Sunday, September 1, 2013

நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்

எதிர்காலத்தில் விஞ்ஞானியாக வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருந்தால், அந்த ஆர்வத்தை வளர்த்துகொள்ள எளிதான, சுவாரஸ்யமான வழி... யூடியூப் வீடியோக்களை பார்த்து மகிழ்வது.

இணையத்தில் மிகவும் பிரபலமான யூடியூப்பில் காமெடி காட்சிகள், திரைப்படப் பாடல்கள், விளையாட்டு கிளிப்பிங்ஸ் என விதவிதமான வீடியோக்களைப் பார்த்து ரசிக்கலாம் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். யூடியூப் வெறும் பொழுதுபோக்கு வீடியோக்களுக்கானது மட்டும் அல்ல. இதில் கல்வி சம்பந்தமான சேனல்களும் கொட்டிக்கிடக்கின்றன. கணிதம் கற்க‌லாம்... ஆங்கிலம் அறியலாம்... வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

இதைப் போலவே அறிவியல் தொடர்பான சேனல்களும்  இருக்கின்றன. டி.வி., நிகழ்ச்சிகளைப் பார்ப்பது போலவே இந்த விஞ்ஞான வீடியோக்களையும் பார்த்து, அதன் மூலம் அறிவியல் தொடர்பான விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். இந்த வீடியோக்களில் விஞ்ஞான விஷயங்களை எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக விளக்குவார்கள். நமக்கு, அறிவியலின் சூட்சமங்களின் மீது ஆர்வம் ஏற்படும்.

உதாரணத்துக்கு, நாம் இருக்கும் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனில், நாமும் பிரபஞ்சத்தோடு சேர்ந்து விரிவடைகிறோமா? இந்தக் கேள்விக்கு மினிட்பிசிக்ஸ் (http://www.youtube.com/user/minutephysics) யூடியூப் சேனல் அழகாக விடை அளிக்கிற‌து.

பிரபஞ்சம் விரிவடைவதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் விரிவடைவது பிரபஞ்சம் அல்ல; பிரபஞ்சம் இருக்கும் 'வெளி' எனப்படும் ஸ்பேஸ்தான் விரிவடைகிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாம் வெளியில்தான் இருக்கின்றன. எனவே, வெளி விரிவடையும்போது பொருட்களும் விலகிச்செல்வது போல இருக்கும். ஆனால், புவியீர்ப்பு விசை போன்றவற்றின் தாக்கம் காரணமாக, இந்த விளைவு சரி செய்யப்பட்டுவிடுகிறது.

இதை, வீடியோவில் அழகான வரைபடங்களோடு அறியலாம். இதேபோல மற்றொரு வீடியோவில், உண்மையான வட துருவம் எது? பூமியின் இரண்டு கோடிகளும் துருவங்கள் எனப்படுகின்றன. ஆனால், பூமியானது பந்து வடிவில் இருக்கிறதே... அப்போது எந்தப் புள்ளியைத் துருவமாகக் கருதுவது?

சிக்கலான கேள்விதான் இல்லையா? பூமியானது பந்து வடிவில் இருந்தாலும் அது தன்னைத்தானே சுற்றுகிறது. அது சுற்றும் அச்சின் அடிப்படையில் வட துருவம், தென் துருவம் தீர்மானிக்கப்படுவதாக அழகிய வரைபடத்தோடு, எளிதாகச் சொல்லப்படுகிறது.

இரவில் இருட்டாக இருப்பது ஏன்? புவியீர்ப்பு விசை என்றால் என்ன? மழை பெய்யும்போது ஓடுவது சிறந்ததா, நடப்பது நல்லதா? இதுபோன்ற கேள்விகளுக்கு விஞ்ஞான அடிப்படையில் வீடியோ விளக்கங்கள் உள்ளன. இந்த வீடியோக்கள் மூலம் நம் அறிவியல் ஆர்வம் பட்டைத்தீட்டப்பட்டுகிறது.

தொலைக்காட்சியில் சேனல் மாற்றுவது போல யூடியூப்பிலும் சேனல் மாற்றி ரசிக்கலாம். மினிட் பிசிக்ஸ் தளத்தின் வீடியோக்களைப் பார்த்துவிட்டு, பெஸ்ட் ஆஃப் சயின்ஸ் (http://www.youtube.com/user/Best0fScience) சேனலுக்குத் தாவலாம். இந்த சேனலில், தாவரவியல், வானவியல் எனப் பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். கடந்த ஆண்டு கலக்கிய 'கடவுள் துகள்' பற்றிய வீடியோவும் இருக்கிற‌து.

புகழ்பெற்ற வீடியோ பிளாகரான ஹாங்கிரீன் என்பவரின் இணையதளத்தில் (http://hankgreen.com/ )சூப்பரான விஞ்ஞான வீடியோக்களைப் பார்த்து ரசிக்கலாம். இவரது தளத்தில் இருந்தே வீடியோ சேனலுக்கு செல்லலாம். மிகச் சிறந்த விஞ்ஞானிகளையும் அறிமுகம் செய்துகொள்ளலாம்.

நாசாவின் இணையதளமான பீரியாடிக்    http://www.youtube.com/user/periodicvideos, மற்றும் பில்னே http://www.billnye.com ஆகியவற்றிலும் விஞ்ஞான வீடியோக்களைப் பார்த்து ரசிக்கலாம்... அறிவியலை ஆர்வத்துடன் அறிந்துகொள்ளலாம்!