ஷூரிட்டி ஜாக்கிரதை!
வங்கிக்குச் சென்றிருந்த நான், என் டோக்கன் நம்பர் வரும்வரை காத்திருந்தேன். அப்போது என் அருகில் வந்து அமர்ந்த ஒரு பெண், என் மாமியாரின் பெயரைச் சொல்லி, ''நீங்கள் அவர் மருமகள்தானே..?'' எனக் கேட்டு சகஜமாகப் பேச ஆரம்பித்தார். எங்கள் ஏரியாவில் அவரை ஓரிருமுறை பார்த்த ஞாபகம் இருந்ததால், நானும் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது மேனேஜர் அறையில் இருந்து அவரை அழைக்க, உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்தவர், ''பாப்பா... உன்னை மேனேஜர் கூப்பிடறாரு வாயேன்...'' என்று சொல்லி என்னையும் அழைத்துச் சென்றார். மேனேஜர் சில
ஃபார்ம்களைக் கொடுத்து என்னைக் கையெழுத்துப் போடச் சொல்ல, திடுக்கிட்ட நான், எதற்கென்று கேட்டேன். அவரோ, ''மேடம்... இவங்க வீட்டுப் பத்திரத்தை வைத்து கடன் வாங்கறாங்க. ஷூரிட்டிக்கு (ஜாமீன்) உங்களைக் கூட்டி வந்ததாச் சொன்னாங்க...'' என்றார். நான் அதிர்ச்சியாக, அந்தப் பெண்ணோ, ''ஒரே ஒரு கையெழுத்துதான் பாப்பா. ஒண்ணும் ஆகாது... போடு. ஷூரிட்டி போட வர்றேன்னு சொன்ன ஆள் வரல. அதான்..!'' என்று என்னை நிர்ப்பந்திக்க, கோபத்துடன் மறுத்து வெளியேறினேன்.
சூழ்நிலை நிர்ப்பந்தம், பழகிய பழக்கம் இதுபோன்ற காரணங்களால், இப்படி கையெழுத்துப் போட்டுவிட்டு, பிறகு சிக்கித் தவித்த பலருடைய அனுபவங்கள் எனக்குத் தெரியும். அதனால்தான் நான் கறாராக மறுத்துவிட்டேன். நான் செய்தது சரிதானே தோழிகளே!
ஆரோக்கிய அலட்சியம்... அந்திம அவஸ்தை!
உடல்நலம் குன்றியிருந்த உறவினரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் பணி ஓய்வு பெற்று ஓராண்டு ஆகியிருந்தது. இளவயது முதலே அலுவலக வேலையோடு, ஓவர் டைம் என உடல் வருத்தி உழைத்த அவர், தனக்கான தேவைகளை மிகவும் குறைத்துக்கொண்டு வாழ்ந்தார். பெண்ணும், பிள்ளையும் மணமாகி வெளிநாடு சென்றுவிட, பணி ஓய்வுக்குப் பின் இப்போது மனைவியுடன் தனித்து வாழும் அவருக்கு உடல்நோவுகள் வரிசை கட்டுவதால்... உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நொந்து போய் இருக்கிறார். ''நான் தப்பு செய்துவிட்டேன். அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் செய்திருந்தால், என் உடல் இந்தளவுக்குத் தளர்ந்திருக்காது. இளமையில் பணம் சம்பாதிக்க, பிள்ளைகளைப் படிக்க வைத்துத் திருமணம் முடிக்க, வீடு கட்ட என்றே ஓடினேனே தவிர... நல்ல சாப்பாடு, ஓய்வு, சந்தோஷங்களை எல்லாம் தியாகம் செய்துதான் ரிட்டயர்மென்ட் வரை வாழ்ந்தேன். இப்போது பணம் இருக்கிறது. நல்லது, கெட்டது என்று சாப்பிடமுடியவில்லை. வயோதிகத்தில் கோயில், குளம், உறவுகள் எனப் போய் வரலாம் என்ற என் ஆசையை, உடல்நிலை சுக்குநூறாக்கிவிட்டது. என் வாழ்க்கையை நான் வாழவே இல்லை எனத் தோணுகிறது!'' என்று வருந்துகிறார்.
