அடையாறிலுள்ள எங்கள் வீட்டு மாடியில் நின்று பார்த்தால், அந்தத் தெருவின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை நன்றாகத் தெரியும்.
அதோ... குனிந்த தலை நிமிராமல் அங்குமிங்கும் பார்க்காமல் நிதானமாக நடந்து வருகிறாளே ஒரு பெண்- அவளுடைய பெயர் அவள் வேலை பார்க்கும் இடம் - அது ரகசியமாக இருக்கட்டும். ஆனால், அவளது வாழ்க்கையின் ரகசியமான திருப்பத்தை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பதற்காக அவளை அமர்த்தினோம். ஏழ்மையிலிருந்து ஒரு படி மேலே ஏறி நிற்கும் குடும்பத்துப் பெண். மாநிறம். சுமாரான அழகு. கலகலவென்று மனம்விட்டுப் பேசும் சுபாவம். இருபது வயது இருக்கும்.
குழந்தைகள் அவளை 'டீச்சர்... டீச்சர்' என்று அழைப்பதுபோல் நானும் 'டீச்சர்' என்றுதான் அழைப்பேன்.
ஒரு நாள் கேட்டேன்: 'டீச்சர்... நீங்கள் ஏன் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்?'
அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
'என்ன சிரிக்கிறீர்கள் டீச்சர்?'
அவள் என்னை அர்த்தத்தோடு பார்த்தாள். 'தேவி' என்று அழைத்தாள். அவள் என்னை அப்படித்தான் அழைப்பாள். 'தேவி! உங்களுக்கு அழகு இருக்கிறது, நிறைய பணமும், வசதியும், புகழும் இருக்கிறது. உங்களுக்கே இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கும்பொழுது, அழகோ, பணமோ இல்லாத என்னை யார் கல்யாணம் செய்து கொள்ள முன்வருவார்கள்?' என்று கேட்டாள்.
அவள் கேள்வியில் என் மனம் நெகிழ்ந்துவிட்டது.
'டீச்சர்... உங்களுக்குப் பணம் இருந்தால் கல்யாணம் நடக்கும் அல்லவா?' என்று கேட்டேன்.
'பணம் இருந்தால் கல்யாணம் நடக்கும்.'
'சரி, வீட்டில் பெற்றோர்களிடம் சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள். நான் பணம் தருகிறேன்' என்றேன். டீச்சரின் முகம் பூவாக மலர்ந்துவிட்டது. என்னையே வியப்போடு பார்த்தாள்.
'உண்மைதான். டீச்சர்... கல்யாணத்துக்கு நான் பணம் தருகிறேன்' என்று தீர்மானமாகச் சொன்னபொழுது, ஒரு பெண்ணின் நல்வாழ்வுக்காக நான் செய்யப்போகும் உதவியை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டேன்.
ஒரு வாரம் கழிந்தது. ஒரு 'இந்தி' படத்தில் நடிப்பதற்காக நான் புனாவுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்தப் பெண் வந்தாள். கல்யாணத் துக்கு அவள் தந்தை ஏற்பாடுசெய்து கொண்டிருப்பதாகச் சொன்னாள்.
'வெரிகுட்... நான் புனாவுக்குப் போய்விட்டு வந்ததும் பணம் தருகிறேன். இடையில் பணம் வேண்டுமென்றால்...?'
'வேண்டாம்... வேண்டாம். நீங்கள் வந்த பிறகே வாங்கிக்கொள்கிறேன்' என்று கூறிவிட்டாள் அவள்.
விதி, அப்போதுதான் அவள் வாழ்க்கையில் விளையாடத் தொடங்கியது. அதை அவளும் நானும் அறிந்தோமா என்ன?
புனாவில் நடந்த படப்பிடிப்பில் ஒருநாள் எனக்குத் தலையில் சரியான அடிபட்டு, காயமும் உண்டாகி விட்டது. மயக்கம், வலி. புண்ணும் புரையோடி விட்டது. சரியாகப் பேசக்கூட முடியாத நிலையில் படுத்தபடுக்கையாகச் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டேன். விஷயம் தெரிந்து பெங்களூர், மைசூரில் இருந்தெல்லாம் உறவினர்கள் வந்துவிட்டார்கள். போதும் போதாததற்கு சென்னை சினிமா உலகப் பட்டாளம் வேறு குழுமிவிட்டது. எப்போது பார்த்தாலும் கூட்டம், அமளிதுமளி.
ஆனால் நான்..? உள்ளமும் உடலும் சோர்வுற்றுப் படுத்த படுக்கையாகிவிட்டேன். யார் வருகிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்று ஒன்றுமே சரிவரத் தெரியாது.
இந்த நிலையில் அந்தப் பெண் வந்தாள். ஓரிரு நாட்கள் தயங்கித் தயங்கிப் பார்த்துவிட்டு கடைசியில் கல்யாண அழைப்பிதழை நீட்டினாள். அதைப் பார்த்துவிட்டு நான் என்ன பதில் சொன்னேன்? பணம் தருகிறேன் என்றேனா... இல்லை என்றேனா? வீட்டில் இருந்தவர்கள் என்ன சொன்னார்கள்? ஒன்றுமே எனக்குத் தெரியவில்லை.
இரண்டு மூன்று வாரம் கழிந்தது. எனக்கு உடல் நலமாகி படப்பிடிப்புக்குப் போக ஆரம்பித்தேன். ஒரு நாள் டீச்சரைச் சந்தித்தேன்.
'டீச்சர்.. கல்யாணம் நடந்துவிட்டதா?' என்று ஆர்வத்தோடு கேட்டேன்.
'இல்லை' என்று பதில் வந்தது. 'மாப்பிள்ளைக்குப் பணம் தருவதாகச் சொல்லியிருந்தார் அப்பா. ஆனால் அதன்படி பணம் தர முடியாததால், கல்யாணமே நின்றுவிட்டது.' என்றாள் அவள்.
நான் கலங்கிப்போனேன். 'டீச்சர்... மறுபடியும் உடனே ஏற்பாடுசெய்யுங்கள். இப்போதே பணம் கொடுத்துவிடுகிறேன்' என்று பதறினேன்.
அதற்கு அவள் சொன்ன பதில்..?
'வேண்டாம் தேவி. பணத்துக்காகத்தான் என்னைத் திருமணம் செய்துகொள்ள முன்வருகிறார்கள் என்று நினைக்க நினைக்க, திருமணத்தின் மீதே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. நான் கல்யாணமே செய்து கொள்ளப்போவதில்லை.'
இதைச் சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள்.
நான் கொடுப்பதற்குத் தயாராக இருந்தேன். அவளும் வாங்கிக்கொள்ளச் சம்மதிருந்தாள். ஆனால், விதி அதைத் தடுத்துவிட்டதே!