உலக பார்வை தினம் என்று அறிவிப்பதன் முக்கிய நோக்கம், பொதுமக்கள் மத்தியில் கண் நலம் பற்றிய விழிப்பு உணர்வை மேம்படுத்துவதேயாகும்.
இதனைக் கருத்திற்க்கொண்டு உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் கண் மருத்துவர்கள், மருத்துவ சமூகவியலாளர்கள் மற்றும் கண்ணியாலாளர்கள் கண் நலம் பற்றிய செய்திகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்கள்.
உலக சுகாதார நிறுவனத்தின் 2010 வருட ஆய்வின்படி உலகம் முழுவதிலும் 285 மில்லியன் பேர் கண் பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 246 மில்லியன் பேர் 'லோ விஷன்' என்று சொல்லக்கூடிய மிகக்குறைந்த பார்வை என்னும் குறை பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
உலகில் பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிக அளவில் தாங்கிக் கொண்டிருக்கும் தேசம் நமது பாரத தேசம்.
உலக பார்வை தினத்தையொட்டி கண் நலம் பற்றிய சில முக்கியமான செய்திகளைத் தெரிந்து கொள்வோம்:
 
 1. கண் புரை: 
 
 இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிக அதிகமான பார்வையிழப்புக்குக் காரணம் கண்  புரை.கண்புரை என்பது வயோதிகம் காரணமாக நமது கண்ணில் உள்ள லென்ஸின்  ஊடுருவும் தன்மை குறைவதேயாகும். கண்புரை விபத்துகளினாலும், நீரிழிவு  காரணமாகவும் மேலும் சில காரணங்களாலும் வரலாம். கண் புரை என்பது முற்றிலும்  குணப்படுத்தகூடிய குறைபாடே. 
 
 மேலும் கண்புரையை ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த  முடியும். அறுவை சிகிச்சை மட்டுமே கண் புரைக்கான தீர்வு. மேலும் கண்  மருத்துவத் துறையில் தற்போது பயன்படுத்தப்படும் முன்னேறிய மிகச்சிறந்த  தொழில் நுட்பம் கண் புரையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த  வரப்பிரசாதமாக உள்ளது.
 
 கண்புரை ஆபரேஷன்  செய்வதற்க்கு மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை  பெற வேண்டிய அவசியமில்லை. சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஏழை  எளியவர்களுக்கு இலவசமாகவே சிகிச்சை அளிக்ப்படுகிறது. மாதம் ரூபாய்  8,500-க்கு குறைவான குடும்ப வருமானம் உள்ளவர்களுக்கு கட்டணச் சலுகைகளில்  கேட்டராக்ட் ஆபரேஷன் செய்யப்படுகிறது. 
  
 2. க்ளகோமா எனப்படும் கண்நீர் அழுத்த நோய்: 
 
 'க்ளாக்கோமா' என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை  ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்னைகளின் தொகுப்பு. உலக  அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், 'க்ளாக்கோமா' இரண்டாம்  இடத்தில் இருக்கிறது. 
 
 நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண  நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது.  கண்ணின் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை  தாண்டும்போது, 'க்ளாக்கோமா' ஏற்படுகிறது.  "ஆரம்பக்கட்ட நிலையிலேயே  கண்டுபிடித்து உரிய சிகிச்சையை வழங்கினால், குணம் பெறலாம். ஆனால்,  படிப்படியாகவே இதன் பாதிப்பு ஏற்படுவதால், தங்களுக்கு இந்நோய் இருக்கிறது  என்பதே தெரியாதவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் தான்  மருத்துவர்கள் 'க்ளாக் கோமா'வை 'நமக்கே தெரியா மல் நம் கண்ணுக்குள்  மறைந்திருந்து தாக்கும் கள்வன்' என்கிறார்கள். 50 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கும், மரபுக் காரணங்களால், ஏற்கெனவே 'க்ளாக்கோமா' நோயினால்  பாதிக்கப்பட்டவர்களின் ரத்த சொந்தங்களுக்கும், சர்க்கரை வியாதி  உள்ளவர்களுக்கும் மற்றும் அதிக கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும்  'க்ளாக்கோமா' பாதிப்பு ஏற்படலாம். 
 
 தலைவலி, கண்வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு,  படிப்படியான பார்வை இழப்பு போன்ற கண் பிரச்னைகள், 'க்ளாக்கோமா'வுக்கான  அறிகுறிகள். பொதுவாக நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் முழுமையான கண்  பரிசோதனை செய்துகொள்வது நல்லது. 
 அடிக்கடி கண் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், கண்ணின் உட்பகுதிகளை முழுமை  யாக அறியும் சில சிறப்புப் பரிசோதனையின் மூலம், 'க்ளாக்கோமா' பாதிப்பை  அறியலாம். நோயின் படிநிலையைப் பொறுத்து சொட்டு மருந்தில் இருந்து அறுவை  சிகிச்சை வரை இதற்கான சிகிச்சைகள் விரிகின்றன. எனவே, கண் மருத்துவருடன்  இணைந்து செயலாற்றுவதன் மூலம் பார்வையை பாதுகாக்க முடியும். 
 
