்பார்கள். எல்லா விஷயத்திலும் குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். தங்கள் ஆசைகள் அனைத்தையும் அந்த ஒரு குழந்தை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பார்கள். ஏதாவது ஒரு சமயத்தில் குழந்தை தங்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்றால் அந்த ஏமாற்றத்தையும் குழந்தை மீதே வெளிப்படுத்துவார்கள் என்று பெற்றோர்களின் தவறுகளை பட்டியலிடுகிறார் ஜெயந்தினி.
 
இதன் விளைவு என்னவாக இருக்கும்? இப்படி தொடர்ச்சியாக ஒரே சூழலில் வளர்வதால் அந்தக் குழந்தையின் இயல்பான குணங்கள் தொலைந்து போகின்றன. பெற்றோரின் பாசமும் அதீத கவனிப்புமே சுமையாகிவிடுகின்றன. கோபம், ஆத்திரம், மற்ற குழந்தைகளை டாமினேட் செய்வது, எதற்கெடுத்தாலும் கீழே விழுந்து புரண்டு அடம்பிடித்து அழுவது போன்ற குணங்கள் வளரும். எல்லாவற்றிலும் தானே முதலிடம் பெற வேண்டும், நினைத்தது அனைத்தும் அந்த நிமிஷமே கிடைக்க வேண்டும் என்ற குணத்துடனேயே அந்தக் குழந்தை வளரும். யாருடனும் எந்தவிதமான பகிர்ந்து கொள்ளுதலும் இல்லாமல் சுயநலத்துடன் வளரவும் வாய்ப்பு இருக்கிறது.
 
சிறு வயது முதலே வெளியுலகம் காண்பிக்கப்படாமல் வளர்க்கப்படுவதால் பள்ளியிலோ மற்ற இடங்களிலோ யாரிடம் எப்படிப் பேசுவது, பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் அந்தக் குழந்தை குழப்பமடையும். ஒன்று சண்டையிடும்; அல்லது இயல்புக்கு மீறிய அமைதியுடன் யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கும் என்று ஜெயந்தினி சொல்வதைக் கேட்கும்போது பயம் ஏற்படுகிறது.

ஆனால் அதற்காக அனைவருமே இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை என புன்சிரிப்போடு கூறுகிறார் டாக்டர். வளர்க்கிற விதத்தில் வளர்த்தால் இது தீர்க்கக்கூடிய பிரச்னைதான். அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுப்பது, அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பது & இரண்டுமே கூடாது. வெற்றி, தோல்வி இரண்டையுமே சமமாக ஏற்றுக்கொள்ளப் பழக்க வேண்டும். குழந்தை தெருவில் விளையாடினால்கூட அதை கௌரவக் குறைவாக சிலர் நினைக்கிறார்கள்.
 
உறவுகளைப் பற்றியும், அக்கம் பக்கத்தினர் பற்றியும் சொல்வதுடன், மற்றவர்களுடன் பழகவும் பகிர்ந்துகொள்ளவும் கற்றுத்தர வேண்டும். அவர்கள் விரும்புவது எதுவும் கஷ்டப்படாமல் கிடைக்காது என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்! இப்படி வளர்க்கிற விதத்தில் வளர்த்தால் ஒற்றைக் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும் என்பதில் சந்தேகமில்லை.