காதலுக்கு இது போதாத காலம். இளவரசன் - திவ்யா காதலின் துயர முடிவு, கடந்த ஆண்டின் கசப்பான வரலாறு. எனினும், அந்தக் கசப்பு அத்துடன் முடிந்துவிடவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காவல் நிலையங்களில் தஞ்சம் அடையும் காதல் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கின்றன. 'இனி சென்னை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது' என்ற அறிவிப்பு வெளியானதும் முதலில் திகீர் அதிர்ச்சி அடைந்தது... காதலர்கள்தான்!
சாதி, வர்க்கம், இனம், மதம்... போன்ற பெருஞ்சுவர்களை ஒரே தாவலில் தாண்டத் துணியும் காதலை மனம் நிறைய பாராட்டத் தோன்றும்போதே, 'அந்த இளம் பருவ முதிராக் காதல் நீடித்திருக்குமா?' என்ற சந்தேகமும் வருகிறது. வாழ்வின் யதார்த்தம் அறியாத, சினிமா வசனங்களைப் போல வாழ்க்கையை நினைத்திருக்கும் அவர்கள், வாழ்வெனும் பெரும் சூறாவளிக்கு முன்பு தாக்குப்பிடித்து நிற்பார்களா? அத்தகைய மனத் திண்மை அவர்களுக்கு இருக்கிறதா?.. என்ற கவலைகளும் எழுகின்றன. மறுபக்கம் சாதி என்னும் கொடும் மிருகம், அந்த இளஞ்ஜோடிகளை எந்தவிதக் கரிசனமும் இல்லாமல் கடினமாகக் கையாள்கிறது. அடி, உதை, வீட்டுச் சிறை, சித்ரவதை, கொலை முயற்சி... என வகை, வகையாக சித்ரவதைக்கு உள்ளாக்க, வேறு வழியே இல்லாமல்தான் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற நேர்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். அல்லது குடும்பம் தங்கள் காதலை முதிர்ச்சியுடன் அணுகாது என்பதை உணர்ந்து அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர்.
இந்த நிலையில், இந்தக் காதல் ஜோடிகளை நாம் எப்படி மதிப்பிடுவது? இவர்களுடைய காதலை 'முதிராக் காதல்' என்று சொன்னால், உறவினர்களின் வெறிபிடித்த அணுகுமுறை முதிர்ச்சியானதா?
சங்க காலம் முதல் ஷங்கர் காலம் வரை காதலைப் பிரதானப்படுத்தியே தமிழ்ச் சமூகம் இயங்கிக்கொண்டிருக்க... இளைஞர்கள் மட்டும் இவற்றில் இருந்து அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பு, எப்படிச் சரியானதாக இருக்க முடியும்?
அண்மைக் கால காதல் உதாரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்...
அரூர் பக்கம் கொக்கிரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்கிற தலித் இளைஞரும், இடைநிலை சாதியைச் சேர்ந்த கவிதாவும் வீட்டைவிட்டு வெளியேறி பெருமாள் கோயிலில் திருமணம் செய்துகொள்கிறார்கள். கடத்தல் வழக்கில் காதல் ஜோடி இருவரையும் அழைத்து வந்த போலீஸார், சில பல மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்து பேசுகிறார்கள். இறுதியில் கவிதா, பிரகாஷைப் பிரிவதாகச் சொல்லி பெற்றோருடன் செல்கிறார்.
தருமபுரி அருகே உள்ள பறையப்பட்டியைச் சார்ந்த நிரோஷாவுக்கு இன்னும் குழந்தைக் குரலே உடையவில்லை. ஆனால், இடுப்பில் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நிற்கிறார். காதலித்தபோதே கர்ப்பமான நிரோஷாவை, உயர்சாதி காதலனான விஸ்வநாதன் கருக்கலைப்புக்கு நிர்பந்தித்தார். அதற்கு நிரோஷா மறுத்துவிட, காதலன் தப்பியோடிவிட்டார். விஸ்வநாதன் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டிருக்கும் நிலையில், அந்தக் குழந்தைக்கு இப்போது வயது இரண்டு.
