திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பர். ஆனால், இந்தக் கணினி யுகத்தில் நிகழும் அவசரகோல திருமணங்களால், குறுகிய காலத்துக்குள் தம்பதிக்கு இடையே மனமுறிவும், விவாகரத்துகளும் அதிகரித்துவிட்டன.
இன்னும் சில குடும்பங்களில் தினம் தினம் கணவன் - மனைவிக்கு இடையே பிரச்னை, ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துப் பேசிக்கொள்ளாமல் வாழும் நிலை!
ஆங்கிலக் கவிஞர் ஒருவர் சொல்கிறார்... 'Life is not a bed of roses; It is field of battles! வாழ்க்கை என்பது பூக்கள் நிறைந்த மெத்தை அல்ல; அது யுத்தங்கள் நிறைந்தது என்கிறார் அவர். வீண் ஈகோ, சந்தேகம், ஆளுமை ஆகிய காரணங்களால் திருமண வாழ்க்கையானது சிலருக்கு தெருமுனை வாழ்க்கை ஆகிவிடுகிறது!
சரி! திருமண முறிவுகள், தம்பதி ஒற்றுமையில் விரிசல், ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்தல் என இதுபோன்ற வாழ்க்கை நிலைக்கு கிரஹச் (வீட்டின்) சூழல் மட்டும்தான் காரணமா? ஜாதகத்தின் கிரக நிலைகளையும் ஆராய்வது அவசியம் அல்லவா?
ஜாதக அலங்காரம் சொல்லும் கிரக நிலைகள்...
* மேஷ லக்னத்தில் பிறந்த ஆண் ஜாதகருக்கு, துலாத்தில் சூரியன் நீசம் அடைந்திருக்க, 7-ல் சந்திரனும் கேதுவும் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகர் மனைவியைப் பிரிந்து விவாகரத்து வரை செல்ல நேரிடும்.
* ரிஷப லக்ன ஆணுக்கு தனுசில் செவ்வாய் இருந்தால், சொத்துப் பிரச்னையால் பிரிவு நேரலாம்.
* மிதுன லக்ன ஆணுக்கு சனி, செவ்வாய் சேர்ந்து அமைந்திருக்க, தாழ்வு மனப்பான்மை யால் மனைவியைப் பிரிய நேரிடும்.
* கடக லக்ன ஆணுக்கு, சனி கும்பத்தில் இருக்க... மற்றொரு பெண் வாழ்வில் குறிக்கிட, தனது குடும்ப வாழ்வில் சலிப்பு ஏற்பட்டு மனைவியைப் பிரிவார்.
* சிம்ம லக்ன ஆணுக்கு, மீனத்தில் சனி அமர்ந்திருந்தால் திருமணக் காலத்திலேயே சில பிரச்னைகள் வரலாம்.
* கன்னி லக்ன ஜாதகருக்கு மேஷத்தில் குரு இருப்பின், மனைவி சொல்லைக் கேட்காமல் வீண் வம்புகளில் ஈடுபடுவதன் காரணமாக பிரிவு ஏற்படலாம்.
* துலாம் லக்ன ஜாதகருக்கு, செவ்வாய் ரிஷபத்தில் இருந்து சூரிய பார்வை ஏற்பட்டால், திருமணக் காலத்தில்கூட பிரச்னை வரலாம்.
* மீன லக்ன ஜாதகருக்கு புதன் துலாத்தில் சேர்ந்திருந்தால், குடும்ப உறுப்பினர்களது துர் ஆலோசனை காரணமாகப் பிரச்னைகள் ஏற்பட்டு மனைவியைப் பிரிய நேரிடும்.
பொதுவாக மணமுறிவு ஏற்படாமல் சுகமான வாழ்வைப் பெறுவதற்கு, மாங்கல்யகாரகனான சனி 12-ல் விரயமாகாமலும், மேஷத்தில் மறையாமலும் இருக்க வேண்டும். அதேபோன்று, களத்திரக்காரகனான சுக்கிரன், சூரியனுடன் சேராமலும், வேறொரு பாவக் கிரகத்துடன் சேராமலும் இருக்க வேண்டும்.
