Wednesday, November 26, 2014

குடிநோய் - மூளையின் நினைவுகள் முழுமையாக அழிகின்றன.

திரைப்படக் காட்சிகளில் அடிக்கடி இந்த வசனத்தைக் கேட்டிருக்கலாம்; 'ஆமா, இப்ப நான் எங்கே இருக்கேன், என்ன நடந்துச்சு'.

குடிநோயாளிகளுக்கு இதெல்லாம் சகஜம். முந்தைய நாள் மிதமிஞ்சி மது அருந்தியபோது என்ன நடந்தது என்றே தெரியாமல் மறுநாள் விழிப்பார்கள். முந்தைய நாள் என்ன வேண்டுமென்றாலும் நடந்திருக்கலாம். மொத்தப் பணத்தையும் எடுத்து மதுக்கூடப் பணியாளருக்குத் தர்மம் செய்திருக்கலாம். உடன் இருந்தவருக்கு சொத்தையும் எழுதிக் கொடுத்திருக்கலாம். இல்லை, யாரையாவது கொலையே செய்திருக்கலாம். ஆனால், மூளையைத் துடைத்து விட்டதுபோல எதுவும் சுத்தமாக நினைவிருக்காது. மது மீட்பு மனநல மருத்துவம் இந்த நிலையை 'பிளாக் அவுட்' (Blackout) என்கிறது.

அடுத்தவரையும் அழிக்கும் ஆபத்து!

இதில் இரு வகை உண்டு. கம்ப்ளீட் பிளாக் அவுட் (Complete blackout). இது முழுமையாக நினைவுகள் அழிந்து போதல். இன்னொன்று ஃபிராக்மென்ட்டரி பிளாக் அவுட் (Fragmentary blackout). நேற்று இரவு நடந்தது கொஞ்சமாக நினைவில் ஒட்டிக்கொண்டிருக்கும். யோசித்தாலும் முழுக் காட்சிகளையும் நினைவுக்குக் கொண்டுவர முடியாது. உடன் இருந்தவர் எடுத்துச் சொன்னால், ஓரளவு நினைவுகளை மீட்க முடியும். ஆனால், முதல் வகையான 'முழுமையாக நினைவுகள் அழிந்துபோதல்'என்பது அபாயகரமான நிலை. இதற்குக் காரணம், அதிக அளவு மது அருந்துவது மட்டுமல்ல, முறையற்று மது அருந்துவது.

அது என்ன முறையற்று மது அருந்தல்? சிலர் பந்தயம் வைத்து மது அருந்துவார்கள். பத்து நிமிடங்களில் நான்கு 'பியர்'அருந்துவது. அரை மணி நேரத்தில் முழு பாட்டில் மதுவைக் காலி செய்வது. விதவிதமான போட்டிகள். சிலர் சீக்கிரம் போக வேண்டும் என்பதற்காக அவசரக் கோலத்தில் அதிக அளவு மது அருந்துவார்கள். மெதுவாக, ஆசுவாசமாக மது அருந்தும்போதுதான் அதன் போதை சீராக, படிப்படியாக ஏறும். முறையற்று, குறுகிய கால அவகாசத்தில் அதிக அளவு மது அருந்தும்போது அந்த போதையை உடனடியாக உள்வாங்க மூளை தடுமாறுகிறது. வழக்கமாகப் போதையில் ஆட்டம் போட்ட மூளை செல்கள் இப்போது மயக்கமாகிவிடுகின்றன. தற்காலிகமாக மூளையின் நினைவுகள் முழுமையாக அழிகின்றன. அந்த நிமிடத்திலிருந்து நடக்கும் எதுவுமே மூளையில் பதிவது இல்லை. மூளைக்குக் கட்டுப்படாத அந்த நபர் எதுவும் செய்வார். அவருக்கு எதுவுமே தெரியாது. இதனை 'டிஃபெக்டிவ் கான்ஷியஸ்னெஸ்' (Defective consciousness) என்போம். நேற்றைய தினம் படித்த, அதிக மது அருந்திவிட்டு 'மயக்கம் அடைந்த நிலை' என்பதைவிட இது அபாயம். ஏனெனில், அந்த நிலையில் மது அருந்தியவருக்கு மட்டுமே ஆபத்து. ஆனால், இது மற்றவர்களையும் பாதிக்கும். பெரும் பாலான வன்முறைகள், பாலியல் குற்றங்கள் இது போன்ற நேரத்தில் நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