முள்ளிப்பட்டி ரமேஷ், அருந்ததியர் சாதியைச் சார்ந்தவர். கல்லூரியில் படித்துக்கொண்டே அரிசி ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்த ரமேஷ§க்கும், அரிசி ஆலை முதலாளியின் மகள் சங்கீதாவுக்கும் காதல். கடந்த வருடம் மத்தியில் வீட்டைவிட்டு வெளியேறிய சங்கீதாவை, சல்லடை போட்டுத் தேடியது அவரது குடும்பம். ஆட்கொணர்வு மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை ரமேஷ்-சங்கீதா இருவரும் எங்கு இருக்கிறார்கள், என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சங்கீதாவின் உறவினர்களும் தங்கள் தேடுதல் வேட்டையை நிறுத்திவிட்டனர்.
இவை, மிகச் சொற்ப உதாரணங்கள் மட்டுமே. இப்படி ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான காதல் பிரச்னைகள் தமிழகத்தில் முளைத்துக் கிளைக்கின்றன. புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வோர் மிகச் சிலர். 'உனக்கும் எனக்கும் ஒட்டு, உறவு இல்லை' என்று எழுதி வாங்கிக்கொண்டு சாபம்விட்டுச் செல்வோர் ஒரு சிலர். இவற்றைத் தாண்டி ஆயுதம் தூக்கும்போதுதான் சிக்கல் வருகிறது.
காதலை எரிக்கும் சா'தீ'!
சாதியோடு பொருளாதாரப் போராட்டத்தையும் எதிர்கொள்ளும் திராணியும் பெரும்பாலான கிராமப்புற இளம் தலைமுறைக்கு வாய்க்காததால் ஊரார்/உற்றாரின் அழுத்தங்களுக்கு அஞ்சிப் பிரிந்துவிடுகிறார்கள் அல்லது தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்த நெருக்கடிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் சாதி வெறியர்கள்... ஒன்று, காதல் ஜோடிகளைக் கொலை செய்கிறார்கள் அல்லது சட்டபூர்வமான உதவியோடு பிரித்துவிடுகிறார்கள்.
''தமிழகம் முழுக்க சாதி கலப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு இருக்கிறது என்றபோதிலும், இளவரசன் மரணத்துக்குப் பின்னர் வட மாவட்டங்கள் முழுக்கக் காதல் திருமணங்களுக்கு எதிரான கொந்தளிப்பு காணப்படுகிறது. இந்தப் பகுதியில் பெரும்பான்மை சாதியைச் சார்ந்தவர்கள் கிராமங்களைக் கட்டுப்படுத்தும் இடத்தில் இருக்கின்றனர். இவர்கள்தான் பஞ்சாயத்துத் தலைவர்கள். இவர்களை மீறிக் காதலிப்போர் தப்பிப் பிழைப்பது மிகக் கடினம். மற்றபடி தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள், சாதியை ஒழிக்க வேண்டும் என்று எண்ணி, மேல்சாதிக்காரர்களாகத் தேடிப் பிடித்துக் காதலிப்பது இல்லை. அந்த வயதில், பருவத்தில் காதல் வருகிறது, அவ்வளவுதான்'' என்கிறார் தருமபுரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வேடியப்பன்.
