'கடைக்குப் போனோமா... ஸ்வீட் பாக்ஸை வாங்கினோமா... முடிஞ்சுது தீபாவளி!' என்கிற நினைப்பு பெருகிவிட்ட காலம் இது. இதற்கு நடுவேயும், 'அது ஒரு முறுக்கா இருந்தாலும், என் கையால செய்து கொடுக்கறப்ப கிடைக்கற சந்தோஷமே தனி!' என்று நெகிழ்பவர்கள், அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், தங்கள் குடும்பத்தினரை மேலும் நெகிழ வைப்பதற்காக, இங்கே 30 வகை இனிப்பு - கார ரெசிபியுடன் உதவிக் கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.
தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்-2 என்றபடி, பயத்தமாவு லட்டு, வைட்டமின் சத்து கொண்ட நெல்லிக்காய் அல்வா என்று வித்தியாசமாக அவர் தந்திருக்கும் ரெசிபிகளை, கண்ணுக்கு குளுமையளிக்கும் முறையில் அலங்கரிக்கிறார் செஃப் ரஜினி!
மூவர்ண கேக்
தேவையானவை: மைதா மாவு - 250 கிராம், சர்க்கரை - 250 கிராம், கேசரி பவுடர் - சிறிதளவு, சாக்லேட் பார் - 4 (அல்லது பூஸ்ட் அல்லது போர்ன்விடா பவுடர் - 4 டீஸ்பூன்), நெய் - 100 மில்லி.
செய்முறை: மைதா மாவை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். சர்க்கரையை தண்ணீர் விட்டு கம்பிப்பதம் வரும் வரை பாகு காய்ச் சவும். மைதா மாவை மூன்று பங்காக பிரிக்கவும். சர்க்கரை பாகையும் மூன்று பங்காக பிரித்து... ஒரு பங்கு மைதாவுடன் ஒரு பங்கு சர்க்கரை பாகை சேர்த்துக் கலக்கி, சாக்லேட்டை கரைத்து விட்டு கிளறி, கெட்டியானதும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். மீண்டும் ஒரு பங்கு மாவுடன் ஒரு பங்கு சர்க்கரை பாகு, கேசரி பவுடர் சேர்த்துக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். மிகுந்த ஒரு பகுதி மாவுடன் மீதி சர்க்கரை பாகு சேர்த்துக் கிளறி (கலர் சேர்க்க வேண்டாம்) கெட்டியானதும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். ஆரஞ்சு, பிரவுன், வெள்ளை என்று மூன்று கலரில் பார்க்க அழகாக இருக்கும்.
பயத்தம் மாவு லட்டு
தேவையானவை: பயத்தம்பருப்பு - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு - 10.
செய்முறை: பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, மாவு சல்லடையில் சலிக்கவும். சர்க்கரையும் தனியாக அரைத்து சலிக்கவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து, நெய்யை சூடாக்கி ஊற்றி, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்த்து நன்றாக கலந்து, உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: பயத்தம்பருப்பு குளுமை உடையது. வயிற்றுப்புண் வராமல் தடுக்கும்.
வள்ளிக்கிழங்கு அல்வா
தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 250 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, நெய் - 100 மில்லி, கேசரி பவுடர் - சிறிதளவு.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்கு வேக வைத்து, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டு சூடாக்கி, சர்க்கரை கரைந்ததும் மசித்த வள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும். நெய்யை உருக்கி கொஞ்சம் கொஞ்சமாக அதில் விடவும். அல்வா பதம் வந்ததும்... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும்.
குறிப்பு: உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட்டிலும் இதேபோல அல்வா செய்யலாம்.
பாசிப்பருப்பு அசோகா
தேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், சர்க்கரை - 500 கிராம், வறுத்த கோதுமை மாவு - ஒரு கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மில்லி.