உடல்ரீதியாக ஒரு விசித்திர குடிநோய் இருக் கிறது. சில குடிநோயாளிகள் எந்த நேரமும் தண்ணீர்த் தொட்டியிலோ அல்லது அண்டாவுக்குள் தண்ணீர் ஊற்றியோ உட்கார்ந்திருப்பார்கள். நாம் ஏற்கெனவே சில அத்தியாயங்களுக்கு முன்பு பார்த்த பாதங்களில் முள் போன்று குத்தும் 'பின்ஸ் அண்ட் நீடில்ஸ்' நோயின் முற்றிய நிலை இது. முழங்கால் முதல் பாதம் வரையும், விரல் நுனி தொடங்கி மணிக்கட்டு வரையும் உண்மையிலேயே நெருப்பைப் பற்ற வைத்ததுபோல எரியும். குளிர்ந்த நீரில் இருந்தால் மட்டுமே ஓரளவு எரிச்சல் தணியும். இதன் அடுத்த கட்டமாக இந்த நோய் தசைகளுக்கும் தாவுகிறது. தசையைக் கயிற்றால் கட்டி இழுத்ததுபோலத் தாங்க முடியாத வலி ஏற்படும். உடனடியாகச் சிசிக்சை எடுத்தால் குணப்படுத்திவிடலாம்.

'ஹனிமூனர்ஸ் டே பால்ஸி!'

இது மட்டுமல்ல... உலகில் எத்தனையோ நோய்கள் இருக்கின்றன. ஆனால், மதுவினால் வரும் மன, உடல் நோய்கள் மட்டும் விசித்திரமானவை. துன்பமும் சுவாரஸ்யமும் கலந்தவை. மது மீட்பு மன நல மருத்துவத்தில் சில நோய்களுக்குச் செல்லமான பெயர்கள் நிலைபெற்றுவிட்டன. அவற்றில் குறிப்பிடத் தக்க ஒன்று, 'சாட்டர்டே நைட் பால்ஸி' (Saturday night palsy) அல்லது 'ஹனிமூனர்ஸ் பால்ஸி'(Honeymooner's palsy). அதிக அளவு மது அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்பவர்கள், ஆழ்ந்த மயக்கத்தில் பெரும்பாலும் வலதுபுறத் தோளில் தலை சாய்த்துப் படுப்பார்கள். ஏன் இடதுபுறத் தோளில் தலை சாய்த்துப் படுக்க மாட்டார்களா என்று கேள்வி எழலாம். நமக்கு வலது கை பழக்கம்தான் பெரும்பான்மைப் பழக்கம் - எழுதுவது உட்பட.

சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை தினசரி அல்லது அடிக்கடி இப்படிப் படுக்கும்போது ஒரு கட்டத்தில் வலது கை திடீரென்று தனியாக உணர்ச்சியற்று தொங்கிவிடும். மரத்தில் பாதி வெட்டப்பட்ட கிளை தொங்குவதுபோல. இயக்க முடியாது. பிடிமானம் இல்லாமல் ஆடும். இதற்குக் காரணம், மணிக்கட்டை இயக்கும் ரேடியல் நரம்பு (Radial nerve) தோள்பட்டை வழியாகத்தான் செல்கிறது. அந்த நரம்பை அரை மணி நேரம் தொடர்ந்து அழுத்திப் பிடித்தாலே மணிக்கட்டில் சிறு மாற்றங்களை உணர முடியும். அப்படி இருக்கும்போது மதுவின் போதையில் பல மணி நேரங்கள், பல நாட்கள் தலையை அழுத்தித் தூங்கினால் ரேடியல் நரம்பு முற்றிலும் செயலிழந்துவிடும் என்கிறார்கள் டாக்டர்கள்.

அதெல்லாம் சரி, இதற்கு ஏன் விசித்திரமான பெயர்கள்? சனிக்கிழமை இரவுகளில் அதிக அளவு மது அருந்துவது ஒரு பெரும் கலாச்சாரமாக இருக்கிறது. அதனால் 'சாட்டர்டே நைட் பால்ஸி'. பொதுவாக, புது மணத் தம்பதியைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? ரொம்பவே அன்புடன் ஒட்டி, உரசிக்கொண்டு இருப்பார்கள். பயணத்திலும் சரி, படுக்கையிலும் சரி, பெரும்பாலும் மனைவி கணவரின் தோள்பட்டையில் தலைசாய்த்திருப்பார். அதனால் வந்தது, 'ஹனிமூனர்ஸ் பால்ஸி' என்கிற பெயர்.

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in