Saturday, October 29, 2011

வங்கி அறிமுகக் கையெழுத்து போடுவதற்கு முன்...


கட்டுரையைப் படிப்பதற்கு முன்பாக இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு அதன் பிறகு படியுங்கள்...

முதல் கேள்வி: நீங்கள் வங்கியில் சேமிப்புக் கணக்கு ஆரம்பித்தபோது உங்களுக்காக யார் அறிமுகக் கையெழுத்துப் போட்டார்? அவரது பெயர் நினைவிருக்கிறதா?

இரண்டாவது கேள்வி: நீங்கள் யார் யாருக்கு அறிமுகக் கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறீர் கள்? அவர்கள் இப்போது எங்கு, எப்படி இருக்கிறார்கள் என்று தெரியுமா?

சரி, இப்போது மேட்டருக்கு வருவோம்... கோவையைச் சேர்ந்தவர் நரசிம்மன். வங்கியில் பணமெடுக்கப் போயிருந்த சமயம், எப்போதோ சந்தித்த ஒருவர் ஒரு அப்ளிகேஷனை நீட்டி, ''வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப் போகிறேன்... அதற்கு ஒரு அறிமுகக் கையெழுத்து வேண்டும், அவ்வளவுதான்!'' என்று கேட்கவும், ''வெறும் அறிமுகக் கையெழுத்துதானே, போட்டா போச்சு!'' என்று எல்லோரையும் போலவே போட்டுக் கொடுத்தார் நரசிம்மன்.

என்றோ ஒரு நாள் போட்டுக் கொடுத்துவிட்டு மறந்துபோன அந்த கையெழுத்து இன்றைக்கு அவரைத் தூங்கவிடாமல் பதற அடித்துக் கொண்டிருக்கிறது! 'நீங்கள் அறிமுகம் செய்த நபர் வங்கியில் பர்சனல் லோனாக இரண்டு லட்ச ரூபாய் வாங்கிவிட்டு கம்பி நீட்டிவிட்டார். அதனால் அந்தப் பணத்தை நீங்கள்தான் கட்ட வேண்டும்' என்று தகவல் வந்தால் யார்தான் பதற மாட்டார்கள்? இவ்வளவுக்கும் அவர் ஏதோ கேரன்டி கையெழுத்து போட்டுக் கொடுத்திருந்தாலாவது பரவாயில்லை; சேமிப்புக் கணக்கு ஆரம்பிப்பதற்காக போட்டதுதான்! சாதாரண உதவிதானே என்று நினைத்தால் அது பின்னாளில் எப்படி வில்லங்கமாக மாறிவிட்டது பார்த்தீர்களா?

அறிமுகக் கையெழுத்து போடுவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து முன்னணி வங்கி அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்...

ஏன் தேவை அறிமுகம்?

''வங்கிக் கணக்கு ஆரம்பிக்க முகவரிச் சான்றிதழ், அடையாள அட்டை, புகைப்படம் மற்றும் அறிமுகதாரர் இந்த நான்கும் முக்கியம். மற்ற மூன்றும் இருந்து அறிமுகதாரர் இல்லை எனில் வங்கியில் கணக்கு தொடங்க முடியாது. இதற்கெல்லாம் காரணம், நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மோசடிகளும் ஏமாற்று வேலைகளும்தான்'' என்றவர்களிடம், ''அறிமுக கையெழுத்திற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் தருகிறீர்கள்?'' என்று கேட்டோம்.

''வங்கிக்கு வருகிற முதலீடு நியாயமான முறையில் சம்பாதித்ததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இந்த அறிமுகக் கையெழுத்து உதவும். கணக்கு தொடங்குபவர் மோசடி பேர்வழி, தீவிரவாதத்திற்குத் துணை போகிறவர் என்றால், அறிமுக கையெழுத்து போட யாராக இருந்தாலும் தயங்குவார்கள். தவிர, வங்கிக் கணக்கு புத்தகம் இப்போது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மாதிரி ஒரு அடையாளச் சான்றிதழாக மாறிவிட்டது. ஆன்லைனில் ரயில் மற்றும் விமான முன்பதிவு செய்ய போகும்போது அடையா ளத்துக்கு வங்கிக் கணக்கு புத்தகத்தைகூட காட்ட முடியும். எனவே, இவர் நம்பிக்கைக்கு உரியவர்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே, வங்கியில் ஏற் கெனவே கணக்கு வைத்திருக்கும் ஒருவரிடம் அறிமுக கையெழுத்து கேட்கிறோம்'' என்றார்கள்.  


