வீட்டில், 13 வயது தீபா மட்டுமே தனியாக இருக்கிறாள். கதவைத் தட்டி, 'ஐ லவ் யூ' சொல்லி 'பொக்கே' கொடுத்தபடி உள்ளே நுழைகிறான்... 35 வயது ஆனந்த். ஏதோ புது உலகத்தில் புகுந்த மாதிரி அவனை அப்படியே வாரியணைத்து முத்தமழை பொழிகிறாள் தீபா!
பெங்களூரில் இருக்கும் பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில், மொபைல் ஷோரும் வைத்திருப்பவன் ஆனந்த். அவனை, 'ஹான்ஸ்... ஹான்ஸ்' என்றுதான் செல்லமாக அழைப்பாள் தீபா!
'அதெல்லாம் கிடக்கட்டும்... காதலிக்கிற வயதா இது..?' என்று கேட்கத் தோன்றுகிறதுதானே!
'அவதான் விவரமில்லாத சின்னப்பொண்ணு... ஏழு கழுதை வயசாயிட்ட அவனுக்குக்கு கூடவா அறிவில்ல?' என்று கோபம் பொங்குகிறதுதானே!
இதையெல்லாம் அடக்கிக் கொண்டுதான், தீபாவின் கதையை நான் கேட்டு முடித்தேன்!
அக்கா மற்றும் தங்கை என இரண்டு பூக்களுக்கு நடுவில் பூத்தவள் தீபா. அப்பாவுக்கு, கைநிறைய சம்பளத்துடன் தனியார் கம்பெனியில் வேலை. சம்பாத்தியம் முழுவதையும் மகள்களுக்கே செலவு செய்தார். மூத்த மகளுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிட, கையிருப்பு முழுவதும் அதற்கே கரைந்துபோனது. இதனால், குடும்பத்தின் பணத் தேவைகளுக்கு தடுமாற ஆரம்பித்தார் அப்பா.
தந்தையின் நிலையைப் புரிந்துகொள்பவளாக இருந்தாள் மூத்த மகள். கடைசி மகள் 8 வயது சிறுமி என்பதால், அவளாலும் பெரிதாகப் பிரச்னை இல்லை. ஆனால், இரண்டுங்கெட்டான் வயதில் இருந்த தீபாவுக்கு... அப்பாவின் சூழல் புரிந்தாலும், சகதோழிகள் வாங்கிக் குவிக்கும் பொருட்களைப் பார்க்கும்போதும்... அவர்களின் ஆடம்பரச் செலவுகளைப் பார்க்கும்போதும்... அழுகை அழுகையாக வந்தது. தோழிகள் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுக்குள் படையெடுக்கும் போதெல்லாம் கையில் பணமில்லாமல் கூனிக் குறுகியே நடந்தாள்.
ஆடம்பரத்தை சொல்லித் தந்த அளவுக்கு, குடும்பத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களைப் பற்றியும்... அதையெல்லாம் சமாளிக்கும் பக்குவத்தைப் பற்றியும் தீபாவுக்கு பெற்றோர் சொல்லித் தரவில்லை. விளைவு..? ஆடம்பர வாழ்க்கையைத் தேடி தீபாவின் மனம் அலைபாய்ந்தது.
ஒரு நாள், பள்ளித் தோழிகளுடன் பிரபல ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் சென்றபோதுதான், ஆனந்தை சந்தித்தாள். அடிக்கடி ஷாப்பிங்... ஆனந்துடன் பேசுவது என்று சில மாதங்கள் உருண்டன. தீபா, அடிக்கடி தொட்டுத் தொட்டுப் பார்த்து ரசித்து வாங்க முடியாமல் ஏங்கிப் போன புதுமாடல் 'ஐ போனை' ஒரு நாள் பரிசாகக் கொடுத்து 'ஐ லவ் யூ தீபா' சொன்னான் ஆனந்த். போனை வாங்கிக் கொண்டவளால், அத்தனை எளிதாக காதலை வாங்கிக்கொள்ள முடியவில்லை. 'யோசித்து சொல்கிறேன்...' என்று வீட்டுக்கு ஓடிவிட்டாள்.
தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் காட்டப்படும் 'காதல்' காட்சிகள் திரும்பத் திரும்ப அவள் மனத்திரையில் ஓட ஆரம்பித்தன. காதல் குறித்து தீவிர ஆராய்ச்சி செய்யவேண்டும் போல் இருந்தது தீபாவுக்கு. 'காதல்னா என்ன... காதல் வந்தா என்ன நடக்கும்... ஹான்ஸை காதலிச்சா அப்பா, இதுநாள் வரைக்கும் வாங்கித் தந்ததெல்லாம், இனி நமக்கு கிடைக்குமா?'
- சிறுமி தீபா, சிறுமியாகவே யோசித்தாள். ஒரு முடிவெடுக்கத் தெரியாத நிலையிலும், ஆனந்துக்கு 'ஐ லவ் யூ' சொல்லிவிட்டாள். பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டு, அவனுடன் சுற்ற ஆரம்பித்தாள். மகளின் கல்வி குறித்தோ... அவளின் நடவடிக்கைகள் குறித்தோ... பெற்றோர் கண்டுகொள்ளாமலிருந்தது, ஆனந்துக்கும் வசதியாக போய்விட்டது. தொடுவதும் உரசுவதுமாக அவளை வேறு ஒரு உலகத்துக்கு கொண்டு போனான்.
தீபாவின் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வுக்காக குடும்பமே சென்னை வந்துவிட, தீபா மட்டும் பள்ளியில் முக்கிய தேர்வு இருப்பதாக வீட்டிலேயே தங்கிவிட்டாள். 'தனியாக இருக்கிறேன்' என்பதை ஆனந்திடம் அவள் சொல்ல, இதற்காகவே காத்திருந்தவன், சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறான். அதுதான்... அந்த 'பொக்கே சந்திப்பு'!
கட்டிப் பிடித்து... முத்தம் கொடுத்து என்று தீபாவை அவன் உணர்ச்சிவசப்பட வைத்துக் கொண்டிருக்க... திடுதிப்பென்று வந்து கதவைத் தட்டுகிறார் தீபாவின் உறவுக்காரர் ஒருவர். தீபா - ஆனந்த் இருவருமே அதிர்ச்சியில் உறைய... ஆனந்துக்கு தர்ம அடி விழுகிறது... அதேநேரம், அவனுடைய இன்னொரு முகமும் வெளிச்சத்துக்கு வருகிறது. ஏற்கெனவே திருமணமான அவனுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது.
'தீபா தனியா இருக்கா... முடிஞ்சா ஒரு கண் வெச்சுக்கோங்க' என்று பட்டும்படாமலும் பெற்றோர் சொல்லிச் சென்றிருந்தாலும், அக்கறையுடன் அந்த உறவுக்காரர் எட்டிப் பார்த்ததால், அவனுடைய கோரப் பிடியில் இருந்து தப்பினாள் தீபா. ஆனால், விஷயம் ஊருக்கே பரவிவிட, குடும்பமே ஊரை காலி செய்துவிட்டு கண்காணாத இடத்தில் தற்போது தஞ்சம் புகுந்திருக்கிறது!
ஒரு குடும்பமே நடுத்தெருவில் வந்து நிற்க காரணம் தீபாவா... சரிவர கண்காணித்து வளர்க்காத பெற்றோரா?
ஆனந்த்துகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் ஒரு அநியாய சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது இங்கே யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. இப்படிப்பட்ட சூழலில், பெற்றோர்கள்தானே, தீபாக்களை காப்பாற்ற வேண்டும். குழந்தையின் மீது அக்கறையும் அன்பும் காட்டியிருந்தால்... தீபாவுக்கும், குடும்பத்துக்கும் இந்தக் கொடுமைகள் வந்து சேர்ந்திருக்காதே!
காதல்... யாரோ ஒருவரின் அச்சுறுத்தலுக்காக வரக்கூடியதா.. அப்படி வந்தால், அந்தக் காதலின் நிலை என்னவாக இருக்கும்