கயிலையே போர்க்கோலம் பூண்டிருந்தது! சர்வேஸ்வரனே சர்வாயுதபாணியாகப் போர்க்கோலம் பூண்டிருந்தார்.
எதற்காக இந்தப் போர்க்கோலம்?
ஆணவம் கண்மம் மாயை என்னும் மும்மலங்களின் உருவமான திரிபுர அசுரனை அழிப்பதற்காகத்தான்!
சரி! யாரிந்த திரிபுராசுரன்?
சற்றே பின்னோக்கிப் பார்த்தால், சகலமும் தெளிவாகிவிடுமே!
முற்காலத்தில் கிருச்சதமர் என்றொரு முனிவர் இருந்தார். கவிமுனிவரின் பத்தினியான முகுந்தைக்கு நெறிதவறிப் பிறந்த பிள்ளை அவர். காலப் போக்கில் அவருக்கு உண்மை தெரியவர, தன்னைப் பெற்றெடுத்த தாயை சபித்துவிட்டார். பெற்ற தாயென்றும் பாராமல் தன்னைச் சபித்த பிள்ளையை அந்தத் தாயும் சபித்துவிட்டாள். என்ன சாபம்? கிருச்சதமரே பயந்து நடுங்கும்படியான ஒரு பிள்ளை அவருக்குப் பிறக்க வேண்டும் என்பதுதான் அந்தச் சாபம்.
நெறிதவறிப் பிறந்த அவமானமும், தாயின் சாபமும் ஒருசேர, உயிரைத் துறப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் கிருச்சதமர். அப்படி, உயிர்த்தியாகம் செய்ய முடிவெடுத்த வேளையில், அசரீரி வழியாக அவர் இந்திரனுக்குப் பிறந்தவர் என்ற உண்மை தெரியவந்தது.
அதனால் உள்ளம் மகிழ்ந்த கிருச்சதமர், மற்ற முனிவர்களிடையே தனக்கு ஏற்பட்ட அவப் பெயரை அகற்றி, அவர்களெல்லாம் தன்னைப் போற்றி மதிக்கும் நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார்.
எடுத்த முடிவு ஈடேறத் தம்மைக் கடும் தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். தவத்தின் பயனாக கிருச்சதம முனிவருக்கு, ஸித்திபுத்தி சமேத கணேசப் பெருமானின் திவ்ய தரிசனமும் அவருடைய பேரருளும் அதனால், அனைத்து ரிஷிகளும், முனிவர்களும் மதித்துப் போற்றும் உயர்நிலை அடைந்தார் கிருச்சதமர்.
ஒரு நாள், நெடுநேரம் தியானத்தில் திளைத் திருந்தவர், தியானம் கலைந்து கண் விழித்த வேளையில், அவருடைய பார்வை தீட்சண்யத்தின் விளைவாக, அகில உலகங்களும் அஞ்சும்படியாக ஓர் அரக்கன் தோன்றினான். அவனுடைய இடியோசை போன்ற சிரிப்பொலி கேட்டு நடுநடுங்கிப் போன கிருச்சதமர் அவனிடம்,
'யார் நீ?' எனக் கேட்டார்.
'உம் தாயின் சாபத்தின் காரணமாக உனக்குப் பிள்ளையாகப் பிறந்தவன். எனக்கு மாதா பிதா இருவரும் நீர் ஒருவரே. சில காலம் என்னை நீர் வளர்க்க வேண்டும். அதன்பின் நான் மூன்று உலகங்களையும் வென்று முடிசூடுவேன். தங்களுக்கு அப்போது தெரியும்... எனது வீரமும், பெருமையும்' என்றான்.
தப்பான சாபத்தின் பயனாகப் பிறந்தாலும் தன் பிள்ளை அல்லவா அவன்! எனவே, அவனுக்கு பலி (மகாபலி அல்ல; இவன் வேறு) என்று பெயரிட்டு, அவனிடம், ''மகனே! மூலமுழு முதற் பொருளான கணேசப் பெருமானின் மந்திரத்தை உனக்கு உபதேசிக்கின்றேன். அதை இடைவிடாமல் ஜபித்து வந்தாயானால் உனக்கு சகலமும் ஸித்தியாகும்' என்று கூறி மந்திரோபதேசம் செய்தார்.
தந்தையிடம் மந்திரோபதேசம் பெற்ற பலி, கடும் தவம் புரிந்து விநாயகப் பெருமானின் தரிசனம் பெற்றான்.