மங்களனாகிய செவ்வாய், அலி கிரக வீட்டில் அமர்ந்து பாவர்களால் பார்க்கப்படாமல் இருக்க வேண்டும். மேலும், குரு 10-ல் ஸ்தான பலன் இழந்து, பாவர்கள் பார்வை பெறாமல் இருந்தாலும் சாதகமே.
இனி, தம்பதி ஒற்றுமைக்கு அருள் செய்யும் ஐக்யபத்ய வழிபாட்டை அறிவோம்.
ஒரு குடும்பத்தில் ஆண் மகனுக்குப் பித்ரு தோஷம் இருந்தால், குடும்பத்தைப் பிரிய வாய்ப்பு உண்டாகும். அதைக் களைவதற்கு முதலில் பித்ரு அர்க்கியம் விடவேண்டும்.
நல்லதொரு சுபநாளில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து மடியுடுத்தி, பூஜையறையில் தீபம் ஏற்றி வையுங்கள். பிறகு, அரிசி மாவினால் ஸ்வஸ்திகம் வரைந்து அதன் மீது இரண்டு குத்துவிளக்குகளை தீபமேற்றி வைக்க வேண்டும். பின்னர், அன்றைய பஞ்சாங்கக் குறிப்புகளைச் சொல்லிவிட்டு, கீழ்க்காணும் குறிப்புகளின்படி மந்திரம் சொல்லவும் - செய்யவும் வேண்டும்.
ஓம் சமஞ்சந்து இத்யாதி மந்த்ரஸ்ய
சிவித் யீருபதி : (நெற்றியில் தொடுக)
அனுஷ்டுப் சந்த : (மூக்கில்)
சாவித்ரீ தேவதா (இதயத்தில்)
அனயோர் தம்பத்யோ அவிச்சிந்ந ப்ரீதி
அபிவிருத்யர்த்தே விநியோக :
(கைகூப்பி 11 முறை இதைச் சொல்லி வணங்க வேண்டும்)
பிறகு, கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
ஓம் சமஞ்சந்து விச்வே தேவதா
சமாபோ இருதயாநி நௌ
சம்மாதரிச்வாசம் தாதா
சமுதேஷ்டயீ ததாது நௌ
இதையடுத்து, ஐக்ய பத்ய சூக்த மந்திரம் கூற வேண்டும்.
ஸமானோ மந்த்ர: ஸமிதி ஸமானீ ஸமானம் மன: ஸஹ
சித்த மேஷாம் ஸமானம் கேதோ அபிஸம்ரபத்வம்
ஸம்ஞானேன்வோ ஹவிஷா யஜாம: ஸமானீவ ஆஹுதி:
ஸமானா ஹ்ருதயானீவ: ஸமானமஸ்து வோமன:
யதாவ: ஸுசகா ஸதி (பெயர்) புருஷ பத்நீ அந்யோந்ய :
(இதை 32 முறை ஜபிக்கவும்)
பின்னர் ஸ்த்ரீ புருஷ வஸ்ய துதியை 3 முறை கூறி, தீபத்தில் அரளி மலரைப் போட்டு பழம், கல்கண்டு, தாம்பூலம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.
இந்த பூஜை வழிபாடுகள் முடிந்ததும், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் படத்துக்கு சந்தன குங்குமத் திலகம் இட்டு, தீபாராதனை செய்து வழிபடுவது விசேஷம். 54 நாட்கள் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வணங்கிவர, உமையருபாகனாய்த் திகழும் இறைவன், உங்களையும் மனம் ஒருமித்த தம்பதியாய் வாழ வைப்பான்.
ஆலிங்கன நாகர் வழிபாடு
கணவரையோ அல்லது மனைவியையோ பிரிந்து வாழ்பவர், அருகிலிருக்கும் கோயில்களில் இரு பாம்புகள் பின்னிப் பிணைந்திருக்கும் நாக விக்கிரகத்தை வலம் வந்து வணங்கி, பாலபிஷேகம் செய்து (90 நாட்கள்) வழிபட, பிரிந்து சென்றவர் அழைக்காமலேயே விரைவில் வந்து சேர்வார் என்பது நம்பிக்கை.