Thursday, April 30, 2015

அப்படித்தான் நடக்கும்

அப்படித்தான் நடக்கும்

 

கந்தசாமி சற்றுக் கவலையாக இருந்தார். அவரது வியாபாரம் சுமாராகப் போய்க்கொண்டிருந்தாலும் பெரிய எதிர்காலம் இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தார். என்ன செய்வது என்று யோசித்தபோது அவரது நண்பர் ஒருவர், அவரை ஒரு துறவியிடம் அழைத்துச் சென்றார்.

கந்தசாமிக்கு அந்தப் பெரியவரிடம் பவ்யமாக போய் நின்று, அவரிடம் பழத்தட்டில் ஒரு பெரிய தொகையை காணிக்கையாக வைத்து பலன் கேட்டார். இன்னும் இரண்டொரு மாதங்களில் மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும் என்று சொன்னார் துறவி.

கந்தசாமி பழையபடி உற்சாகமாக இருந்தார். தனது வியாபாரத்தையும் உற்சாகமாக நடத்தினார். பங்குச்சந்தையிலும் தனது பணத்தை முதலீடு செய்தார். இரண்டு மாதங்களுக்கு மேலாகவே கடந்து போய்விட்டது. துறவியின் வாக்குப்படி பெரிய லாபமோ அதிர்ஷ்டமோ வாய்க்கவில்லை. வியாபாரமும் சுமாராகவே நடந்துகொண்டிருந்தது. பங்குச்சந்தையிலும் பெரிய ஏற்றம் வரவில்லை. அவருக்கு பலன் சொன்ன பெரியவர் மேல் ஆத்திரமாக வந்தது.

அந்தத் துறவியிடம் போய், "யோவ்.. என்னாய்யா....ஜோஸியம் சொல்றீங்க? நீர் அளந்த மாதிரி ஒரு மண்ணும் நடக்கலே! எல்லாம் எப்பவும் போலத்தான்...நீரெல்லாம் பெரிய வாக்கு சொல்றவரா!." என்று கடிந்துகொண்டார் கந்தசாமி.

துறவியோ பதிலுக்குக் கோபம் அடையாமல், அமைதியாகப் பதில் சொன்னார்.

"அய்யா.. உண்மையில் நான் அப்படி நினைத்துக் கொள்ளவில்லை. நீங்கள் கேட்கும்போது எனக்குத் தோன்றியதைத்தான் ஏதோ சொல்லிவருகிறேன். உங்கள் கோபமும் சரிதான்." என்றார்.

"இப்போதும் ஏதோ எனக்குத் தோன்றுகிறது. சொல்லி விடுகிறேன். உங்களுடைய அடுத்த ஆறு மாதத்துப் பலன் இது. நான் சொல்லியபடி நடக்கிறதா என்று நானும் பார்க்கப் போகிறேன் .." என்றார் அந்தப் பெரியவர்.

கந்தசாமி அவர் சொல்லுவதைக் கேட்டார்.

அவர் சொன்னதைக் கேட்டுப் பலமாக சிரித்துவிட்டார். அவர் வாக்கு பலிக்கப்போவதில்லை என்று அவருக்கு நம்பிக்கை.

ஆனால், அடுத்த மாதம் அவருடைய கடைச்சரக்குகளைக் கொண்டுவந்த லாரி மரத்தில் மோதி அத்தனையும் பாழாகி விட்டது. பங்குச்சந்தையிலும் எதிர்பாராத சரிவு. கந்தசாமிக்கு துக்கமும் ஆத்திரமும் வேதனையும் சொல்ல முடியாமலிருந்தது. அந்தப் பெரியவர் சொன்னபடியே நடந்துவிட்டதை எண்ணி வேதனைப்பட்டார்.

ஆனாலும் அவரால் பெரியவரைக் குற்றம் சொல்ல முடியவில்லை. போன முறை பெரியவரை மரியாதையில்லாமல் பேசி விட்டது தவறோ? அதனால்தான் இப்படியோ? அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமா? என்றெல்லாம் கந்தசாமி குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெரியவரே அவர் வீட்டுக்கு வந்தார்.

" கந்தசாமி, உங்களுக்கு நேர்ந்த கஷ்டங்களையெல்லாம் கேள்விப்பட்டேன் மிகவும் வருத்தமாக இருந்தது. நேரில் வந்து என் அனுதாபத்தைத் தெரிவித்துப் போகலாமென்று வந்தேன்" என்றார்.

கந்தசாமி கலக்கத்துடன் சொன்னார். " உங்கள் வாக்கு உண்மையானது தான் சாமி. என்னை மன்னித்துவிடுங்கள்" என்றார்.

"கந்தசாமி... மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை... நான் எனக்குத் தோன்றியதைத்தான் சொன்னேன். இந்த முறை அது பலித்திருக்கக் கூடாது.. ஆனால் பலித்து விட்டது. எனக்கு வருத்தமாக இருக்கிறது. " என்று கூறி தன்னிடம் கந்தசாமி முன்பு தந்த காணிக்கைப் பணத்தையும் திருப்பித்தந்தார்.

போக நினைத்த பெரியவர் மீண்டும் திரும்பி வந்து ஒரு காகிதத்தில் ஏதோ எழுதிக் கந்தசாமியிடம் கொடுத்தார்.

"சம்பவங்கள் எப்படி நடக்க வேண்டுமோ அப்படித்தான் நடக்கும். இது உங்களுக்கே தோன்ற வேண்டும். நான் சொல்லித் தோன்ற வேண்டியதில்லை." என்பதுதான் அக்காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது.