சென்னை: சென்னை உள்ளிட்ட நகரங்களில் கிரெடிட் கார்டு உரிமையாளர்களின் விவரங்களைத் திருடி, போலி கிரெடிட் கார்டு தயாரித்தும், கார்டுகளை திருடி மற்றவர் விவரங்களை அதில் பதிவு செய்தும் பல கோடி ரூபாய் மோசடி செய்த இரண்டு கும்பலைச் சேர்ந்த 13 பேரை, சென்னையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, அண்ணா நகர் பொன்னி காலனியைச் சேர்ந்தவர் அனந்தராமன். இவர், தன் மனைவியின் ஐ.சி.ஐ.சி.ஐ., கிரெடிட் கார்டை பயன்படுத்தி யாரோ விமான டிக்கெட் பதிவு செய்து மோசடி செய்து விட்டதாக திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.விசாரணையில், அனந்தராமன் மனைவி பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் நிரப்புவதற்கு கிரெடிட் கார்டு கொடுத்த போது, திருமங்கலத்தைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமா படித்த கவுதமன் இளங்கோவன் (17) மற்றும் அவரது நண்பர் கெல்வின் (20) இருவரும், பங்க் ஊழியர் உதவியுடன் "ஸ்கிம்மர்' என்ற கருவியை பயன்படுத்தி கார்டு விவரங்களை பெற்றுள்ளது தெரிந்தது.
இருவரையும் கடந்த 12ம் தேதி கைது செய்த போலீசார் விசாரித்த போது, இருவரும் ஸ்கிம்மர் கருவியில் பதிவான விவரங்களை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான புதிய கிரெடிட் கார்டை தயாரித்து அதன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் எடுத்தது தெரிந்தது.
இவர்களிடம் இருந்து, வெளிநாட்டு ரீடர், ரைட்டர் இயந்திரம், மென்பொருள் சி.டி., ஸ்கிம்மர் கருவி, கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், இதில் தொடர்புடைய கேரள மாநிலம் மூணாறைச் சேர்ந்த வினோத்குமார்(23), திண்டுக்கல்லைச் சேர்ந்த இலங்கை தமிழரான நிர்மல்ராஜ்(25), சென்னையைச் சேர்ந்த அருண்குமார்(23) எழிலரசன்(25), தீனதயாளன்(27), திருச்சியைச் சேர்ந்த அருண்ராஜ்(26) கந்தன்(42) மற்றும் ராமலிங்கம்(48) ஆகிய எட்டு பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து போலி கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கப்பட்ட ஏ.சி., டி.வி., லேப்-டாப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதே போல், சென்னை அண்ணா சாலையில் உள்ள சிட்டி பாங்க் கிரெடிட் கார்டு சட்ட மேலாளர், தங்கள் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளின் விவரங்களை ஸ்கிம்மர் இயந்திரம் மூலம் திருடி, வெளி மாநிலங்களில் பயன்படுத்தி வங்கிக்கு 8 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அண்ணா நகரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்த ஜஸ்டின் (எ) சதானந்தன் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில், உதயகுமார், சபரீசன் (எ) சபரிராஜன், மனோஜ்குமார், பிரேமல் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து லேப்-டாப், எம்பாஸ்டர், தானியங்கி எம்பாசிங், என்கோடர், டிப்பிங் இயந்திரங்கள், 407 போலி கிரெடிட் கார்டுகள், 868 வெற்று கிரெடிட் கார்டுகள் மற்றும் ஹோண்டா சிவிக் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டன.
