Wednesday, August 28, 2013

திருமணத்தில் முதலுதவி, விருந்தோம்பல்

காரைக்காலில் நடந்த உறவினர் வீட்டுத் திருமணத்தில், முதல் நாள் மணமேடையில் குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஐந்து வயதுக் குழந்தை கால் இடறி மேடைப் படியில் விழ, நெற்றியின் நடுப்பகுதியில் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாமல் பதற, தன் அறையிலிருந்து முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்த மணப்பெண், நேர்த்தியாக முதலுதவி செய்து, தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இத்தனைக்கும் அந்தப் பெண், கல்லூரியில் துணைப் பேராசிரியராகத்தான் பணிபுரிகிறார். பிறகெப்படி, அத்தனை நேர்த்தியாக முதலுதவி செய்ய முடிந்தது?

''என்னுடைய மூன்று மகள்களுக்குமே அவர்களுடைய 16-வது வயதில், தனியார் மருத்துவமனையில் முதலுதவிப் பயிற்சியைக் கொடுத்துவிட்டேன். சொல்லப் போனால், பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே இந்தப் பயிற்சியைக் கட்டாயமாக்கலாம்' என்று விளக்கம் தந்தார் மணப்பெண்ணின் தந்தை!

அருமையான யோசனைதானே?!


விருந்தோம்பல் முக்கியம்!

சமீபத்தில் நண்பரின் மகன் திருமணத்துக்காக வெளியூர் சென்றிருந்தோம். அண்ணனின் திருமணத்துக்காக தன் தோழிகளையும் அழைத்திருந்தாள் நண்பரின் மகள். திருமணம் முடித்து ரயிலில் திரும்பியபோது, அந்தப் பெண்களும் எங்களுடன்தான் ரயிலில் வந்தனர்.

அவர்கள் அனைவரும் இறுக்கமாக இருக்க, விசாரித்தேன். ''ஆன்ட்டி... எங்க ஃப்ரெண்டு வற்புறுத்திக் கூப்பிட்டதாலதான் எல்லார் வீட்டுலயும் எங்களை இவ்வளவு தூரம் அனுப்பி வெச்சாங்க. ஆனா, கல்யாணத்துல எங்களுக்கு தங்குறதுக்கு, குளிச்சு கிளம்புறதுக்கான வசதிகளைப் பார்த்து செய்துகொடுக்க ஆள் இல்லாம திணறிட்டோம். யாரும் 'சாப்பிட்டீங்களா..?'னுகூட ஒரு வார்த்தை கேட்கல. தோழியோ... அண்ணனோட கல்யாண வேலைகள்ல 'பிஸி'யா இருந்தா'' என்றனர் வேதனையுடன்.

வீட்டு விசேஷங்களுக்கு நண்பர்கள், தோழிகளை அழைக்கும் இளசுகளே... அவர்களை மனம் கோணாமல் விருந்தோம்ப வேண்டியது உங்கள் பொறுப்பு இல்லையா? அப்படி கவனிக்க இயலாது எனில், அழைக்காமல் விட்டுவிடலாம், நட்பாவது பாதிக்காமல் இருக்கும் இல்லையா?!