செழித்து வளர்ந்த செடியை, வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டாலும், அது பூத்துக் குலுங்குவது போலத்தான்... திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வருகிற பெண்ணின் சிறப்பும்! குடும்பச் சூழ்நிலை, வருமானம், பிள்ளைகளின் எதிர்காலம், கணவனின் மகிழ்ச்சி என்று மற்றவர்களுக்காக தன் சொந்த ஆசைகளைக்கூட மறைத்து குடும்பத்தை உயர்த்தும் பெண்கள் இருப்பதால்தான், பல கணவன்மார்களின் வாழ்க்கை பில்டிங் ஸ்ட்ராங்காக இருக்கிறது.
மனைவியின் அன்பை கணவன்மார்களுக்கு உணர வைப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதியை 'மனைவி நல வேட்பு' நாளாக வேதாத்திரி மகரிஷியின் அறிவுத் திருக்கோயில் சார்பில் கொண்டாடுகிறார்கள். வேதாத்திரி மகரிஷி தன் மனைவி லோகாம்பாளை மதித்து போற்றி வந்ததால், லோகாம்பாளின் பிறந்த தினமான ஆகஸ்ட் 30-ல் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த முறை ராஜபாளையத்தில் நடந்த விழாவுக்கு, மூத்த பேராசிரியர் அருள்நிதி ஜி.டி.கணேசன் தலைமை தாங்கி நடத்தினார்.
''வேட்பு என்றால் விருப்பம் என்று அர்த்தம். மனைவியின் நலத்தில் கணவனுக்கு விருப்பம் இருக்கிறது... இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நிகழ்ச்சிக்கு வருகிற தம்பதிகளை கணவனும், மனைவியும் முகம் பார்த்து எதிரெதிரே அமரும் படி உட்கார வைப்போம். கணவனின் இடது கை மீது மனைவியின் வலது கையையும், வலது கையின் மீது இடது கையையும் வைத்து, இருவரும் கண்ணோடு கண் நேர் கொண்டு பார்க்கச் சொல்வோம். இதன் நோக்கம்... கைகளின் மூலம் இருவரின் உயிரும் ஆத்மார்த்தமாக கலந்து, கண்கள் வழியாக இருவரும் தங்கள் காதலைப் பரிமாறிக் கொள்வார்கள் என்பதே. அடுத்ததாக, 'பூவைப் போல மென்மையான நீ செல்லும் இடமெல்லாம் மணக்கும்' என்பதை உணர்த்தும் விதமாக, மனைவிக்கு கணவன் பூ கொடுப்பார். பதிலுக்கு, 'இத்தனை அன்பான உங்களால்தான் என் வாழ்க்கை இனிக்கிறது' என்பதை அறிவிக்கும் விதமாக கணவனுக்கு பழம் கொடுப்பார் மனைவி. இறுதியாக, கணவன் தன் மனைவியை பூரணமாக ஆசீர்வதிப்பதோடு நிகழ்ச்சி நிறைவடையும்'' என்று நமக்கு விளக்கிய ஜி.டி கணேசன், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 55 ஜோடிகளிடமும் மனைவியின் மாண்பு, விட்டுக்கொடுத்தல், புரிந்துணர்தல் போன்றவற்றைப் பற்றி எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில தம்பதிகளிடம் பேசினோம்.
டி.ஏ.சங்காராஜா - எஸ்.மகாலட்சுமி: ''கல்யாணம் முடிஞ்ச இந்த 47 வருஷத்துல, எல்லா விஷயத்திலேயும் நான்தான் என் கணவருக்கு முன்னுரிமை கொடுத்துட்டு இருந்தேன். ஆனா, இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதுல இருந்து அவர் சுத்தமா மாறி போயிருக்கார். எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லி, என்னோட கருத்தையும் கேட்டுத்தான் செய்றார். இத்தனை வருஷம் கழிச்சு என்னை இவர் மதிக்கிறதுல நிச்சயம் மனசு நிறைஞ்சுதான் போயிருக்கு. இதை எங்களோட பொன்விழா கிஃப்டாதான் நான் நினைக்கிறேன்''.
ரவீந்திரன் - தனலட்சுமி: ''என் கணவர் 'வியட்நாம் வீடு' படத்துல வர்ற பத்மநாபன் மாதிரி எப்போவும் விறைப்பாதான் நடந்துக்குவார். அவரோட கேரக்டர் எனக்கு பழகினதுனால அதுக்கேற்ப நான் என்னை பழக்கிக்கிட் டேன். எனக்கு மகரிஷியைப் பிடிக்கும்ங்கிறது னால இருபது வருஷமா இந்த நிகழ்ச்சிக்கு நான் மட்டும் தனியாத்தான் போய்க்கிட்டு இருந்தேன். நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு நான் அவர்கிட்ட சொன்ன விஷயங்களைக் கேட்டு ஆச்சர்யப்பட்டவர், இந்த வருஷம் என்கூட வர்றேனு சொன்னதோட இல்லாம, வந்து கலந்துக்கிடவும் செஞ்சார். அதுக்குப் பிறகு இவர் கிட்ட நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறதை என்னால கண்டுக்கிட முடியுது. பாசத்தைக் கொட்டறார். இந்த பாசத்துக்காகத்தான் இத்தனை நாளா ஏங்கிட்டு இருந்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு''.
ரமேஷ் - வீரஜென்னி தம்பதி: ''என் கணவருக்கு பேங்க்ல வேலை. எப்பவுமே ரொம்ப பிஸியா இருப்பாரு. ஒரு அவசரத்துக்கு போன் பண்ணினாலும் எடுக்க மாட்டாரு. அப்படியே எடுத்தாலும் வேக வேகமா பேசிட்டு வெச்சிடுவாரு. அப்போல்லாம் மன சுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா, இந்த நிகழ்ச்சிக்குப் போயிட்டு வந்த பிறகு, குடும்ப விஷயத்தை பேச அர்ஜென்ட்டா போன் பண்ணினேன். போனை எடுத்தவுடனே 'என்னம்மா... சொல்லுடா, சாப்பிட்டியா'ன்னு இவரு கேட்டதுல குழம்பி, வேற யாருக்காவது போன் பண்ணிட்டோமோனு ஒரு நிமிஷம் தடுமாறி, அப்புறம் சந்தோஷத்துல அழுதுட்டேன்''.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கணவன்மார்களிடம் பேசினோம். ''ரொம்ப அற்புதமான நிகழ்ச்சி. என் மனைவியோட சில மணி நேரம் மனசு விட்டு பேச, பார்க்க முடிஞ்சது. நிகழ்ச்சிக்குப் போனதுல இருந்து, இதுக்கு முன்னாடி இத்தனை வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டோம்னு தோணினாலும்... இனி வரப்போகிற வருஷங்கள் எங்களுக்குள்ள நல்ல அன்பை, காதலை, பிணைப்பை உருவாக்கும்னு அடிச்சு சொல்வோம்'' என்று வார்த்தைகளில் நெகிழ்ந்து போனார்கள்.