ஆனால், நிறைய பணமும், நீண்ட பாரம்பரியமும் இருந்தால்தான் ஒரு தொழிலில் ஜெயிக்க முடியும் என்பதில்லை. சரியான பொருளைத் தயாரித்து, அதை சரியாக சந்தைப் படுத்தினாலே நிச்சயம் வெற்றிதான் என்பதற்கு உதாரணமாக இருக்கும் நிறுவனங்களைத்தான் இனிவரும் வாரங்களில் நாம் பார்க்கப் போகிறோம். அந்தவகையில், நாம் முதலில் பார்க்கப்போவது, ஆச்சர்யமும் சுவாரஸ்யமும் மிகுந்த கூகுளின் கதையை!ஒரு தொழில் தலைமுறை தாண்டி வெற்றிகரமாகச் செயல்பட மேற்கொள்ளவேண்டிய தந்திரங்களைப் பற்றி கடந்த வாரங்களில் பார்த்தோம்.
கூகுள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் இன்றைய தேதியில் இணைய உலகத்தில் யாரும் இயங்கவே முடியாது. கூகுள் ஆண்டவருக்கு எல்லாமே தெரியும். எதைப் பற்றி வேண்டுமானாலும் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்த போது லாரி பேஜ் (Larry Page) மற்றும் சேர்ஜி ப்ரின் (Sergey Brin) இருவரும் சேர்ந்து தங்களது ஆராய்ச்சிப் படிப்புக்காக எடுத்துக்கொண்ட கான்செப்ட் இது. ஆனால், கூகுளின் இன்றைய மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் சுமார் 350 பில்லியன் டாலர். உலக அளவில் மிக சொற்ப நிறுவனங்களே இந்த அளவுக்கான பங்கு மதிப்பைக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் கூகுள் நிறுவனத்துக்கு நூற்றாண்டு கண்ட அனுபவமோ அல்லது தொழில் பாரம்பரியம்கொண்ட வரலாறோ கிடையாது. 1998-ல்தான் தொடங்கினார்கள். ஏறக்குறைய பதினைந்து வயதுதான் இந்த நிறுவனத்துக்கு.
கூகுளைத் தொடங்கியபோது அதன் நிறுவனர்களாக லாரி பேஜ் மற்றும் சேர்ஜி ப்ரின் இருவருக்கும் வயது இருபத்தைந்து இருக்கலாம். தொழில் துறையில் பல ஆண்டுகள் கரைகண்ட நிறுவனங்கள்கூட அடையமுடியாத இலக்கை கூகுள் அடைந்தது எப்படி?, தவிர, கூகுள் தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே இணையவசதியும், பல தேடுபொறி அப்ளிகேஷன்களும் இருக்கவே செய்தன. ஆனால், கூகுள் மட்டும் இத்தனை பெரிய வெற்றி அடைந்தது எப்படி?
வேகமான செயல்பாடு வேகமான வெற்றிக்கு அடிப்படை. வெற்றி மட்டுமல்ல, தோல்வி என்றாலும் வேகமான தோல்விதான். ஏதாவது ஒரு முயற்சி சரிவரவில்லை என்றால், வேகமாக அடுத்த முயற்சியில் இறங்கவேண்டும். அதேபோல, எந்த ஒரு விஷயத்தையும் மற்றவர்களைவிட துரிதமாக தரவேண்டும். இதுதான் கூகுள். தேடுபொறி என்கிற தொழில்நுட்ப சந்தையில் கூகுள் வெற்றி பெற்றது இப்படிதான். தவிர, நாம் நினைத்துப் பார்த்திராத ஒரு தொழில்நுட்பத்தை, அடுத்த தலைமுறை அப்ளிகேஷனை எவரும் யோசிப்பதற்கு முன்பாகவே தந்து ஆச்சர்யப்படவைக்கும் கூகுளின் தந்திரம் இது.
