சுவாமி விவேகானந்தர் வடதேசத்தில் யாத்திரை சென்று கொண்டிருந்தபோது, ஒருமுறை அவரை நோக்கிக் குரங்குகள் கூட்டமாகத் தாக்க வந்தன. அவற்றிடம் இருந்து தப்பிக்க வழி தெரியாத நிலையில் விக்கித்து நின்ற சுவாமியிடம் வயதான சாது ஒருவர், ''எதிர்த்து நில்' என்று குரல் கொடுத்தார். அவ்வளவுதான், சுவாமி விவேகானந்தர் கைகளைக் கட்டிக்கொண்டு, துணிவுடன் அவற்றைத் திரும்பிப் பார்த்தார். தாக்கத் தயாராக இருந்த குரங்குகள், அவரது நிலையைக் கண்டு மெள்ள மெள்ளப் பின்வாங்கி ஓடியேவிட்டன.
இந்த நிகழ்ச்சியிலிருந்து தான் ஒரு பெரிய பாடம் கற்றதாக எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர். எதிர்த்தல் என்பதன் பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் குரங்குகளை எதிர்த்துத் தாக்கவில்லை; பின்வாங்கியும் ஓடவில்லை. என்ன நடந்தாலும் தாங்கிக் கொள்வதற்குத் தயாராக இருந்தார்.
உயிர்க்கொல்லி நோயே வந்தாலும் புன்சிரிப்புடன் ஏற்று, உற்சாகமாக வாழ்க்கையை நகர்த்திச் செல்வோர் நம்மிடையே உண்டு; வெறும் நகச்சுத்திக்கே வீட்டை நரகமாக்குபவர்களும் உண்டு.
ஒன்றை எதிர்ப்பது வேறு; எதிர்கொள்வது என்பது வேறு! வாழ்வில் துன்பம் வரும்போது, அதனை எதிர்ப்பதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
முதலாவதாக, சிறிய துன்பங்களையும் நாமே பெரிதாக்கிவிடுகிறோம். சிக்கலை ஆரம்பத்திலேயே எளிதாக அவிழ்ப்பதைவிட்டு, மேலும் அதிக சிக்கலாக்கிவிடுகிறோம். அத்தகையவர்கள் ஒரு நாளின் ஒட்டுமொத்த இன்பத்தையும் அழிக்கக்கூடிய ஆற்றலை ஒரு சிறிய துன்பத்துக்குக் கொடுத்துவிடுகிறார்கள். மனதில் பிரச்னைகளைப் பெரிதுபடுத்தி நிரந்தரமாக மாட்டி வைத்திருக்கிறார்கள். அதனால் மேலும் மேலும் துன்பத்தில் மூழ்கி, நிம்மதியை மொத்தமாக இழந்துவிடுகிறார்கள்.
இரண்டாவதாக... துன்பத்தை எதிர்க்கும் போராட்டத்தில் நம் திறமைகள் முடக்கப்படுகின்றன. விரயமாகின்றன. அமைதியான மனநிலையில் இருந்தால்தான் மனம் ஒருமுகப்பட்டு, நன்கு செயலாற்ற முடியும். துன்பக்கடலில் மூழ்கி, உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்துகொண்டிருப்பவர்களிடம் இருந்து எந்தவொரு உருப்படியான செயலையும் எதிர்பார்க்க முடியாது.
கவலையை நெருப்புடன் ஒப்பிடலாம். 'நெருப்பு இறந்த உடலைத்தான் எரிக்கும்; கவலையோ உயிரோடு இருப்பவரையே எரித்துவிடுகிறது' என்கிறது ஒரு வடமொழி சுலோகம்.
மூன்றாவதாக... துன்பத்தை எதிர்ப்பதால் எதிர்மறை எண்ணங்களின் தாக்கமே அதிகமாகும். ''எல்லாம் நாசமாகிவிட்டது, என்னுடைய வாழ்க்கை இத்தோடு முடிந்தது. இனி என் கதி அவ்வளவுதான்!' என்று எதிர்மறை எண்ணங்களோடு புலம்புகிறவர்கள் நச்சுத்தன்மை மிகுந்த கிருமிகளைப் போன்றவர்கள். கவலையைப் பிறருக்குப் பரப்புவதில் வல்லவர்கள்.
நான்காவதாக... கவலைச் சுழலில் மூழ்கிக் கிடப்பதால், கடுமையான மன அழுத்தம் ஏற்படுகிறது. இது உடலுக்கும் உள்ளத்துக்கும் பெரும் தீங்கை விளைவிக்கிறது. போர்க்களத்துக்கு வந்த அர்ஜுனன், ''என் உடல் நடுங்குகிறது; உரோமங்கள் சிலிர்க்கின்றன; வியர்த்துக் கொட்டுகிறது; கையிலிருந்து காண்டீபம் நழுவுகிறது...' என்றெல்லாம் கூறுகிறான். ஆக, உள்ளத்தில் தோன்றும் கவலை, உடலையும் சேர்த்து வாட்டுகிறது.
துன்பம் நம்மையே அழித்துவிடும் என்பதால்தான், 'இடுக்கண் அழியாமை' என்றொரு அதிகாரத்தையே இயற்றியிருக்கிறார் திருவள்ளுவர்.
துன்பம் வரும்போது, ஒரு புன்முறுவலோடு அதனை எதிர்கொள்ளும் திடத்தையே திருவள்ளுவர், 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று கூறினார்.
வெள்ளம்போன்று பெரிய துன்பம் வந்தாலும், நினைத்த மாத்திரத்தில் அதனை அழிக்கக்கூடிய ஆற்றல் அறிவுடையவனுக்கு உண்டு.
நமக்குத் துன்பம், கவலை போன்றவை பலவகைகளில் ஏற்படுகின்றன. ஒன்று உடல் குறித்த கவலை.
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். (திருக்குறள்: 627)
உடம்பு துன்பத்துக்கு இலக்காவது இயல்பு என்று எண்ணித் தெளிந்த பெரியோர், அந்தத் துன்பத்தைப் பெரிதாக எண்ணி மனம் தளர மாட்டார்கள். அதேபோல, செல்வம் வந்தபோது துள்ளிக் குதிக்காதவர்கள், வறுமை வந்தபோது துவள்வதில்லை.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். (திருக்குறள்: 628)
துன்பத்தில் கலங்கித் தவிப்பதையும், மனம் நொறுங்குவதையும் விடுத்து, அதனைப் புன்முறுவலுடன் வரவேற்கும் நிதானத்தையும், சமத்தன்மையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
துன்பத்தையே இன்பமாகக் கருதுபவன், தன் பகைவர்களாலும் பாராட்டப்படுவான் என்கிறார் திருவள்ளுவர்.
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு. (திருக்குறள்: 630)
இடுக்கண் அழியாமை குறட்பாக்களை இதயத்தில் எழுதி வைத்து, துன்பத்தை நீக்கி, இன்பமாக வாழ்வோம்.