 3. நீரிழிவு விழித்திரை நோய்:
  
 பாரதம் நீரிழிவின் தலைநகரமாக உள்ளது. நீரிழிவின் தாக்கத்திற்குள்ளானவர்கள்,  வருடம் ஒரு முறை கண்டிப்பாக முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வதன்மூலம்  நீரிழிவு விழித்திரை நோயினால் பார்வையை இழப்பதைத் தடுக்க முடியும். மேலும்  பெற்றோர்களுக்கு அல்லது பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு நீரிழிவு   இருக்குமேயானால், அவர்களது சந்ததியினர் தமது முப்பது வயது முதல்,  வருடம்  ஒரு முறையேனும், தமக்கு நீரிழிவு பிரச்னையிருக்கிறதா என்பதை தொடர்ந்து  கண்காணிக்க வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனைப்படி வாழ்க்கை முறையை  அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நீரிழிவு விழித்திரை நோய் உட்பட  நீரிழிவு சார்ந்த உடல் நலப் பிரச்னைகளை தவிர்க்க வாய்ப்புள்ளது.
 
 4. சுய மருத்துவம் :
 
 கண்களில் அடிபட்டாலோ அல்லது ஏதாவது தொற்றுக் கிருமிகளால் கண்கள் சிவந்து  போனாலோ,  மருந்துக்கடையில் "கண் சொட்டு மருந்து கொடுங்கள்" என்று ஏதாவது  மருந்தினைப் போடுவது கண்களுக்கு ஆபத்து. குறிப்பாக மழைக்காலங்களில் பொதுவாக  "ஹலோ" சொல்லும் "மெட்ராஸ் ஐ"க்கு இப்படி மருந்துக்கடையில் சொட்டு மருந்து  கேட்டு வாங்கிப்போடுவதும் ஆபத்து.
 
 5. உணவுப்பழக்கம் : 
 
 சரியான  உணவுப்பழக்கம் கண் நலத்துக்கு மிக மிக அவசியம். இது குழந்தைப்  பருவத்திலிருந்தே கவனிக்க வேண்டிய குறிப்பு. பிறந்த குழந்தைகளுக்கு  தாய்ப்பாலுக்கு மிஞ்சிய வேறேதுமில்லை. மற்ற உணவுகள் கொடுக்க ஆரம்பித்தவுடன்  கவனிக்க வேண்டிய முக்கியமான குறிப்புகள்: 
 * ஜெராஃப்தால்மியா எனப்படும் குழந்தைகளின் கண்கள் உலர்ந்து போகச் செய்யும்  பிரச்னைக்கும் மாலைக் கண் நோய்க்கும் முக்கியமான காரணம் வைட்டமின் ஏ  சத்துக்குறைபாடுதான். 
 
 வைட்டமின் ஏ - பால், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள்,பப்பாளி, முட்டை மற்றும் கேரட் போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.
 
 * வைட்டமின் பி : பார்வை நரம்பின் செயல் பாட்டிற்க்கு காரணமாக இருப்பது  வைட்டமின் பி.வைட்டமின் பி - அரிசி, கோதுமை, முளை கட்டிய தானியங்கள்,  பீன்ஸ் மற்றும் முட்டை போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.
 
 * வைட்டமின் சி - நமது கண்ணில் உள்ள ரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்திற்க்கு  வைட்டமின் சி மிகவும் அவசியம்.வைட்டமின் சி ஆரஞ்சு, நெல்லி, முட்டைக்கோஸ்,  உருளைக்கிழங்கு, கொய்யா, எலுமிச்சை மற்றும் தக்காளி போன்றவறில் தேவையான  அளவு இருக்கிறது.
 
 6. குழந்தைகளும் கண்ணாடியும்:
  
 உங்கள் குழந்தை கண்ணாடி அணிய வேண்டிய நிலையிலிருந்தால் அவர்கள் கண்ணாடி  அணிவதை ஊக்குவியுங்கள். அய்யோ நம் குழந்தை இந்த வயதிலேயே கண்ணாடி அணிய  வேண்டியதாகிவிட்டாதே என்று  நீங்களே புலம்பாதீர்கள்.
 
 குழதைகளுக்கும் காய்ச்சல் வரும், வயதானவர்களுக்கும் காய்ச்சல் வரும் என்பதை  மறந்து விடாதீர்கள். கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக வருடம் ஒரு முறை கண்  பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எனெனில் பார்வைத் திறன் மாறியிருக்கலாம்.  தவறான கண்ணாடியை அணிவதும் கண்களை பாதிக்கும்.
 
 7. கண்களுக்கான முதல் உதவி ஏற்பாடுகள் :
 
 அ) கண்களில் தூசி போன்ற ஏதேனும் விழுந்துவிட்டால், அவற்றை எடுப்பதற்க்காக  கண்களைக்  கசக்காதீர்கள். கண்களை லேசாக திறந்து மூடினாலே கண்ணீர்  பெருக்கெடுத்து அவற்றை தானே  வெளியேற்றிவிடும். உறுத்தல் அதிகமாக  இருக்குமேயானால் சுத்தமான தண்ணீரினால் கண்களை சுத்தம் செய்வதன் மூலம்  தூசுகளை அகற்றிவிடலாம்.
 
