சாதாரண தலைவலி, இருமல் வந்தாலே பர்ஸ் பழுத்துவிடும் அளவுக்கு செலவாகிறது. மூலிகை, கைவைத்தியம் என நம் முன்னோர்கள் பின்பற்றிய மருத்துவ முறைகளை மறந்துவிட்டதால்தான் சின்னச் சின்ன வியாதிகளுக்குகூட பெரிய அளவில் செலவுக்கு ஆளாகிறோம். மூலிகைகள் அரிதாகிவிட்ட காலத்தில் அவற்றை எங்கே தேடுவது என நீங்கள் கேட்கலாம். வீட்டிலேயே அவற்றை வளர்க்க வழி இருக்கிறது.
'மூலிகைச் செடிகளைத் தொட்டியில்தான் வைத்து வளர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உடைந்த பிளாஸ்டிக் வாளி, பழைய தகர டப்பா, மரப் பெட்டி, சாக்கு, பிளாஸ்டிக் பை என்று பலவற்றையும் பயன்படுத்தி வளர்க்கலாம். இப்போது செடி வளர்ப்பதற்கு என்றே பிரத்யேகமான பிளாஸ்டிக் பைகள் கிடைக்கின்றன.
இரண்டு பங்கு செம்மண் (அ) வண்டல் மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு எரு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, செடியை நட இருக்கும் கலனில் நிரப்ப வேண்டும். இம்முறையில், ஐந்து கிலோ கலவையைத் தயார் செய்ய சுமார் 100 மட்டுமே செலவாகும். துளசிச்செடி 5, இன்சுலின் செடி 15 என செடியைப் பொறுத்து விலை மாறுபடும்.
சூரிய ஒளி படும் இடத்தில் செடியை வளர்க்க வேண்டும். ஈரப்பதம் குறையும்போது மட்டும் தண்ணீர் ஊற்றினால் போதும். கோடைகாலத்தைப் பொறுத்தவரை ஒருநாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீரே ஒரு செடிக்குப் போதுமானது. தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்றினால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். செடி வளர்க்கும் கலனில், தேவையற்ற தண்ணீர் வடிவதற்கு வசதியாக துவாரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
செடி நட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு உரமிட வேண்டும். அதன்பிறகு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் செடியின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு 20 முதல் 40 கிராம் வரை கலப்பு உரம் போடலாம். கலப்பு உரம் போட்ட ஒரு மாதத்துக்குப் பின்னர் 100 கிராம் மண்புழு உரம் போட வேண்டும். உரம் போட்டபின் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம். மழைக் காலங்களில் உரமிடத் தேவையில்லை.
செடிகளில், பூச்சிகளின் பாதிப்பு இருப்பதாகத் தெரிந்தால், ஒரு லிட்டர் தண்ணீரில் நான்கு மில்லி வேப்ப எண்ணெய், இரண்டு மில்லி ஒட்டும் திரவம் (ஜிமீமீ றிணீறீ) கலந்து செடியின் மீது தெளிக்க வேண்டும். ஒட்டும் திரவம் கிடைக்காவிட்டால் காதிபவன்களில் கிடைக்கும் காதி சோப்பை புளிய விதை அளவுக்குப் பயன்படுத்தலாம்.
செடி ஓரளவு வளர்ச்சி அடைந்தபிறகு அதில் உள்ள இலைகளைப் பறித்துப் பயன்படுத்தலாம்!'' என்கிறார்கள் இருவரும்.
வீட்டிலேயே மூலிகைகளை வளர்க்கும்போது ஆஸ்பத்திரி செலவு, காத்திருப்பு என அல்லாட வேண்டியது இருக்காது. மூலிகைகளின் பயன்பாடு குறித்து சித்த மருத்துவர் அருண் சின்னையாவிடம் பேசினோம். 'சளி, இருமல், தலைவலி, தலைபாரம் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த மருந்து துளசி. இதன் இலையை நன்றாகக் கழுவி அப்படியே சாப்பிடலாம் அல்லது சாறெடுத்தோ, கஷாயம் வைத்தோ குடிக்கலாம்.
ரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை நீக்கி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வல்லமை வாய்ந்தது மணத்தக்காளி. இதன் இலை, பழங்கள் குடல்புண் மற்றும் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வல்லாரை நினைவாற்றலை மேம்படுத்தும். இதயம் தொடர்பான நோய்கள் குணமாகும். இந்த இலையை பச்சையாகவும் சாப்பிடலாம்; துவையல், கூட்டு, பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
கற்றாழை உடலை இளமையாக வைத்திருக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
புதினாக் கீரை ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். புதினா ஜூஸ் குடித்தால், கொழுப்பு கரையும்.
திருநீற்றுப்பச்சை இலையுடன் சிறிது உப்பு சேர்த்து கசக்கி, அந்தச் சாறை நுகர்ந்தால் நாள்பட்ட ஒற்றைத்தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.
கரிசலாங்கண்ணி கீரை இரும்புச்சத்து நிறைந்தது. கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு இது சிறந்த மருந்து. நினைவுத்திறனை அதிகப் படுத்தும். இதை துவையல் செய்தோ அல்லது கஷாயம் வைத்தோ சாப்பிடலாம்.
பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பலமாகும். எலும்பு மற்றும் மூல நோய்களுக்கு நல்ல நிவாரணி பிரண்டை. இதை சட்னி அல்லது துவையல் செய்து சாப்பிடலாம்.
பொன்னாங்கண்ணி கீரை தேகத்தைப் பொலிவாக்கும். கண்பார்வையை அதிகப்படுத்தும். பொடுதலைக் கீரை மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்து!'' என்றவர், ''துவையல், குளம்பு, சட்னி என மூலிகைகளை உணவாக்கி சாப்பிடுவதன் மூலம் வியாதிகளை முன்கூட்டியே தவிர்க்கலாம். செலவையும் குறைக்கலாம்!'' என்றார் தீர்க்கமாக.