தேடுபொறி என்பது ஒரு விஷயத்தை உடனடியாக இணைய உலகில் தெரிந்துகொள்ளும் ஒரு அப்ளிகேஷன் என்பது நமக்குத் தெரியும். இதில் கூகுளுக்கு முன்பு இருந்த நடைமுறை என்னவென்றால், தேடப்படும் சொல் அல்லது விஷயம் அதிக தடவை இடம்பெற்றுள்ள இணைய பக்கங்களை முதலிலும் அதற்கடுத்து வரிசையாகவும் தரும்.
ஆனால், கூகுள் தேடுபொறி இதை மாற்றியது. அந்த சொல் அல்லது விஷயம் அதிக முறை இடம்பெற்ற இணையபக்கம் என்பதைவிட, அதிக பயனீட்டாளர்கள் வந்துசென்ற இணையபக்கத்தை முதலில் கொண்டு வந்துவிடும். மேலும், அதுதொடர்பான விவரங்கள் கிடைக்கும் இணைப்புப் பக்கங்களையும் கூடுதலாக கொடுப்பது. இதனால் பயனீட்டாளர்களது வேலை சுலபமாகிவிடும். இதுதான் அவர்களது ஆராய்ச்சியிலிருந்து உருவாக்கிய கூகுளின் அடிப்படை கான்செப்ட்.
இந்த அடிப்படையில் கூகுளை தொடங்கினார்கள். அடுத்த மூன்று வருடங்களில் உலக அளவில் இணைய பயன்பாட்டில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார்கள். அப்போது கூகுளுக்கு முதன்மை போட்டியாளராக இருந்தது யாகூ நிறுவனம். ஆனால், அடுத்தடுத்த வருடங்களில் யாகூ ஒரு பொருட்டே அல்ல என்பதுபோல அதன் வெற்றி இருந்தது.
கூகுள் இந்த வெற்றிக்கு கையாண்ட இன்னொரு தந்திரம், அதன் அட்டகாசமான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிர்வாக முறை. நிறுவனத்தைத் தொடங்கிய ஐந்து வருடங்களில் நிறுவனத்தின் நிர்வாக வேலைகள் செய்வதிலிருந்து நிறுவனர்கள் இருவரும் ஒதுங்கிக்கொண்டு தொழில்நுட்ப வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். அப்படி நிர்வாகத்துக்கு வந்தவர்தான் எரிக் ஸ்மித்.
அப்போது வேறொரு பிரபலமான நிறுவனத்தில் இருந்தவரை அப்படியே கொத்திக்கொண்டுவந்து கூகுளின் தலைமை ஏற்க வைத்தனர். கூகுளின் வெற்றிக்கு எரிக் ஸ்மித்தும் ஒரு முக்கிய காரணம். இதுபோல, தனக்குத் தேவையான வல்லுநர்களை தன்னோடு சேர்த்துக்கொள்ள கூகுள் தயக்கம் காட்டியதேயில்லை.
நீங்கள் திறமையானவர், உங்கள் திறமைக்குப் போட்டி இருக்கிறது என்று தெரிந்தால், உடனடியாக உங்களுக்கு கூகுளிலிருந்து அழைப்பு வந்துவிடும். இந்தக் கனவுகளோடு புது புது அப்ளிகேஷன்களை உருவாக்கி கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள் உலகம் முழுவதிலும் உள்ள மென்பொருள் இளைஞர்கள்.
ஆக, சிறப்பான திறமைகளை பயன்படுத்துவது, அசுரத்தனமான வேகம், சாத்தியமாகாத ஒன்றை மக்கள் நினைப்பதற்கு முன்பே சாத்தியப்படுத்துவது... இதுதான் கூகுள். கூகுளில் கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற அப்ளிகேஷன்களே இதற்கு சாட்சி.
கூகுள் கண்ணாடிக்கு (glass) ஆதரவும், எதிர்ப்பும் ஒரேநேரத்தில் கிளம்பி இருப்பதில் இருந்தே அதன் தயாரிப்புக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தை உணரலாம். கூகுள் ஆண்டவர் என்பது ஏதோ வேடிக்கை வார்த்தை அல்ல, ஜெயிப்பது எப்படி என்று அதற்கு நிச்சயம் தெரியும் என்பதைப் புரிந்துகொண்டதால்தான்!