Wednesday, September 16, 2015

எது நல்ல சோப்?

'மேனி அழகு... சருமப் பாதுகாப்புக்கு எங்கள் சோப் உத்தரவாதம்!' இதைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில், வெவ்வேறு பளிச் மாடல்கள் உதவியோடு பளீரிடுகின்றன விளம்பரங்கள். பல சோப்கள்... பல விளம்பரங்கள். எதை வாங்குவது... எதைத் தவிர்ப்பது? ஏதோ ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவதும் தவறு. நம் சருமத்தன்மைக்கு ஒவ்வாத சோப் நிச்சயம் உடலுக்கும் சருமத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். யாரோ சொன்னார்கள் என்பதற்காக வாங்குவதைவிட, சோப் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாமா?

சோப் என்றால்...

சருமத்தில் உள்ள அழுக்கை அகற்ற ஆல்கலி, கொழுப்பு அமிலம், மினரல் அமிலம், கிளென்சிங் கெமிக்கல்ஸ் போன்றவை கலந்து சோப் தயாரிக்கப்படுகிறது. சோப் வாங்கும்போது முக்கியமாக டி.எஃப்.எம் (TFM - Total Fatty matter), பி.ஹெச் அளவு, அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் மற்றும் மூலப் பொருட்களைப் பார்த்து வாங்க வேண்டும்.

பொதுவாக சோப், டி.எஃப்.எம் அளவைப் பொறுத்து, தரம் பிரிக்கப் படுகிறது. பி.ஐ.எஸ் தர நிர்ணயத்தின்படி, மூன்று நிலை சோப்கள் இருக்கின்றன.

கிரேடு 1: 76 சதவிகிதத்துக்கும் அதிகமாக டி.எஃப்.எம் இருக்கும். இதன் விலை சற்று அதிகம்.

கிரேடு 2: 70 - 75 சதவிகிதம் டி.எஃப்.எம் கொண்டது.

கிரேடு 3: 69 சதவிகிதத்துக்குக் குறைவான டி.எஃப்.எம் இருக்கும். குறைந்த விலைகளில் கிடைக்கும்.

அதிக அளவு பி.ஹெச் என்ன செய்யும்?

பி.ஹெச் அளவு என்பது ஒரு பொருளில் உள்ள ஹைட்ரஜன் சமநிலையைக் குறிப்பது. ஒரு பொருளில் உள்ள அமிலத்தன்மை (Acidic) காரத்தன்மை (Alkalic)இரண்டின் சமநிலை விகிதத்தின் குறியீடு. சருமத்தின் பி.ஹெச் அளவு 5.5.

சோப்பின் பி.ஹெச் அளவு பெரும்பாலும் 7-9 என்ற அளவில் இருக்கிறது. அதாவது, ஆல்கலின் அளவு அதிகம்.

இதனால் ஈரப்பசை குறைவாகவே இருக்கும். கிருமிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தாது. கிருமித்தொற்றும் ஏற்படலாம்.

இதனால் பருக்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம். சரும எரிச்சல் வரும்; சருமத்தில் வறட்சியையும் ஏற்படுத்தும்.

குழந்தைகளுக்கான சோப்பில்கூட பி.ஹெச் 7-9 என்ற அளவிலேயே உள்ளது.

கிரேடு 1 சோப்பின் பி.ஹெச் 5.5 என்ற அளவில்தான் இருக்கும். சருமத்தின் பி.ஹெச்-க்கு சமநிலையில் இருக்கும் இந்த சோப்பைப்  பயன்படுத்தலாம்.

இந்த வகை சோப், சருமத்தில் உள்ள கிருமிகளை அகற்றும். எரிச்சல் தன்மையைக் குறைக்கும். ஈரப்பசையை நீண்ட நேரம் தக்கவைக்க உதவும். பி.ஹெச் 7-9 கொண்ட சோப்பை, ஐந்து நிமிடங்கள் வரை சருமத்தில் பூசிக் கழுவினால், மீண்டும் சருமம் பழைய நிலைக்கு மாற இரண்டு மணி நேரமாகும். சருமம் ஆல்கலினாக மாறிக்கொண்டே போகும். அமிலத்தன்மையும் காரத்தன்மையும் சமநிலையில் இருப்பதுதான் சரி.

