Monday, November 14, 2011

கண்களைக் காக்கிற முக்கியமான பயிற்சி


தாய் தன் குழந்தையைக் கொஞ்சும் நேசம் மிகுந்த வார்த்தை- 'என் கண்ணே!' என்பதுதான். பத்து மாதம் சுமந்து பெற்ற தன் அருமைக் குழந்தைக்கு ஈடாக ஒப்பிட, கண்ணைவிட உசத்தியாக எதுவும் அவளுக்குத் தோன்றவில்லை என்றால், கண்ணின் பெருமைக்கு இதைவிட ஒரு நிரூபணம் என்ன இருக்கிறது!

'கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்'
என்கிறார் திருவள்ளுவர்.

கல்வியின் பெருமையை உவமைப்படுத்த அய்யன் வள்ளுவருக்குக் கண்தான் மனத்தில் தோன்றியிருக்கிறது என்றால், கண்களின் பெருமையை இதைவிடவும் எப்படி விளக்குவது!

நமது கண்களைப் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள வும், அதன் திறத்தை இன்னும் அதிகப்படுத்திக்கொள்ளவும், கண்களுக்கு எந்தச் சேதாரமும் வரவிடாமல் காக்கவும், கண்களுக்கான பயிற்சிகள் சிலவற்றை இதுவரை தொடர்ந்தாற்போல் பார்த்து வந்தோம்.

கண்களைக் காக்கிற இன்னொரு முக்கியமான பயிற்சியையும் இப்போது பார்த்துவிடுவோம்.

வழக்கம்போல் வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். முதுகைக் கூன் போடாதபடி, நிமிர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். கழுத்தை எந்தப் பக்கமும் சாய்க்காமல், நேர்க்கோட்டில் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கைகள் இரண்டையும் முகத்துக்கு நேராக நீட்டிக் கொண்டு, அந்த இரண்டு கைவிரல்களையும் கோத்துக் கொள்ளுங்கள். அதாவது, இரண்டு உள்ளங்கைகளும் சேர்ந்திருக்கட்டும்; விரல்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக, இணைந்திருக்கட்டும்; பின்னிக் கொண்டிருக்கட்டும். கட்டைவிரல்கள் மட்டும் பின்னிய விரல்களில் இல்லாமல், தனியே நிமிர்ந்திருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த இரண்டு கட்டைவிரல்களின் நகக்கண்களும் பக்கம்பக்கமாக நெருங்கியபடி இருப்பது போல் வைத்துக் கொள்ளுங்கள். அந்த நகக்கண்கள் உங்கள் கண்களைப் பார்ப்பதுபோல் நேருக்கு நேராக இருக்க வேண்டும். அதாவது, கண்களுக்கு நேரே கைகளை நீட்டிக் கொண்டு, விரல்கள் அனைத்தையும் பிணைத்தபடி வைத்து, கட்டைவிரல்களின் நகக்கண்கள், உங்கள் முகத்தைப் பார்த்தபடி இருப்பதுபோல் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்வை அந்த நகக்கண்களின் மேல் இருக்கட்டும்.

இப்போது, உங்களது மூக்கில் இருந்து சுமார் மூன்று அங்குலத் தொலைவில் கைகள் இருப்பதுபோல், மெள்ள அருகே கொண்டு வந்து, வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து, அந்தப் பெருவிரல்களின் நகக்கண்களின் இணைப்பைக் கூர்ந்து கவனியுங்கள். அந்த இணைப்பிலேயே உங்கள் கண்கள் தனது பார்வையால் இணைந்திருக்கட்டும். இப்போது கைகளை அப்படியே மெள்ள மெள்ள, பழைய இடத்துக்குக் கொண்டு செல்லுங்கள். அதாவது, கைகளின் பிணைப்பை விலக்காமல், மூக்கில் இருந்து மூன்று அங்குல இடைவெளியில் இருந்த கைகளை இன்னும் இடைவெளியை ஏற்படுத்துவது போல், நீட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயம்... இதைச் செய்யும்போது நகக்கண்களுக்கும் உங்கள் கண்களுக்குமான தொடர்பு விலகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அதாவது, நகக்கண்களை உங்கள் பார்வை தொட்டுத் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

இணைந்த கைகள் இணைந்தபடி இருக்க, மூக்கில் இருந்து மூன்று அங்குல இடைவெளிக்கு அந்தக் கைகளைக் கொண்டு வருவதும், பின்னர் நீட்டிக் கொள்வதுமாக, மெள்ள, எந்த அவசரமும் இல்லாமல், மெல்லிய பதற்றம்கூட இல்லாமல், நிறுத்தி நிதானமாகச் செய்யுங்கள். கைகளை நீட்டுவதும் கொஞ்சம் மடக்குவதும் என இதைச் சுமார் ஐந்து முறை செய்யுங்கள். நினைவிருக்கட்டும்... அப்படிச் செய்கிறபோது, பெருவிரல்களின் நகக்கண்களின் இணைப்பின் மீதே, சற்றும் விலகாமல் உங்கள் பார்வை பதிந்திருக்க வேண்டும்.

