6 சதவிகித இணைய பயனாளிகள் இணையத்தின் அடிமைகள் என்கிறது ஒரு சமீபத்திய சர்வே! இணையத்தின் தாக்கம் இவ்வாறாக இருக்க "பயனாளிகள்" என்ற அந்த சொல்லை, கவுரமானதாக்குகிறது பேரன்ட் சர்க்கிள்.காம்.
நிஜமான சமூக அக்கறையுடன் பல்வேறு பயனுள்ள தகவல்களை தொடர்ந்து தரும் இந்த இணையதளம், இம்முறை கையில் எடுத்திருப்பது குழந்தை வளர்ப்பை.
குழந்தை வளர்ப்பில் அந்த கால வைத்திய முறைகள் முதல் அப்டேட்டட் யுகத்தின் இண்டர்நெட் இத்யாதிகள் வரையிலான பல்வேறு கணக்கெடுப்புகளும், கண்டுபிடிப்புகளும் பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு விதங்களில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த பன்மையை ஒருமைப்படுத்த தொடங்கப்பட்டிருப்பதுதான் பேரன்ட் சர்க்கிள். குழந்தை வளர்ப்பை பற்றி, பற்பல இணைய தளங்களில் காணப்படும் சிறந்த இணைய இணைப்புகளை திரட்டி, வகைப்படுத்தி, பெற்றோர்களுக்கு எளிதில் கிடைக்கும் வண்ணம் வழி செய்திருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பேரன்ட் சர்க்கிள் தளத்தின் நிர்வாக இயக்குனர் நளினா ராமலக்ஷ்மி, "குடும்ப வாழ்க்கை முறையிலும், குழந்தை வளர்ப்பிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் காலமிது. கூட்டுக் குடும்பங்கள் இப்பொழுது ஒற்றைக் குடும்பங்களாகி வருகின்றன. வேலை பார்த்துக்கொண்டே குடும்பத்தை கவனிக்கும் தம்பதிகள் அதிகரித்து வரும் இக்கால சூழலில், குழந்தை வளர்ப்பு என்பது பாரம்பரிய முறைகளில் இருந்து சமகால முறைகளுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் குழந்தை வளர்ப்பிற்கான நல்ல வழிமுறைகளை, பெற்றோர் தேடுகின்றனர். பேரன்ட் சர்க்கிள்.காம் இந்த தேவையை நிறைவு செய்வதுடன், பெற்றோருக்கு சிறந்த வழித்துணையாக இருக்க விரும்புகின்றது" என்றார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் பேசுகையில்" எனது வெற்றிகளுக்கு முக்கிய காரணம் எனது பெற்றோரே. சுற்றுப்பயணமாக நானும், என் மனைவியும் ஒரு முறை இங்கிலாந்து சென்றிருந்தபொழுது அவளுக்கு பிரசவத்தைப் பற்றிய அவசர ஆலோசனை தேவைப்பட்டது. அப்பொழுது மருத்துவர்களாக இருந்த என் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றோம்.
இவ்வாறு ஆலோசனைகள் கிடைக்கப்படாமல்போன காரணத்தால், பிரசவ கால வலியை அனுபவிக்கின்ற தம்பதிகள் இக்காலத்தில் அதிகரித்து வருகின்றனர். இத்தகையவர்களுக்கு இவற்றை எடுத்துச்சொல்ல பேரன்ட் சர்க்கிள் போன்ற இணையதளம் மிகவும் தேவையான ஒன்றாகும்" என்றார்.
பேரன்ட் சர்க்கிள்.காம், ஐ.எம்.ஆர்.எப் நிறுவனத்துடன் இணைந்து குழந்தை வளர்ப்பை பற்றிய கணக்கெடுப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அந்த கணக்கெடுப்பின் முடிவுகளில் சில இங்கே...
மூன்றில் ஒரு பெற்றோர் , தங்களது குழந்தை இணையத்தில் உலவுவது குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார்கள்.
25% க்கும் மேலான குழந்தைகள், பெற்றோர் தங்களை ஊக்குவிப்பதில்லை என்கிறார்கள்.
3 ல் ஒரு குழந்தை, பள்ளியில் சக மாணவர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகிறது.
25% குழந்தைகள், தங்கள் மதிப்பெண்களைப்பற்றி பெற்றோரிடம் பொய் சொல்கின்றனர்.
13% குழந்தைகள், தங்களின் முன்னேற்றத்திற்காக எவராலும் பாராட்டப்படுவதில்லை.
58% குழந்தைகள், இணையத்தில் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதில் எச்சரிக்கை அவசியம் என தெரிவித்திருக்கிறார்கள்.
28% குழந்தைகள், இணையத்தில் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்துவதில் எச்சரிக்கை அவசியம் என தெரிவித்திருக்கிறார்கள்.
2% குழந்தைகள், தங்களின் பாக்கெட் மணியை மொபைல் ரீச்சார்ஜிற்கு பயன்படுத்துகின்றனர்.
67% குழந்தைகள், தங்களின் பாக்கெட் மணியை சேமிப்பிற்கு பயன்படுத்துகின்றனர்.
29% குழந்தைகள், தங்களின் பாக்கெட் மணியை பாடல்கள் மற்றும் வீடியோக்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
8% குழந்தைகள், தாங்கள் ஆண் மற்றும் பெண் நண்பர்கள் வைத்திருப்பதில் பெற்றோரிடம் பொய் சொல்கின்றனர்.
9% குழந்தைகள், தங்களின் பாக்கெட் மணிக்காக பெற்றோரிடம் பொய் சொல்கின்றனர்.
94% குழந்தைகள், தங்களின் தரமான நேரத்தை ஒன்றாக அமர்ந்து உண்பதில் செலவு செய்கின்றனர்.
89% குழந்தைகள், தங்களின் தரமான நேரத்தை தொலைக்காட்சிக்காக செலவு செய்கின்றனர்.
56% குழந்தைகள், தங்களின் தரமான நேரத்தை ஹோம்வொர்க்கிற்காக செலவு செய்கின்றனர்.
55% குழந்தைகள், தங்களின் தரமான நேரத்தை ஷாப்பிங்கிற்காக செலவு செய்கின்றனர்.
பெற்றோர்களை விழிக்கச் செய்துள்ளது பேரன்ட் சர்க்கிள்.காம்!