செய்முறை: பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, ஊற வைத்து, வேக வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். சர்க்கரையை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்க விடவும். கொதித்ததும், அரைத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு, வறுத்த கோதுமை மாவு சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக நெய் விட்டு மேலும் கிளறி... குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
ஓம தட்டை
தேவையானவை: ஓமம் - 100 கிராம், மைதா மாவு - 250 கிராம், வெண்ணெய் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஓமத்தை தண்ணீரில் அலசி எடுத்து, வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும். மைதா மாவு, உப்பு, வெண்ணெய், பொடித்த ஓமம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவை தட்டைகள் போல் செய்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: ஓம வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும் இந்த தட்டையை ஓமம் சேர்க்காமலும் செய்யலாம். பிறகு அதைப் பொரித்து ஜீராவில் போட்டு பரிமாறலாம்.
கைமுறுக்கு
தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 4 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, வெண்ணெய், சீரகம், உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவை விரல் களால் சிறிய இழைகளாக முறுக்கி, வட்டமாக முறுக்கு வடிவில் சுற்றி ஈரத்தை உறிஞ்சும் துணியில் வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து, முறுக்கு சிறிது உலர்ந்ததும் எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: எண்ணெய் காய்ந்ததும் முறுக்கை கவனமாகப் போட்டு, எண்ணெய் ஓசை அடங்கி வரும்போது எடுக்கவும். சீரகத்துக்குப் பதில் எள்ளும் போடலாம்.
ஹெர்பல் ஓமப்பொடி
தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், கடலை மாவு - 100 கிராம், ஓமம் - 25 கிராம், புதினா, துளசி இலை - தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டுப் பல் - 4, வெண்ணெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: ஓமத்தை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரில் அலசி எடுத்து... புதினா, துளசி இலை, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, தோல் உரித்த பூண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெயை ஒன்றாக சேர்த்து, வடிகட்டிய தண்ணீரை விட்டு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பிசைந்து வைத்த மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு பிழிந்து, இருபுறமும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இது வாய்க்கு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.
ஜீரோ போளி
தேவையானவை: ரவை - 200 கிராம், கேசரி பவுடர் - சிறிதளவு, சர்க்கரை - 200 கிராம், எண்ணெய் - 250 மில்லி.
செய்முறை: ரவையை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து, கேசரி பவுடர் சேர்த்து மேலும் பிசைந்து 2 மணி நேரம் மூடி வைக்கவும். பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி, சிறிய அப்பள வடிவில் இடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அப்பள வடிவில் இட்டு வைத்துள்ளவற்றை ஒவ்வொன்றாகப் பொரித்து எடுக்கவும். சர்க்கரையை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஜீரா காய்ந்ததும் (கம்பிப் பதம்), பொரித்து வைத்ததை இருபுறமும் பாகால் நனையும்படி போட்டு எடுத்து தனியே வைக்கவும். ஜீரா மேலே பூத்து வந்ததும் அப்படியே சாப்பிடலாம்.
குறிப்பு: இந்த போளி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். பாலை நன்கு காய்ச்சி போளியின் மேல் விட்டு, ஊறியதும் சாப்பிட்டால்... சுவையாக இருக்கும். மேலே குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் தூவலாம்.
மல்டி பருப்பு மிக்ஸர்
தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒவ்வொரு பயறாக பொரித்து எடுக்கவும். பொரித்த பயறுகள் எல்லாவற்றையும் ஒன்றாக்கி, கறிவேப்பிலை பொரித்துப் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: மழைக்காலத்தில் இந்த மல்டி பருப்பு மிக்ஸரை தயாரித்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்தால், ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.
மசாலா கடலை
தேவையானவை: அரிசி மாவு - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், கடலை மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு
செய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்துக் கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வேர்க்கடலையை மாவில் தோய்த்துப் போட்டு பொரிக்கவும்.
குறிப்பு: கொண்டைக்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை பயன்படுத்தியும் தயாரிக்கலாம்.
கர்ச்சிக்காய்
தேவையானவை: ஈர அரிசி மாவு ( அரிசியை ஊற வைத்து, களைந்து, துணியில் போட்டு உலர்த்தி அரைத்த மாவு) - 200 கிராம், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொட்டுக்கடலை - ஒரு கப், எண்ணெய் - 250 மில்லி.