அடிப்படை தகுதிகள்!

யார் யாரெல்லாம் அறிமுக கையெழுத்து போடலாம்?

18 வயது கடந்தவராக இருக்க வேண்டும்.

வங்கிக் கணக்கு தொடங்கி குறைந்தபட்சம் ஆறு மாதம் ஆகி இருக்க வேண்டும். மேலும், தொடர்ந்து பணப் பரிவர்த்தனை செய்பவராக இருக்க வேண்டும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

அறிமுக கையெழுத்து போடும்போது மிகவும் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கப் போகிறவரின் வருமானம் எவ்வளவு? என்ன வேலை? நம்பிக்கையானவர்தானா? பொருளாதார ரீதியில் அவருக்கு ஏதாவது பிரச்னை உள்ளதா? இவரை நம்பி கையெழுத்துப் போட்டால் பின்னால் பிரச்னை ஏதேனும் வருமா?' என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்த பிறகே கையெழுத்து போடுவது நல்லது. ஏற்கெனவே நன்கு தெரிந்தவருக்கே இத்தனை விஷயங்களையும் யோசித்த பிறகு அறிமுக கையெழுத்து போட வேண்டும் என்கிறபோது முன்பின் தெரியாதவர்களுக்கு கையெழுத்து போடவே கூடாது.

இப்போது மீண்டும் ஆரம்பத்தில் கேட்ட கேள்வி களைப் படித்துப் பாருங்கள். அதன் முக்கியத்துவம் புரியும்!

-செ.கார்த்திகேயன்

வழக்கில் சிக்க வேண்டியதாகிவிடும்!

றிமுகக் கையெழுத்து போட்டவருக்கு பிரச்னை ஏற்படும் பட்சத்தில் அதை சட்ட ரீதியாக எப்படி அணுகுவது என வழக்கறிஞர் கண்ணனிடம் கேட்டதற்கு, ''சிறியதொகை என்றால் வங்கி நேரடியாக அறிமுகதாரரிடம் பேசும். லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் என்றால், சி.பி.ஐ அல்லது காவல் நிலையத்தில் புகார் செய்து விடுவார்கள். அதன் அடிப்படையில் உங்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவானால், அதிலிருந்து நீங்கள் மீண்டு வருவது சிரமம். எனவே, நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே கையெழுத்து போடலாம். யார் யாருக்கோ கையெழுத்து போட்டு விட்டு, பிரச்னையில் மாட்டி னால் சட்டப்படி சமாளிப்பது சிரமம். இழப்பீடு தர வேண்டியிருப்பதோடு, ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம்'' என்றார்.

ஒரு குறிப்பிட்ட காலவரைய றைக்குள் வாங்கும் கடனுக்குப் போடும் கையெழுத்து என்றால், நாம்தான் பொறுப்பு என்று சொல்வதில் நியாயம் இருக் கிறது. கணக்கு ஆரம்பித்து பத்து வருடம் இருபது வருடம் ஆன பிறகு அந்த நபரின் குணம் மாறிவிட்டால் அதற்கு எப்படி பொறுப்பேற்க முடியும்? இந்த அறிமுக கையெழுத்துக்கு  ஏதாவது காலவரையறை இருக்கிறதா?' என்ற கேள்விக்கு திருண்ணாமலையில் உள்ள ஐ.ஓ.பி. வங்கியின் கிளை மேலாளர் பத்மநாபன், ''காலவரையறை எதுவும் கிடையாது. பத்து ஆண்டு களுக்குப் பிறகு அறிமுகம் செய்தவரால் வங்கிக்குப் பிரச்னை என்கிறபோதும், அறிமுகதாரர்தான் அதற்கு முதல் காரணமாவார். ஆனால், இன்றைய நிலையில் ஒவ்வொரு வங்கிகளும் வாடிக்கையாளர்கள் முழு விவரங்களை வருடத்திற்கு ஒருமுறையேனும் கே.ஒய்.சி. படிவத்தின்படி புதுப்பிக்கின்றன. இதனால், அறிமுகதாரருக்குப் பெரும்பாலும் பிரச்னைகள் வராமலிருக்க வாய்ப்பிருக் கிறது'' என்றார்.