கிரேடு 2, 3 சோப் தரம்

கிரேடு 2, 3 சோப்பில் அதிக அளவு ரசாயனங்கள், எடையை அதிகரிக்க உதவும் பொருட்கள் (Hard substances) கலக்கப்பட்டிருக்கும். மேலும், இதன் சருமத்தைச் சுத்தம் செய்யும் திறன் குறைவாக இருக்கும். ஈரப்பசையைச் சருமத்தில் தக்க வைக்காது. நுரை குறைவாக வரும். மிக எளிதில் கரையக்கூடியதாக இருக்கும்.

சோப் பயன்படுத்துவது எப்படி?

சோப்பை சருமத்தில் நேரடியாகத் தேய்க்கக் கூடாது. கைகளில் சோப்பைத் தடவி, கைகளால் முகத்தை வட்டவடிவில் (Circular motion) மூன்று முறை சுற்றிக் கழுவுவதே சரி.

சிலர் 2-5 நிமிடங்கள் வரை சோப்பை மீண்டும் மீண்டும் தேய்த்து முகம் கழுவுவார்கள். இது தவறான பழக்கம். இதனால், சருமம் நிச்சயம் பாதிக்கப்படும்.

எந்த சருமத்தினருக்கு எந்த சோப்/ஃபேஸ்வாஷ்?

வறண்ட சருமம் - பி.ஹெச் 5.5 சமநிலை கொண்ட சோப்கள் நல்லவை​. சோப் கவரில் உள்ள தயாரிப்பு பட்டியலில் வெஜிடபிள் எண்ணெய்,​ ​கோகோ பட்டர், ஜொஜோபா எண்ணெய், அவகேடோ, வைட்டமின் இ​, ​​கிளிசரின் ​​ போன்ற பொருட்கள் குறிப்பிட்டிருக்கும்​ சோப் மற்றும் ஃபேஸ்வாஷ்  பயன்படுத்தலாம்.

எண்ணெய் மற்றும் பருக்கள் நிறைந்த சருமம் - ​​மருத்துவர் ஆலோசனையுடன் ​சோப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.

எண்ணெய் சருமம் - தைம்​ ​​(Thyme) எனும் ​மூலிகை கலந்த ​சோப் ​மற்றும் ஃபேஸ்வாஷ்  நல்லவை. எண்ணெய் சருமத்தினர், இரண்டு முறைக்கு மேல் முகம் கழுவக் கூடாது. இதனால் முகப்பருக்கள் வரக்கூடும்.

சென்சிட்டிவ் சருமம் - ​அதிக நறுமணங்கள் மற்றும் ​நிறங்கள் கொண்ட சோப்களைத் தவிர்க்க வேண்டும். பி.ஹெச் 5.5, அதிக டி.எப்.எம் அளவு கொண்ட சோப் மற்றும் ஃபேஸ்வாஷ் பயன்படுத்தலாம்.

எண்ணெய் மற்றும் வறண்ட காம்பினேஷன் சருமம் - கிளிசரின்​ ​ கலந்த சோப் மற்றும் பேஸ்வாஷ் பயன்படுத்தலாம்.

பாடிவாஷ்

வறண்ட சருமம் - சூரியகாந்தி, சோயா​, ஓட்ஸ்​ கலந்த பாடிவாஷ் சிறந்தது.

எண்ணெய் மற்றும் பருக்கள் சருமம் -  ​டீ ட்ரீ எண்ணெய்​ ​(Tea tree oil)​ உள்ளவற்றைப் பயன்படுத்தலாம்.

சென்சிட்டிவ்,சரும அலர்ஜி- மருத்துவர் ஆலோசனைப்படி பாடிவாஷ் பயன்படுத்​துவது நல்லது.