திருமங்கலம், மத்திய குற்றப்பிரிவு போலீசில் கைப்பற்றப்பட்ட பொருட்களை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னையில் ஏற்கனவே போலி கிரெடிட் கார்டு தயாரித்த வழக்கில் இலங்கையைச் சேர்ந்த ஜாட்டி(எ) உமேஷ் மற்றும் அவனது கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது மனோஜ்குமார் தலைமையில் இயங்கி வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இவ்விரு கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகம், ஆந்திரம், கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இவர்கள் தயாரித்த போலி கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
அண்ணா நகர் வழக்கில் பிடிபட்டவர்கள் உள்ளூரில் மட்டுமே கிரெடிட் கார்டுகளை தயாரித்துள்ளனர். கவுதம் கும்பல் மற்றும் மனோஜ்குமார் கும்பலைச் சேர்ந்தவர்களில் சிலர் உமேஷிடம் தொழில் கற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மத்திய குற்றப்பிரிவில் மட்டும் 15 லட்ச ரூபாய் மோசடி புகார் வந்துள்ளது. ஆனால், 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருக்கக் கூடும். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது, வணிகர்கள் அந்த கார்டுகளை உபயோகப்படுத்துவதை உடனிருந்து கண்காணிக்க வேண்டும். கார்டின் நம்பரை எழுதவோ, இருமுறை பயன்படுத்தவோ அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.உடன், கூடுதல் கமிஷனர்கள் சஞ்சய் அரோரா, ஷகீல் அக்தர், ரவி, இணை கமிஷனர் தாமரைக்கண்ணன், துணை கமிஷனர்கள் ஸ்ரீதர், பன்னீர் செல்வம் ஆகியோர் இருந்தனர்.
என்ன இந்த ஸ்கிம்மர், என்கோடர்?: வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கார்டை அப்படியே எந்த வித்தியாசமும் இல்லாமல் போலியாக தயாரித்துள்ளனர். இதற்கு வங்கி பயன்படுத்தும் இயந்திரங்களையே இவர்கள் மலேசியாவில் இருந்து வாங்கியுள்ளனர். இதில், ஸ்கிம்மர், என்கோடர், எம்போசர், டிப்பிங் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்கிம்மர் - கார்டில் இருந்து விவரங்களை பதிவு செய்வதற்கும், என்கோடர் - வெற்று கார்டில் விவரங்களை பதிவு செய்வதற்கும், எம்போசர்- கார்டில் பெயர், எண், காலாவதி விவரங்களை பதிவு செய்யவும், டிப்பிங் இயந்திரம் பதிவு செய்யப்பட்ட எழுத்துக்களில் தேவையான வண்ணத்தை நிரப்பவும் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு கார்டிற்கும் தேவையான விவரங்களை, மோசடிதாரர்கள் பெற்று போலி கார்டுகளை தயாரித்துள்ளனர்.
செலவு ரூ. 2 லட்சம்; வரவு பல கோடி: போலி கிரெடிட் கார்டு தயாரித்து மோசடி செய்த கும்பலிடம் இருந்து, கிரெடிட் கார்டு தயாரிக்க பயன்படும் எம்பாசிடர், என்கோடர், டிப்பிங் இயந்திரங்களை தனிப்படை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த இயந்திரங்களை மும்பை மற்றும் மலேசியாவில் இருந்து வரவழைத்துள்ளனர். இயந்திரங்கள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை பெறுவதற்கான ஸ்கிம்மர் இயந்திரங்கள் ஆகியவற்றின் மதிப்பு 2 லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.இவற்றை பயன்படுத்தி பல கோடி ரூபாய் வரையில் இவர்கள் பொருட்கள் வாங்கியும், விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்தும் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள இவர்களைத் தவிர மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் மோசடி மூலம் பெற்ற பணத்தை வைத்து, விலை உயர்ந்த பொருட்களை வாங்கி அவற்றையும் விற்று செலவழித்துள்ளது தெரிந்துள்ளது.
வங்கி ஊழியர்கள் சிக்குவார்களா? : கிரெடிட் கார்டு மோசடியைப் பொறுத்தவரையில், அந்த கார்டு குறித்த விவரங்களை, வாடிக்கையாளர்களிடமே மோசடிதாரர்கள் வங்கி ஊழியர்கள் போல் பேசி பெற்றிருக்க வேண்டும். அல்லது வங்கியில் யாரோ தந்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்கள் பெரும்பாலும் வங்கியில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அத்துடன், அண்ணா நகரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வங்கி ஊழியர்கள் சிலருடன் தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே, விரைவில் வங்கி ஊழியர்களும் சிக்கலாம் என தெரிகிறது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=86996