கண்களுக்கான நிறைவுப் பயிற்சி இது. கண்களின், அதன் பயன்பாடுகளின் அருமை பெருமைகளையெல்லாம் அறிந்து உணர்ந்து, அந்தக் கண்களை பலப்படுத்துகிற, பார்வைக்கு உரமூட்டுகிற நிறைவுப் பயிற்சியில் ஆழ்ந்து ஈடுபடுவது, கண்களுக்கும் கண்களால் நமக்கும் நன்மைதானே?

'கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள'

காதலியின் பெருமையை காதலன் சொல்வதாக வள்ளுவப் பெருந்தகை எழுதிய திருக்குறள் இது. காதல் என்பது ஆசைப்படுவது; அன்பு செய்வது; நேசத்துடனும் கனிவுடனும் பார்ப்பது! அப்படியரு கனிவுடன், நேசத்துடன், பிரியத்துடன், மிகுந்த வாஞ்சையுடன் நாம் நம் உடலைப் பார்க்கத் துவங்கிவிட்டால் எப்படியிருக்கும்? எந்த நோய்களும் தாக்காதவாறு, பூரண பொலிவுடன் விளங்கும் நம் தேகம். என்ன, உண்மைதானே!

ஐம்புலன்களையும் காதலிக்கத் துவங்குங்கள். நம் விருப்பத்துக்கும் நேசிப்புக்கும் உரியவர் களைக் கொண்டாடுவதுபோல், மதிப்பது போல், நம் உடலையும் மதித்து நேசித்தால், உடலானது எந்தச் செய்கூலியும் சேதாரமும் இன்றிச் சீராக இயங்கும். அதிலும், 'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து...' என்பதில் முதலாவதாக இடம்பிடித்த கண்களை மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பதும் பராமரிப்பதும் நம் கடமை!

கண்களுக்கான நிறைவுப் பயிற்சியைச் செய்துவிட்டீர்களா?

இந்தப் பயிற்சிகளைச் செய்வதால், கண்மணி எனும் பாப்பாவைச் சுற்றியுள்ள தசைகள் சரிவர இயங்க ஆரம்பிக்கும். கண்களில் உள்ள லென்ஸின் வடிவம் சீராகிவிடும். தசைகள் இயங்கி, லென்ஸின் வடிவம் முழு வடிவத்துக்கு வந்துவிட்டாலே, கண்களின் பார்வையில் பிரகாசம் பரவிவிடும்.

இந்தப் பயிற்சிகளை எவரொருவர் தொடர்ந்து செய்து வருகிறாரோ, அவர்கள் ஆயுட்காலம் வரை, மூக்குக் கண்ணாடி அணியவேண்டிய அவசியமே ஏற்படாது. கண்களில் நோய்க்கு இடமில்லை; எரிச்சல் எட்டிக் கூடப் பார்க்காது!

சரி, நிறைவுப் பயிற்சி முடிந்ததுமே, சட்டென்று எழுந்துவிடாதீர்கள். இதுவரை பயிற்சி கொடுத்த கண்களை இமைகளால் மூடி, அப்படியே அதன் மேல் உள்ளங்கைகளாலும் பொத்தி மூடிக் கொள்ளுங்கள். இப்படிக் கண் பொத்திய நிலையில் சுமார் ஒரு நிமிடம் வரை இருங்கள்.

ஒரு நிமிடம் கழித்து, அந்தக் கைகளை விடுவியுங்கள்; இமைகளைத் திறந்து, கண்களுக்கு முழு விடுதலையையும் கொடுங்கள். கண்களிலும் பார்வையிலும் தெளிவு ஒன்று பீடமிட்டு அமர்ந்திருப்பதை உங்களால் உணரமுடியும். புதிய கண்களால், இந்த உலகைப் பார்ப்பது போன்றதொரு பரவசம் கண்களில் இருந்து தேகம் முழுக்கப் பரவும்.

இந்தப் பரவச அனுபவத்தை உணர்ந்து பார்த்தால்தான் உண்மை புரியும், உங்களுக்கு!