செய்முறை: தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுக்கவும். பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், வெல்லம் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். அரை லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை சொப்பு போல் செய்து, பொடித்து வைத்திருக்கும் பொடியுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கி, உள்ளே வைத்து மூடவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து சொப்புபோல செய்தவற்றை பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: இது பாட்டி காலம் முதல் செய்யப்பட்டு வரும் பழைமையான ஸ்வீட்.
நாரத்தை இலை சீடை
தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், நாரத்தை இலை - ஒரு கைப்பிடி அளவு, வெண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய், நாரத்தை இலையை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அரிசி மாவு உளுத்தம் மாவுடன் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். மாவை சீடைகளாக உருட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, சீடைகளைப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: கொப்பரைத் தேங்காய் துருவலும் சேர்க்கலாம்.
கலர் கார முறுக்கு
தேவையானவை: ஈர அரிசி மாவு (பச்சரிசியை ஊற வைத்து, களைந்து, துணியில் போட்டு உலர்த்தி, அரைத்து, சலித்த மாவு) - 300 கிராம், பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் நிற கேசரி பவுடர் - சிறிதளவு, வெண்ணெய் - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று பாகமாக பிரிக்கவும். பிறகு ஒவ்வொரு பாகத்திலும் ஒரு கலர் பவுடரை சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து தனித் தனியாக வைக்கவும். மாவை சிறிய இழைகளாக முறுக்கி, வட்டமாக முறுக்கு வடிவில் சுற்றி, ஈரத்தை உறிஞ்சும் துணியில் வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து முறுக்குகளைப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: மூன்று கலர்களில், பார்வைக்கு அழகாகவும், சுவையில் அசத்தலாகவும் இருக்கும் இந்த முறுக்கு.
மாலாடு
தேவையானவை: பொட்டுக்கடலை - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10.
செய்முறை: பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். சர்க்கரையையும் நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்று சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய்யை சூடாக்கி மாவில் விட்டு, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை போட்டு கலந்து உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தூள் சேர்த்தும் உருண்டை பிடிக்கலாம்.
எனர்ஜி லட்டு
தேவையானவை: பார்லி, ஜவ்வரிசி, அவல், பொட்டுக்கடலை - தலா 100 கிராம், சர்க்கரை - 500 கிராம், நெய் - 100 மில்லி, முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: பார்லி, ஜவ்வரிசி, அவல், பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்து, மாவு சல்லடையில் சலிக்கவும். சர்க்கரையை தனியாக அரைத்து சலிக்கவும். சர்க்கரைப் பொடியுடன் மாவைக் கலந்து, நெய்யை லேசாக சூடுபடுத்தி சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். முந்திரிப் பருப்பை வறுத்துப் போட்டுக் கலந்து உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: இந்த உருண்டை ஒன்றை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் போதும்... உடம்பு புத்துணர்ச்சி பெறும்.
நியூட்ரிஷியஸ் மிக்ஸர்
தேவையானவை : அரிசி மாவு - 250 கிராம், கடலை மாவு - 250 கிராம், மிளகாய்த்தூள் - 25 கிராம், முந்திரிப் பருப்பு - 10, பாதாம் பருப்பு - 10, பிஸ்தா பருப்பு - 10, அவல் - ஒரு கப், பொட்டுக்கடலை - ஒரு கப், வேர்க்கடலை - ஒரு கப், கறிவேப்பிலை, சீரக மிட்டாய் - சிறிதளவு, ஓமம் (வறுத்துப் பொடித்தது) - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் சிறிதளவு எடுத்து (சம அளவு) உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசைந்து, ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.
அரிசி மாவு, கடலை மாவை மீண்டும் சம அளவில் எடுத்து, உப்பு சேர்த்து, பொடித்த ஓமத்தை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
சிறிதளவு கடலை மாவுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு போட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி பூந்தி தேய்த்து எண்ணெயில் வேகவிட்டு எடுக்கவும்.