இளவசரன்-திவ்யா விவகாரத்துக்குப் பிறகு, வட மாவட்டங்களில் காதல் என்பது கெட்ட வார்த்தையாக மாற்றப்பட்டுள்ளது. வட மாவட்ட கிராமம் ஒன்றின் கார்த்தி - மீனா தம்பதியினரே இதற்கு உதாரணம். (தம்பதியரின் எதிர்கால நலன் கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
''மீனா, தலித் சமூகத்தைச் சார்ந்தவர். எங்கள் காதலை என் வீட்டில் ஏற்றுக்கொண்டனர். ஆனால், மீனா வீட்டில் எதிர்ப்பு. அதையும் மீறி 2010-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டோம் ஒரு வருடத்துக்குள் எல்லோரும் சமாதானம் ஆனார்கள். சொந்த ஊரிலேயே எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்துவந்தோம். ஆனால், திவ்யா - இளவரசன் காதல் பரபரப்புக்குப் பிறகு, எங்களை அவர்கள் எதிர்கொள்ளும் பார்வை மாறியது. இளவரசன் மரணத்தின்போது, எங்களைச் சத்தம் இல்லாமல் ஊரில் இருந்து ஒதுக்கினார்கள். கோயில் திருவிழாவுக்கு எங்களிடம் மட்டும் வரி வாங்கவில்லை. 'ஏன்?' என்று என் பெற்றோர் கேட்கப்போனபோது, 'உங்க மகன் தலித் பெண்ணை கல்யாணம் கட்டியிருக்கான். அந்தப் பொண்ணோட டி.சி-யைக் கொண்டாந்து பஞ்சாயத்து கமிட்டிக்கிட்ட காட்டுங்க. தலித்தா இருந்தா அந்தப் பொண்ணை வெட்டிவிடணும். மற்ற எந்தச் சாதியாக இருந்தாலும் பிரச்னை இல்லை' என்று ஊர்ப் பஞ்சாயத்து தீர்ப்புச் சொன்னது.
அவர்களை மீறி ஊரில் வாழமுடியாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு வழக்குத் தொடர்ந்தேன். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு போலீஸும் காவலுக்கு இருக்கிறது. ஆனால், அந்தப் போலீஸாரே எங்களுக்கு எதிராக வழக்குப் போடுவதோடு, சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நடக்கிறார்கள். அன்றாடம் கோர்ட்டுக்கும் கேஸுக்கும் அலைவதாலும், பாதுகாப்பு இல்லாததாலும் என்னால் வேலைக்கே செல்ல முடியவில்லை. ஆனால், என்ன ஆனாலும் என் மனைவியை நான் கைவிடுவதாக இல்லை'' என்ற கார்த்திக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.
பெற்றோரின் அரசியலும், காதலர்களின் பொறுப்பின்மையும்!
மிக இளம் வயதினரிடையே உண்டாகும் காதல், திருமணம் என்ற எல்லையை எட்ட முடியாமல் போவதில் பெற்றோரின் பங்கு குறித்துப் பேசுகிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ். ''இளம் காதலர்கள் தோல்வி அடைவதற்கு, இரு தரப்புப் பெற்றோர்களின் ஆதரவின்மைதான் காரணம். வருமானத்துக்கு வழி இல்லாமல் பெற்றோர்களின் ஆதரவும் இல்லாதபோது இந்தத் திருமணங்கள் முறியக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதற்கான பின்புலமாகப் பெரும்பாலும் இருப்பது சாதி உணர்வுதான். சாதி மீறிய காதல் பெற்றோர்களுக்குத் தெரியவரும்போது உயர் சாதிப் பெற்றோர்கள் உடனடியாகத் தங்களின் பெண்ணுக்கு வேறு ஒருவருக்குத் திருமணம் செய்ய முயல்கிறார்கள். இந்தச் சூழலில்தான் இளம் காதலர்கள் தப்பியோட வேண்டியுள்ளது. இதுபோன்ற சாதி மீறிய காதலைப் பொறுத்தமட்டில், இரண்டில் எது குறைந்த சாதியோ, அந்தச் சாதியைச் சார்ந்தவர்களின் ஆதரவு காதலர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. ஆனால், ஆதிக்க சாதியினர் இதற்கு எதிராக ஒரு வன்முறையை உருவாக்கும்போது தற்கொலை அல்லது கொலையில் முடிந்துவிடுகிறது. இளம் வயது காதல், தோல்வியில் முடிவதில்கூட சாதி ஒரு முக்கியமானப் பங்கு வகிக்கிறது!'' என்கிறார்.