பணம் பணம் என்று ஓடுபவர்கள், ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தினால்... அந்திமம் அவஸ்தைதான்!
ரயில் பயணத்து டிப்ஸ்!
அந்த ரயில் பயணம் எனக்கு இனிமை ஆனது... எனது இருக்கைக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு குழந்தைகளால். 4 மற்றும் 6 வயதான அந்த இரண்டு குழந்தைகளும் அத்தனை அழகாகப் பேசியதுடன், தன் அம்மாவுக்கு அதிக தொந்தரவு கொடுக்காமல் சமர்த்தாக இருந்தன. பயணத்தின் இடையே சூடான மசால் தோசை விற்பனைக்கு வர, குழந்தைகள் அதை வேண்டுமென்று கேட்டதால், அதை வாங்கிய அம்மா, அவர்களுக்கு ஊட்டிய விதம்... நன்று. தன் கைப்பையில் இருந்து இரண்டு பேபி 'பிப்'களை (குழந்தைகள் சாப்பிடும்போது சிந்தும் உணவால் டிரெஸ் பாழாகிவிடாமல் இருப்பதற்காக, கழுத்தில் கட்டிவிடுவது) எடுத்தவர், இரண்டு குழந்தைகளுக்கும் கட்டிவிட்டார். வண்டியின் ஓட்டத்தால் உணவு சிந்தினாலும், அக்குழந்தைகளின் உடையில் துளியும் படவில்லை. பயணங்களில் மட்டுமல்ல, விசேஷங்களுக்குச் செல்லும்போதும் அங்கு பந்தியில் இவர்களை 'பிப்' கட்டி அமரவைத்து விடுவதாகவும், இதனால் விலையுயர்ந்த உடைகளில் கறைகள் ஏற்படுவதை தவிர்ப்பதாகவும் அப்பெண் கூறியதை, அம்மாக்களுக்கு அவசியமான டிப்ஸ் என்று குறித்து வைத்துக் கொண்டேன் மனதில்!
'பின்' எடுக்கும் முன்..!
தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். கல்லூரியில் படிக்கும் என் உறவுக்காரப் பெண், எனக்கு அடுத்த ஸீட்டில் அமர்ந்திருந்தாள். நாங்கள் அனைவரும் படத்தில் லயித்திருக்க, அவளோ அவஸ்தையாக இருந்தாள். நான் என்னவென்று விசாரிக்க, பின் ஸீட்டில் இருப்பவன் தன் ஸீட்டில் காலை வைத்து தொந்தரவு செய்வதாகக் கூறினாள். அவனை கண்டிக்கிறேன் என ஆவேசமான என்னை, ''வீண் பிரச்னை வேண்டாம். வேற ஒரு வழி இருக்கு...'' என்றவள், ஒரு சேஃப்டி பின் எடுத்தாள். ''இப்போ குத்துற குத்துல திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி திணறுவான் பாருங்க...'' என்றவாறு அவள் தயாராக, நான் அந்தப் போக்கிரி அலறப்போவதைக் கண்குளிரப் பார்க்க பின் ஸீட் பக்கம் திரும்பினேன். 'ஐயோ!' என்று அலறியது... நான். என் உறவுக்காரப் பெண்ணோ, சம்பந்தமில்லாமல் நான் அலறுவதைப் பார்த்து விழிக்க, அவளிடம் பின் ஸீட்டைக் காட்டினேன். அங்கே ஒரு ஐந்து வயதுக் குழந்தை சாய்ந்தபடி உட்கார்ந்து, இவள் ஸீட்டில் கால்வைத்து விளையாடிக் கொண்டிருந்தது! வார்த்தைகள் அற்று வெடித்துச் சிரித்தோம்!
அருகில் அமர்ந்திருந்தவர்கள், சீரியஸான ஸீனில் சிரிக்கும் எங்களை விநோதமாகப் பார்த்தது, டெயில் பீஸ்!