அவல், பொட்டுக்கடலை, வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்து எடுக்கவும். பிஸ்தா, முந்திரி, பாதாம் பருப்பை நெய்யில் வறுக்கவும். கறிவேப்பிலையை பொரிக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, மிளகாய்த்தூள், சீரகமிட்டாய் சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: காரம் அதிகம் போடாமல் தயாரித்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
எள் தட்டை
தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், எள் - 4 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவுடன் வறுத்த அரைத்த உளுத்தம் மாவு, எள், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை உப்பு, மிளகாய்த்தூள், வெண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டை வடிவில் தட்டி, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் தட்டைகளைப் போட்டு, இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: கறிவேப்பிலை, கொத்தமல்லிக்குப் பதிலாக புதினாவை பொடியாக நறுக்கிப் போட்டும் தட்டை செய்யலாம். எள்ளுக்குப் பதிலாக ஓமம், பொட்டுக்கடலை, உடைத்த வேர்க்கடலை சேர்த்தும் தயாரிக்கலாம்.
பொருள் விளங்கா உருண்டை
தேவையானவை: புழுங்கல் அரிசி - 100 கிராம், பாசிப்பருப்பு - 200 கிராம், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், வெல்லம் - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கொப்பரைத் தேங்காய் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், சுக்குத்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - சிறிதளவு.
செய்முறை: வெறும் வாணலியில் புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுக்கவும். பாசிப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். கடலைப்பருப்பையும் தனியாக வறுக்கவும். பின்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். வெல்லத்தை நீரில் கரைய விட்டு இளம் பாகாக காய்ச்சவும் (லேசாக உருட்ட வரும் மெழுகு பதம்). நறுக்கிய கொப்பரையை நெய் விட்டு வறுத்து, சலித்து வைத்திருக் கும் மாவுடன் சேர்க்கவும். சுக்குத் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் பாகை சிறிது சிறிதாக ஊற்றி, சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
குறிப்பு: இதில் என்ன பொருள் சேர்த்துள்ளது என்று கண்டுபிடிப்பதே கடினம் என்பதால்தான் இந்த உருண்டைக்கு 'பொருள் விளங்கா உருண்டை' என்று பெயர். கெட்டியாக இருப்பதால் 'கெட்டி உருண்டை' என்றும் கூறுவார்கள்.
ரஸ்க் முந்திரி ஃப்ரை
தேவையானவை: ரஸ்க் - ஒரு பாக்கெட், முந்திரிப் பருப்பு - 30, கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - 4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை : அரிசி மாவுடன் பொடித்த ரஸ்க், கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முந்திரியை மாவுக் கரைசலில் தோய்த்துப் போட்டு பொரித்தெடுக்கவும்.
தேங்காய் பர்ஃபி
தேவையானவை: தேங்காய் - ஒன்று, சர்க்கரை - 250 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: தேங்காயை துருவிக் கொள்ளவும். சர்க்கரையை கம்பிப் பதமாக பாகு காய்ச்சி... தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறவும். இதை நெய் தடவிய குழிவான பிளேட்டில் கொட்டி, துண்டுகள் போடவும்.
குறிப்பு: பாதாம், முந்திரியை அரைத்து சேர்க்கலாம். சிறிது ரவை சேர்த்தும் தயாரிக்கலாம்.
பொட்டுக்கடலை உருண்டை
தேவையானவை: பொட்டுக்கடலை - 200 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சவும். (பாகை தண்ணீரில் விட்டால் உருட்ட வர வேண்டும். அதுதான் சரியான பதம்). ஒரு அகலமான பேஸினில் பொட்டுக்கடலையைப் போட்டு, பாகை சிறிது சிறிதாக ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
குறிப்பு: பொட்டுக்கடலை புரோட்டீன் சத்து மிகுந்தது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
மனோகர லட்டு
தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, வெல்லம் - 300 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, வெண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, முறுக்கு பிழியும் அச்சில் மாவைப் போட்டு பிழிந்து வேகவிட்டு எடுக்கவும். பின்பு வெல்லத்தை நீரில் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சவும். (பாகை தண்ணீரில் விட்டால் உருட்ட வர வேண்டும். அதுதான் சரியான பதம்). முறுக்கை வாய் அகலமான பேஸினில் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாகை ஊற்றிக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: முறுக்கில் உப்பு சேர்க்கக் கூடாது. இந்த லட்டு, முறுக்கின் கரகரப்பும் வெல்லத்தின் இனிப்பும் சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும்.