அதே நேரம் இளம் பருவக் காதல்களின் தோல்விக்கு அவர்களின் ஆளுமையின்மையும் ஒரு காரணம். இதற்கான சமூக - அரசியல் கோணத்தை விவரிக்கிறார், சாதி மறுப்பு காதல் திருமணங்கள் தொடர்பான வழக்குகளில் ஆஜரான, மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு.
''சாதியை மீறிக் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி உயிர் அச்சுறுத்தலோடு தஞ்சம் அடைந்த சிலரின் வழக்குகளில் நாங்களே ஆஜராகி அவர்களைப் பாதுகாத்திருந்தாலும்கூட, இது தொடர்பாக சில கருத்துகளைச் சொல்லியாக வேண்டியுள்ளது.
இன்றைய இளம் பருவக் காதல்களில் பல தோல்வியில் முடிய காரணம், அவர்களின் பொறுப்பின்மைதான். இதில் காதல் என்ற உணர்வும் செல்போனும் பெரும்பங்காற்றுகின்றனவே தவிர, அறிவுக்கோ உழைப்புக்கோ இடம் இல்லை. அதன் விளைவாகத் தங்களுடைய காதலை சாதிக்கோ மதத்துக்கோ எதிரான ஒரு கலாசாரக் கலகமாக இவர்களால் மாற்ற முடியவில்லை. அந்த எண்ணமே இவர்களிடம் இல்லை. பெரும்பாலும், ஓடிப்போகும் பெண்ணின் கழுத்தில் கிடக்கும் நகைகள் தீரும் வரை வாழ்கிறார்கள். காதல் என்பது இயல்பான ஓர் உணர்வு என்பது மாறி, அது இன்றைய தாராளமயக் கலாசாரத்தில் ஒரு நுகர்வு வெறியாக மாறிக்கொண்டிருக்கிறது. இது எப்படிப் பார்த்தாலும் கேடுதான். பள்ளிகளில் சமூக ஒழுக்கம் சார்ந்து மாணவர்களுக்குப் போதிப்பதன் மூலம் இதை ஓரளவு சரிசெய்ய முடியும்'' என்கிறார்.
எல்லாவற்றிலும் நுனிப்புல்!
ராஜு சொல்வது போல, காதலர்களின் பொறுப்பற்றத் தன்மையும் அது தோல்வியில் முடிவதற்கு முக்கியமானப் பங்கு வகிக்கிறது. இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் காதலில் மட்டும்தான் இப்படி ஆழமின்றி மேலோட்டமாக இருக்கிறார்கள் என்பது இல்லை. அவர்களின் மொத்தச் சிந்தனைப்போக்கும் வாழ்க்கைமுறையும் அப்படித்தான் இருக்கின்றன. எதற்கும் மெனக்கெடாத, எதிலும் நிதானம் இல்லாத, எல்லாவற்றிலும் அவசரப்படும் தன்மை அவர்களின் ஒவ்வொரு செயலிலும் நிரம்பியுள்ளது.
குறிப்பிட்ட ஒரு விஷயத்தின் விளைவுகள் குறித்து தீர்க்கமாகச் சிந்தித்து முடிவு எடுக்கும் ஆற்றல் அவர்களிடம் இல்லை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எதைப் பற்றியும் ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இல்லை. வீட்டில் ஒரு பிரச்னை என்றால், அதை எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் இல்லை. சொன்னதைச் செய்து, சொல்லிக்கொடுத்ததை மனப்பாடம் செய்யும் வெறும் கிளிப்பிள்ளைகளாக வளர்கிறார்கள். இந்தப் புரிதலில் இருந்துதான் இவர்களின் காதலையும் நாம் மதிப்பிட வேண்டும். அதாவது, காதலில் மட்டும் அல்ல... இவர்களின் மொத்த சிந்தனையுமே முதிரா நிலையில்தான் இருக்கிறது.
