சர்க்கரையை விரட்டும் 'தட்டுக் கொள்கை'!
டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்
உலகெங்கும் உள்ள டாக்டர்களில் பலரும், 'அரிசிக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடி சம்பந்தமில்லை' என்று நேற்று வரை அடித்துச் சொல்லி வந்ததை சர்க்கரை நோய்க்கும் அரிசிக்கும் உள்ள சம்பந்தம் பேசினோம். அதை உடைத்துப்போட்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகள் பற்றியும், அரிசிக்கும் சர்க்கரை நோய்க்கும் உள்ள நேரடித் தொடர்பைப் பற்றியும் ஆதாரங்களுடன் சொல்கிறேன்!
அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம்... சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் கடந்த 22 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்சம் மக்களிடம் நடத்திய ஆராய்ச்சி, திடுக்கிடும் பல உண்மை களை வெளியிட்டு, மருத்துவ உலகையே அதிர வைத்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு கப் (160 கிராம்) அரிசியை உணவாக எடுப்பவர்களுக்கு, மற்றவர்களைவிட 11% சர்க்கரை நோய்த் தாக்கம் அதிகம் என்றும், கூடுதலாக எடுக்கும் ஒவ்வொரு கப் அரிசிக்கும் அது 10 சதவிகிதமாக உயர்ந்து கொண்டே போகும் என்றும் கூறியிருக்கிறது ஹார்வர்டு பல்கலைக்கழகம்.
இந்த உண்மைகளை மருத்துவ உலகின் நம்பர் ஒன் ஆராய்ச்சி பத்திரிகையான 'பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்', மார்ச் 2012-ல் வெளியிட்டது. இதற்கு முன் சுமார் 20 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், 9 ஆராய்ச்சிக் குழுக்களின் இதே முடிவுகளை டாக்டர் பார்க்லே, அமெரிக்க மருத்துவ இதழ் ஒன்றில் 2008-ல் வெளிட்டார்.
இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் வெளிநாடுகளில் நடத்தப்பட்டவை. உலகில் சர்க்கரை நோயின் தலைமை பீடமாக உள்ள இந்தியாவில் நடத்தப்பட்டால்தானே அதன் நம்பகத்தன்மை சிறப்புப் பெறும்?
அதைச் செய்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபல சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் விஸ்வநாதன் மோகன்.
சென்னையில் வாழும் சுமார் 26 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆராய்ச்சியில் அரிசியின் பங்கு மிகத் தெளிவாகத் தெரிந்தது. அரிசி உணவை ஒரு நாளைக்கு 200 கிராமிலிருந்து 400 கிராமாக உயர்த்தினால்... சர்க்கரை நோயின் தாக்கம் 4 மடங்கு கூடுகிறது என்ற முடிவுக்கு அவர் வந்தார். நம்மில் பலரும் தினமும் மூன்று வேளையும் அரிசி உணவையே எடுப்பதால், 400 கிராம் தாண்டிவிடும்தானே..? இந்த முடிவுகளை 'பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன்' 2009-ல் வெளியிட்டது.
இவையெல்லாம், சம்பந்தப்பட்டவர் களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு முன்னதாக நடத்திய ஆராய்ச்சி முடிவுகள். ஏற்கெனவே சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு குறைந்த 'ஜிஐ' உணவு கொடுத்தால் என்ன ஆகும்..? ஒவ்வொரு உணவும் வயிற் றுக்குள் போய் ஜீரணமாகி, எவ்வளவு சீக்கிரம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது என் பதை கணக்கிடுவதற்கு 'கிளைசீமிக் இண்டெக்ஸ்' (Glycemic Index) என்று பெயர். இதைத்தான் சுருக்கமாக சுருக்கமாக 'ஜிஐ' (GI) என்கிறார்கள். சுத்த சர்க்கரையான குளுக்கோஸின் 'ஜிஐ' 100. இதை அடிப்படை அளவு கோலாக வைத்து மற்ற உணவுகளை யும் கணித்திருக்கிறார்கள். 85 'ஜிஐ' உணவுக்குப் பதிலாக 70 'ஜிஐ' உணவு கொடுத்துப் பரிசோதித்ததில், சர்க்கரையின் அளவு 10% குறைவது தெரிந்தது. குறைந்த 'ஜிஐ' உணவும், சர்க்கரை நோயாளிகளுக்குத் தரப்படும் அகர்போஸ் (Acarbose) என்கிற மருந்தும் கிட்டத்தட்ட ஒரே முறையில் வேலை செய்து, ஒரே அளவு சர்க்கரையைக் குறைக்கின்றன என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.
'ஜிஐ உணவு சித்தாந்தம் ஒரு செத்த பாம்பு... அதை அடிக்க வேண்டாம்' என்று கூறி வந்த அமெரிக்க சர்க்கரை நோய்க் கழகத்தின் கூற்று பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. 'அது செத்த பாம்பு அல்ல... உயிருடன்தான் இருக்கிறது. அடித்தே தீர வேண்டும்' என்று டாக்டர் ஓலிவர் ஆணித்தரமாகச் சொல்கிறார். குறிப்பாக, உலகில் சர்க்கரை நோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் 'ஜிஐ' உணவு சித்தாந்தம் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும்.
நம் நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி, நூற்றுக்கணக்கில் பலர் மடிகிறார்கள் என்று செய்தி வந்தால்... அரசாங்கம் பாய்ந்து வந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதைப் பார்க்கிறோம். அப்படியிருக்க, சர்க்கரை நோயால் கோடிக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கைகள் அவசியம் இல்லையா? குறைந்தபட்சம், குறைவான 'ஜிஐ' உணவுகளைப் பற்றிய விழிப்பு உணர்வையாவது ஏற்படுத்த வேண்டாமா? அண்மையில் இந்திய அரசு 'தேசிய சர்க்கரை நோய்/இதய நோய்/மூளை பாதிப்பு நோய்கள் தடுப்புத்திட்டம்' என்ற ஒன்றை அமைத்திருக்கிறது. இந்த அமைப்பு இந்தப் பணியைச் செய்யுமா?!
அரசாங்கம் செய்வது இருக்கட்டும், நம் அளவில் நாம் என்ன செய்யலாம்? இவ்வளவு சொன்ன பிறகும் - அரிசிதான் உங்களுக்குப் பிடித்த உணவு என்றே வைத்துக் கொண்டாலும், அதற்கும் வழி சொல்கிறேன். இலங்கைப் பேராசிரியை ஏகநாயகே சொல்வதுபோல், ''மலைபோல் குவித்து வைத்து அரிசியை உண்ணாதீர்கள். மாறாக, மிகவும் சுலபமான 'தட்டுக் கொள்கை' ஒன்றைப் பின்பற்றுவோமா..? உங்கள் தட்டில் கால் பங்கு மட்டும் அரிசி சாதம் இடுங்கள். மீதி முக்கால் பங்குக்கு கீரைகள், காய்கறிகள், பருப்பு என்று நிரப்புங்கள்'' என்கிறார் ஏகநாயகே. அப்படிச் செய்தால், அதிக 'ஜிஐ' உணவு கொஞ்சமாகவும், குறைந்த 'ஜிஐ' உணவு அதிகமாகவும் ஆகி, குளுக்கோஸ் சுமை குறையுமல்லவா..?
இதையாவது இனி செய்து பாருங்களேன்!