அவரிடம், ''கருணைக் கடலே! மூவுலகங்களும் என் வசப்பட வேண்டும். உம்மிடம் என் பக்தி என்றும் மாறாதிருக்க வேண்டும். என் உடல் மறையும் வேளையில், என் ஆத்மா முக்தி நிலை அடைய வேண்டும்' என்றெல்லாம் வரங்கள் வேண்டினான்.
அவனுக்கு வேண்டிய வரங்களை அளித்த விநாயகர், ''பலியே! அகில உலகங்களும் உனக்கு அடிபணிந்து நிற்கும். மேலும் இரும்பு, வெள்ளி, பொன்னாலான மூன்று கோட்டைகளையும் யாம் உனக்குத் தந்தோம். அம்மூன்றும் திரிபுரம் என்று அழைக்கப்படும். நீயும் திரிபுரன் என்றே அழைக்கப் பெறுவாய். சிவபெருமானால் அன்றி வேறு யாராலும் உன்னை அழிக்க முடியாது. இறுதியில் நீ முக்தியும் அடைவாய்' என்று கூறி மறைந்தார்.
நாட்கள் நகர்ந்தன. வரத்தின் பலனாக முதலில் பூவுலகை வசப்படுத்தியவன். அடுத்தடுத்து பாதாள யோகம், தேவலோகம், பிரம்மலோகம், வைகுண்டம் என அனைத்துப் பகுதிகளையும் தன் ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டான். நாள் தவறாமல் கணேசபூஜை செய்துகொண்டு பன்னெடுங்காலம் ஏகபோகமாக அரசு புரிந்து வந்தான்.
பலியின் கொடுமை காரணமாக ஒளிந்து மறைந்த தேவர்கள், ஒரு நாள் நாரதரிடம் சென்று, ''மஹரிஷியே! திரிபுரனால் எங்களுக்கு ஏற்பட்ட இந்த அவல நிலை என்று மாறும்?'' என்று கேட்டனர்.
அதற்கு நாரதர், ''தேவர்களே! கணேசப் பெருமானின் திருவருள் பெற்ற அந்த அசுரனை, சிவபெருமானால் மட்டுமே வெற்றி கொள்ள முடியும். ஆனால், அதற்கும் விநாயகப் பெருமானின் திருவருள் வேண்டும். எனவே, நீங்கள் வெற்றிக்கு அதிபதியாம் கணபதியையே வணங்கி வழிபட வேண்டும்' என்று கூற, அதன்படியே முப்பது முக்கோடி தேவர்களும் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டனர். விநாயகர், தேவர்களின் அவல நிலையை நீக்க திருவுளம் கொண்டார்.
ஓர் அந்தணராக வடிவம் கொண்டு, திரிபுரனின் அரண்மனைக்குச் சென்றார். அவரை வரவேற்று பூஜித்தவனிடம், அந்தணராக வந்த விநாயகர், திருக்கயிலையில் சிவபெருமானால் வழிபடப்பெறும் சிந்தாமணி விநாயகர் திருவுருவம் தனக்குக் கிடைக்க வழிவகை செய்யும்படி கேட்டார்.
சிவபெருமான் தாமாக யாருடனும் போருக்குச் செல்ல மாட்டார் என்பதாலும், திரிபுரன் கேட்டனுப்பும் சிந்தாமணி விநாயகரைத் தர மறுப்பார் என்பது தெரிந்த காரணத்தாலும்தான் அப்படியொரு வேண்டுகோளை வைத்தார். திரிபுரன் தமக்கு வாக்களித்தபடி சிந்தாமணி விநாயகரை சிவபெருமானிடம் இருந்து பெற முடியாத பட்சத்தில், திரிபுரன் சிவபெருமானுடன் போரிடத்தானே வேண்டும். வலிய வரும் போரை சிவபெருமான் விட்டுவிடுவாரா என்ன? அமரர்தம் துன்பங்களைப் போக்க அவருக்கு மட்டும் திருவுள்ளம் இருக்காதா என்ன?
விநாயகரது எண்ணம் பலித்தது. திருக்கயிலையை நோக்கிப் போர் முழக்கம் செய்தான் திரிபுரன். சிவனார் போர்க்கோலம் கொண் டார். தேவர்கள் வடிவமைத்துக் கொடுத்த தேரில் அமர்ந்தவராகத் திரிபுரனுடன் போரிடச் சென்றார் சிவபெருமான்.