நெல்லிக்காய் அல்வா
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு - சிறிதளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
செய்முறை: பெரிய நெல்லிக்காயை கொதிக்கும் நீரில் போட்டு அரை மணி நேரத்துக்குப் பிறகு உதிர்த்து, விதை நீக்கி, மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு நெல்லிக்காய் விழுதை வதக்கி, பின்பு சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து, மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.
முள்ளு தேன்குழல்
தேவையானவை : அரிசி மாவு - 200 கிராம், கடலை மாவு - 400 கிராம், எள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, உப்பு, எள், பெருங்காயத்தூள் வெண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்த மாவை முள்ளு தேன் குழல் அச்சில் போட்டு பிழிந்து எடுக்கவும்.
பாதாம் முந்திரி கேக்
தேவையானவை: பாதாம் பருப்பு - 15, முந்திரிப் பருப்பு - 20, சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 ஸ்பூன்.
செய்முறை: பாதாம், முந்திரியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பாதாம் பருப்பை தோல் உரிக்கவும். பிறகு, பாதாம் பருப்பு, முந்திரியை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். சர்க்கரையை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, சர்க்கரை கரைந்ததும் அரைத்த பாதாம் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் விட்டு கிளறவும். கெட்டியாக வந்ததும், இதை நெய் தடவிய குழிவான பிளேட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
சீரக முறுக்கு
தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, வெண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, சீரகம், வெண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு சிறிய சிறிய முறுக்குகளாக பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
ரவா லட்டு
தேவையானவை: ரவை - 250 கிராம், சர்க்கரை - 500 கிராம், வறுத்த முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 200 மில்லி.
செய்முறை : ரவையை பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். சர்க்கரையும் மிக்ஸியில் அரைத்து சலிக்கவும். இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும். நெய்யை உருக்கி மாவில் விட்டு, முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.
சீஸ் பனீர் ரோல்
தேவையானவை: மைதா மாவு - 250 கிராம், துருவிய பனீர் - 100 கிராம், சீஸ் - 4 டீஸ்பூன், வெண்ணெய் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவுடன் சீஸ், வெண்ணெய், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய சப்பாத்தி வடிவில் இட்டு, மேலே பரவலாக பனீர் துரு வலைப் போட்டு லேசாக உருட்டவும். இதை சிறிது சிறிதாக 'கட்' செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: சீஸ், பனீர் சேர்ந்த புதுமாதிரியான இந்த ரோலை குழந்தைள் விரும்புவார்கள்.
கடலை உருண்டை
தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - 250 கிராம், பாகு வெல்லம் - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி, சுத்தம் செய்யவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி கெட்டியாகப் பாகு காய்ச்சவும். பாகு காய்ந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அகலமான பேஸினில் வேர்க்கடலையைப் போட்டு, சிறிது சிறிதாக பாகை ஊற்றிக் கலந்து உருண்டை பிடிக்கவும்.
ரோஜா குல்கந்து
தேவையானவை: பன்னீர் ரோஜாப்பூ - 20, நெய் - 100 மில்லி, சர்க்கரை - ஒரு கப், பால் - 2 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப் பருப்பு - 10.
செய்முறை: ரோஜாப்பூவை இதழ்களாக ஆய்ந்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது நெய் விட்டு வதக்கவும். பின்பு சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக பால் சேர்த்து கெட்டியாகக் கிளறி, மீதமுள்ள நெய்யை சேர்க்கவும். கூடவே, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.