ஒருவருக்கு திருமணம் முடிந்த அடுத்த மூன்றாவது மாதத்திலேயே 'எதுவும் விசேஷம் உண்டா?' என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள் கேட்கும் 'விசேஷம்', குழந்தைச் செல்வம்தான்! அப்படி, நம்முடைய ஆயிரம் எதிர்பார்ப்புகள், ஆசைகளோடு பிறக்கப்போகும் குழந்தை அழகு, அறிவு மற்றும் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் வாழவேண்டும் என்று விரும்புவோம்தானே?
திருமணம் ஆன அடுத்த பத்தாவது மாதத்தில் குழந்தையைப் பெற்றுக்கொள்பவர்கள் குறைவு. அப்படியே குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப் பட்டாலும், சில காரணங்களால் குழந்தை பாக்கியம் தள்ளிப் போகலாம். ஒருவருக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றால், அதற்கான அமைப்புகள் அவரது ஜாதகத்திலும், கைரேகையிலும் நன்றாக இருக்க வேண்டும். அந்த வகையில், குழந்தைச் செல்வத்தைக் காட்டும் கைரேகை அமைப்பு பற்றி இங்கே பார்ப்போம்.
தம்பதி இருவருக்கும் புத்திர காரகன் என்று அழைக்கப்படும் குருவுக்கு உரிய மேடு நன்கு அமைந்திருக்க வேண்டும்.
இதயரேகை நேர்க்கோடுபோல செங்குத்தாக அமையாமல், படத்தில் காட்டியுள்ளபடி புதன் மேட்டுக்குக் கீழே கிளைகளுடன் அமைந்து, புதன், சூரியன், சனி மேடுகளை கடந்து, குரு மேட்டின் மையப் பகுதியில் கிளையுடன் அமைந்திருக்க வேண்டும்.
திருமண ரேகை நல்ல நீளமாகவும் தெளிவாகவும் அழுத்தமாகவும் இளஞ்சிவப்பு நிறத்தில் திகழ, அதன் மீது தெளிவான செங்குத்துக் கோடுகள் (குழந்தை ரேகைகள்) காணப்பட வேண்டும்.
சுக்கிரமேடு குறுக்குக் கோடுகள் இல்லாமல் நன்கு உருண்டு திரண்டு பரந்துவிரிந்து காணப்பட வேண்டும்.
- இதுபோன்ற அமைப்பு ஒருவருக்கு அமைந்துவிட்டால்... கணவன், மனைவி மீதும், மனைவி, கணவன் மீதும் இறுதிவரை மாறாத பாசத்துடன் இருப்பார்கள். அதோடு, அன்பின் அடையா ளமாக அழகான, அறிவான, ஆரோக்கியமான குழந்தை பாக்கியத்தை உரிய காலத்தில் பெறுவார்கள். நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்பதுபோல் இன்புற்று வாழ்வார்கள்