சித்தர்களும், மகளிர் நலமும்..! நிறைவுப் பகுதி...
உடல் பேரழகு பெற...
ஒரு ஆழாக்கு பசும்பாலில் சிறிது குங்கும பூ சேர்த்து காய்ச்சி, வெது வெதுப்பான சூட்டில் ஒரு தேகரண்டி தேன் சேர்த்து, தொடர்ந்து நாற்ப்பத்தி எட்டு நாட்கள் குடித்து வந்தால் மேனி பொலிவாகும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.
தாய்ப் பால் சுரக்க...
சிறு தேக்கு, அதி மதுரம் , திப்பிலி இவற்றை காடியில் அரைத்து மார்பகங்களில் பூச, மகளிருக்கு பால் சுரக்கும் என்கிறார் அகத்தியர் தனது வைத்திய சிந்தாமணியில்.
உடல் இளைக்க...
போகர் தனது "வைத்தியம் 700" என்கிற நூலில், நான்கு அவுன்சு நீரில் ஒரு அவுன்சு தேன் விட்டு கலந்து அருந்தி வர உடல் பருமன் குறையும் என்கிறார்.
கருந்தேமலுக்கு...
காலையும் மாலையும் வெந்நீரால் தேமல் உள்ள இடத்தை நன்கு சுத்தம் செய்து, அதன் மேல் கற்பூர வள்ளி இலை, திருநீற்றுப் பச்சை இலை இரண்டையும் கசக்கி நன்றாக தேய்த்து வர மூன்றே நாளில் குணமாகும் என்கிறார் தேரையர்.
நகச் சுற்றிற்கு...
வெற்றிலைக் கொழுந்தில் சுண்ணாம்பு தடவி மைபோல அரைத்து நகச் சுற்று வந்த விரலில் வைத்துக் கட்ட குணமாகும் என்கிறார் கோரக்கர்.
பித்த வெடிப்பு...
அகத்திக் கீரையை வாரம் இருமுறை சமைத்து உண்பவர்களுக்கு உடலில் பித்தம் சமநிலைப் படும் என்றும் , இதனால் பித்தவெடிப்பு அணுகாது என்று தேரையர், தனது தேரையர் வைத்திய சாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிவன் வேம்பு வேரை எடுத்து பால் விட்டரைத்து பாலில் கலக்கு உண்டுவந்தால் பித்த வெடிப்பு நீங்கும். அத்துடன் மேனி அழகும் உண்டாகும்.
வேப்பங் கொழுந்தை மஞ்சள் கிழங்குடன் சேர்த்து விளக்கெண்ணை விட்டரைத்து பித்த வெடிப்புகளில் பூசிவர பித்தவெடிப்பு குணமாகும்.
கட்டிகள் உடைய...
சப்பாத்திப்பூவை அம்மியில் அரைத்து கட்டிகளின் மேல் பூசினால் கட்டிகள் உடையும். ஒரு தடவை பூசினாலே போதும் என்கிறார் புலிப்பாணி.
உடலில் வேண்டாத முடிகளை அகற்ற...
அரிதாரம் ஒரு பங்கு எடுத்து அத்துடன் அரைப்பங்கு சுண்ணாம்பு சேர்த்து நன்கு அரைத்து, வேண்டாத முடிகள் உள்ள பகுதியில் பூசி 15 - 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டாத முடிகள் உதிர்ந்து விடுமாம் என்கிறார் தேரையர்.
சேற்றுப் புண்ணிற்கு...
கடுக்காயையும் மஞ்சளையும் சேர்த்து நன்கரைத்து சேற்று புண் உள்ள இடங்களில் பூசிவர குணமாகும் என்கிறார் புலிப்பாணி.
சொறி சிரங்கிற்கு...
நன்றாக முற்றிய பூவரசு மரத்தின் பட்டையை எடுத்து நன்கு பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் குழைத்து சிறிது நேரம் வெய்யிலில் வைத்து பின்னர் அதை சொறி சிரங்கின் மேல் பூச இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் என்கிறார் அகத்தியர்.