 ஆ) கண்களில் ஏதேனும் ரசாயனப் பொருட்கள் அல்லது ஆசிட் தெறித்துவிட்டால்,  கண்ணில் சுத்தமான தண்ணீரினால் கண்களின் எரிச்சல் நிற்க்கும் வரை அலம்ப  வேண்டும். பின் உடனடியாக கண் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது  நல்லது.
இ) வெடி விபத்தினால் முகத்தில் காயம்  ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர்  விட்டு கழுவவே கூடாது. சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி  உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மேலும் தீக்காயம் ஏதேனும்  கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட்,  பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மெண்ட் ஆகியாவற்றைப் போடக்கூடாது. இதனால்  எந்த அளவுக்குக் காயம் ஏற்ப்பட்டுள்ளது என்பதை சரியாகத்ச் தெரிந்து  கொள்ளமுடியாமல் போய்விடும், மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம்  ஏற்பபடும்.
 
 ஈ) தொழிற்சாலை கண் விபத்துக்கள்: 
 
 தொழிற்ச்சாலைகளில் பணியாற்றும் போது கண்களில் ஏதேனும் துரும்புகள்  விழுந்துவிட்டால். அவற்றை நாமே எடுக்க முயற்சி செய்யக்கூடாது. கண் மற்றும்  கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு அதிகமாவதற்க்கு வாய்ப்பு உண்டு.  ஈரமான துணி ஒன்றினை கண்ணை அழுத்தாதவாறு வைத்து மூடிக்கொண்டு உடனடியாக கண்  மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அப்போது கண்ணில் விழுந்த பொருளின் மாதிரி  இருந்தால் அதனையும் எடுத்டுச் செல்ல வேண்டும். கண்ணில் சுற்றுப்பகுதி  மரத்துப்போவதற்கு மருந்து போட்டுவிட்டு கண்ணில் விழுந்த பொருளை மிகவும்  இலாகவகமாக கண் மருத்துவர் எடுத்துவிடுவார்.
 
 8. கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்: 
 
 கணிணியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பணியாற்றுபவர்கள் 20 - 20 - 20  ஃபார்முலா வினை  பயன்படுத்தினால் சில பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.  அதாவது கணிணியில் தொடர்ந்து  
 பணியாற்றும்போது 20 நிமிடத்துக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள  பொருட்களை 20 நொடிகள் பார்ப்பதும், அல்லது 20 நொடிகள் கண்களை மூடி ரிலாக்ஸ்  செய்வதும், 20 நொடிகளுக்கு ஒருமுறை  கண்களை இமைப்பதும் மிக உதவியாக  இருக்கும். ஒருவேளை உங்களுக்கு அடிக்கடி தலைவலி, வாந்தி, குமட்டல்  இருக்குமேயானல் உடனடியாக கண் மருத்துவரிடம் முழுமையான கண் பரிசோதனை  செய்வதன்மூலம் பர்வையிழப்பைத் தடுத்துக் கொள்ளலாம்.
 
 9. நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் குறிப்பாக பகல் நேரங்களில்  வாகனம் ஓட்டுபவராகவும் இருந்தால் புற ஊதாக்கதிர்களைத் தடுக்கக்கூடிய குளிர்  கண்ணாடியை அணிந்து கொள்வது நல்லது. முக்கியமான விஷயம், ஒரு கண்  மருத்துவரிடம் அல்லது கண்ணியலாளரிடம் கண் பரிசோதனை செய்து கொண்டபின் அவர்  பரிந்துரைக்கும் புற ஊதாக்கதிர்களைத் தடுக்கக்கூடிய கண்ணாடியை அணிந்து  கொள்வது நல்லது.
 
 கண்தானம் செய்வீர்:
 
 10. தானத்தில் சிறந்தது கண் தானம். கார்னியல் பார்வைக்கோளாரினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள் தானமாகக் கிடைத்தால் மட்டுமே செய்யக்கூடிய  கார்னியா மாற்று ஆபரேஷன் மூலமே மீண்டும் பார்வை கிடைக்க முடியும்.  அப்படிப்பட்டவர்களுக்கு பார்வை கிடைப்பதற்க்காக கண்கள் தானமாக  தேவைப்படுகிறது.
 
 நமக்கு தெரிந்தவர்கள் யாரேனும் மரணமடைந்துவிட்டால், மரணமடைந்தவரின்  உறவினரைச் சந்தித்து,  மரணமடைந்தவரின் கண்களை தானமாக வழங்குமாறு  ஊக்குவித்து ஆறு மணி நேரத்துக்குள் அவர்களது கண்களை தானமாக வழங்கினால் அது  ஒரு புண்ணியமான காரியமாகும்.
 
 *
 
 கட்டுரையாளர்: அ.போ. இருங்கோவேள், 
 மருத்துவ சமூகவியலாளர்
 சங்கர நேத்ராலயா, சென்னை 600 006.
 இ-மெயில்: irungovel@gmail.com
 

 