செல்லும் வழியில் தேரின் அச்சு முறிந்தது. காரணம் என்னவென்று கண்மூடித் தியானித்த சிவபெரு மானுக்கு, களம் காணச் செல்லும் தாம், கணபதியை வழிபட மறந்தது தான் காரணம் எனப் புரிந்தது!
கணபதியைப் பணிந்து வணங்கி போர்க்களம் புகுந்தார். திரிபுரன் சம்ஹாரமும் நிகழ்ந்தது. ஆக, சிவ பெருமானின் வெற்றிக்கு அதிபதி கணபதிதானே! திரிபுர சம்ஹாரம் நமக்கு ஒரு மெய்ஞ்ஞானப் பேருண்மையை உணர்த்துகின்றது.
திரிபுரன் மனித ஆத்மா; திரிபுரங்கள் ஆணவம் கண்மம் மாயை ஆகிய மும்மலங்கள்; (சத்வம் தமஸ் ரஜஸ் என்ற முக்குணங்களாகவும் கொள்ளலாம்) சிவபெருமான் ஆத்ம முத்திக்குக் காரணகர்த்தா; கணபதி பரப்ரம்ம ஸ்வரூபம்.
நம்முடைய ஆத்மாவை பிறவாப் பேரின்ப நிலையில் திளைத்திருக்கச் செய்யவேண்டுமானால், முக்கலங் களையும், ஐம்புலன்களையும் அடக்கும், முக்திக்கு காரண கர்த்தாவான சிவபெருமானின் மெய்ஞ்ஞான அமுதம் நமக்குக் கிடைத்திட வேண்டும்.
அந்த மெய்ஞ்ஞான அமுதமோ, பரப்ரம்ம ஸ்வரூபமான விநாயகப் பெருமானின் பேரருள் திறத்தால் மட்டுமே நாம் அடையக்கூடியது. ஆக, இந்த வகையில் பார்த்தாலும்கூட நம் ஆன்ம விடுதலை என்னும் முக்திநிலையை முடிவான வெற்றி நிலையை அடைய அருள்பவர் கணபதிதானே!
ஆக, அவர்தானே வெற்றிக்கு அதிபதி! அது மட்டுமா?
விநாயகப் பெருமான்தான் என்றும், எங்கும் எப்பொழுதும் நீங்காது நிலை பெற்றிருப்பவர்! இதை சிவபெருமானின் வாய் மொழியாகவே நாம் அறியலாம்.
முருகக் கடவுள் ஒருமுறை சிவபெருமானிடம், ''தந்தையே! விரதங்களில் எல்லாம் சிறந்தது எது?' என்று கேட்டார்.
சிவபெருமான், 'சந்தேகமே இல்லாமல் கூறுகின்றேன். விநாயகர் சதுர்த்தி விரதம்தான் தலைசிறந்த விரதம்.'
கேட்ட முருகன் சற்றே குழம்பித் தான் போனார். காரணம் விநாயகரைப் பெற்றவரே சிவபெருமான்தானே? அப்படி இருக்க விநாயகரைக் குறித்த விரதம் எப்படி சிறப்புடையது ஆகும்?
குமரனின் குழப்பத்தைத் தெளிவிக்கும் விதமாக சிவபெருமான் கூறினார்...
''முருகா! மூலமுழுமுதற் பொருள் விநாயகர்தான். அவர்தான் மும்மூர்த்திகளாகிய எங்களையும், அகில உலகங்களையும் தோற்றுவித்தவர். அவர் இதற்கு முன்பும் பலமுறை பல காரண காரியங்களுக்காக அவதாரம் செய்திருக்கிறார். அப்படி ஒரு காரணத்தை முன்னிட்டே அவர் எனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறார். எனவே, அவரே சகலமும்.'
அறிவியல் என்ன கூறுகிறது?
ஒலியில் இருந்து ஒளியும், ஒளியில் இருந்து சக்தியும் தோன்றுவதாகத்தானே கூறுகிறது. சக்திதான் உலகத்தை இயக்குகிறது. ஆக, இயக்கத்தின் காரணமான சக்திக்கும், சக்திக்குக் காரணமான ஒளிக்கும் மூலம், ஒலியாகத் திகழும் ஓங்காரம். மூலப் பொருளான அந்த ஓங்காரமே பிரளயத்துக்குப் பின்னும் பிரபஞ்சத்தில் எஞ்சி இருப்பது! எனில், அந்த ஓம்கார ஸ்வரூபனான கணபதிதானே அனைத்துக்கும் அதிபதி! அவரது திருவடியை அனுதினம் பணிவோம்!
கணபதி என்றிட... கவலைகள் தீருமே!