திருமண அழைப்பிதழில் விலாசம்!
சமீப காலமாக சிலர், திருமண அழைப்பிதழை ஒரு மாதம் முன்பே தந்து விடுகின்றனர். இது, ஒரு வகையில் நல்லது தான் என்றாலும், சில சமயங்களில், 'இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே...' என்று அசிரத்தையாக இருந்து விடவும் வாய்ப்புகள் உள்ளன. இதில், சிலர், அழைப்பிதழில் வீட்டு விலாசத்தை குறிப்பிடுவதில்லை.
சமீபத்தில் எனக்கு வந்த திருமண அழைப்பிதழில், திருமண மண்டபத்தின் விலாசம் மட்டுமே இருந்தது. வெளியூரில் நடந்த அத்திருமணத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலையில், மண்டப விலாசத்திற்கு வாழ்த்து மடல் அனுப்பினேன். ஆனால், அது எனக்கே திரும்பி வந்தது. வாழ்த்து மடலை உரியவர்களிடம் அனுப்பும் பொறுப்பை, மண்டப உரிமையாளர்கள் செய்ய மாட்டார்கள் போலும்!
இதைத் தவிர்க்க, திருமண அழைப்பிதழில், மணமகன், மணமகள் இருவரது விலாசங்களையும் தந்துவிடுவது நல்லது. தவிர, திருமணத்திற்கு வருபவர்களை உபசரிப்பது போல், வாழ்த்து அனுப்பியவர்களுக்கும், 'நன்றி' தெரிவிப்பதே முறை. தொலை தொடர்பு வசதிகள் நிறைந்த இக்காலத்தில், அழைப்பிதழ் தருபவர்கள் தங்கள் விலாசத்தையோ, 'இ-மெயில்' முகவரியோ தந்தால் சிறப்பாக இருக்குமே!