இது எதிர்மறைப் பார்வையாகத் தோன்றலாம். நவீன இளைஞர்களின் தொழில்நுட்பத் திறமைகள் குறித்த சிலாகிப்புகள் நாள்தோறும் வந்துகொண்டிருக்கும் நிலையில், அவர்களின் 'சிந்தனை மந்தம்' குறித்த இந்தக் கருத்து உண்மையற்றதாக எண்ண வைக்கலாம். உண்மை என்னவெனில், அத்தகைய திறமைக்கார இளைஞர்களும் இருக்கிறார்கள்தான். ஆனால், அவர்கள் எண்ணிக்கையில் மிக, மிகச் சொற்பம்.
நாம் பேசும் பெரும்பான்மை இளைஞர்கள், 1990-களில் வந்த புதிய தாராளமயக் கொள்கையின் விளைவாக, கடந்த 20 ஆண்டுகளில் உருவான புதிய நடுத்தர வர்க்கத்தின் வாரிசுகள். அந்த நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை நகல் எடுத்து வாழ முயற்சிக்கும், அதற்கும் கீழ் உள்ள அடுக்கின் மக்களைப் பற்றியே நாம் பேச வேண்டும். இன்று வீதிகள்தோறும் வளைய வருபவர்கள் இவர்கள்தான். இவர்களுக்குப் போராட்டம் என்றால் மெழுகுவத்தி ஏந்துவது, சமூகப் பொறுப்பு என்றால் ஊழலுக்கு எதிராக 'மிஸ்டு கால்' கொடுப்பது, வேலையெனில், கேம்பஸில் தேடிவந்து தரப்படுவது, மகிழ்ச்சி என்பது வார இறுதிக் குடி, விளையாட்டு எனில் வீடியோ கேம்ஸ், அறிவு என்பது கூகுள் ஆப்ஸ்... இவ்வளவுதான் இவர்களின் உலகம். இத்தகைய எண்ண ஓட்டமும் வாழ்க்கைமுறையும் உள்ள இருவர் சேர்ந்து செய்யும் காதல், அடிப்படையிலேயே ஆழம் இன்றி இருப்பதில் வியப்பு இல்லை.
இந்தப் பின்னணியில் இவர்கள், வீட்டைப் பகைத்து, உறவுகளைப் பகைத்து செய்யும் காதல் திருமணம் தோல்வியில் முடிந்தால், அது அவர்களின் சொந்தப் பிரச்னையாக மட்டும் முடிவது இல்லை. காதலுக்கு எதிரான பிரசாரத்துக்கு இத்தகைய தோல்விகள் வலுசேர்க்கின்றன. அது மேலும் சாதியை இறுக்கமாக்குவதுடன், பெண்கள் மீதான வீட்டாரின் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கின்றன. ஆகவே, முன் எப்போதையும்விட நிதானமாகவும், கவனமாகவும், பொறுப்புடனும் காதலர்கள் நடந்துகொள்ளவேண்டிய காலம் இது. அவர்களை அவ்வாறு சுதந்திரச் சிந்தனை உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.
இனிவரும் காலத்தில் பெற்றோர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பெரும்பாலான இளைஞர்கள் காதல் திருமணம்தான் செய்யப்போகிறார்கள். இதை எந்தப் பெற்றோராலும் அணைபோட்டுத் தடுத்துவிட முடியாது. காலத்தைப் பின்நோக்கி நகர்த்த முடியாது. இந்த நிலையில் பிள்ளைகளின் சிந்தனையை ஒழுங்குபடுத்தினால் அவர்கள் தேர்வுசெய்யும் வாழ்க்கைத் துணையும் சரியானவர்களாக இருப்பார்கள். மாறாக நகை, பணம், வரதட்சணை என்று பெற்ற பிள்ளையை ஒரு ரியல் எஸ்டேட் முதலீடு போல நினைத்தால், கடைசியில் அவர்கள் ஒரு பெண்ணையோ, பையனையோ காதலித்து உங்கள் முதலுக்கே வேட்டு வைப்பார்கள்.
இதைத் தடுக்கவே முடியாது!