பாட்டி சொல்லை தட்டாதே
கருப்பாயி பாட்டியைத் தெரியாதவர்கள் அந்த வட்டாரத்தில் யாரும் இருக்க வாய்ப்பில்ல. அவ்வளவு பிரபலம். சுத்துப்பட்டுக் கிராமங்களில் பெண்பிள்ளை களுக்கோ, குழந்தைகளுக்கு சின்னதாக உடம்புக்கு எது வந்தாலும் உடனே கருப்பாயிப் பாட்டியைத்தான் தேடுவார்கள். பாட்டி என்றாலும் பார்ப்பதற்கு சிரித்த முகமும் சீதேவியுமாக இருப்பாள்... பேர்தான் கருப்பாயி. ஆளென்னவோ சிவப்புதான். அந்த அழகில்தான் பெரியகருப்பன் தாத்தா அந்தக் காலத்தில் சொக்கியிருக்க வேண்டும். காலம் அவள் முகத்தில் முதுமையின் அடையாளமாகக் கிழித்துச் சென்ற கோடுகள், நெடிய வாழ்வின் அனுபவங்களை நமட்டுச் சிரிப்புடன் நம்மிடம் சொல்லிக்கொண்டே இருக்கும். எண்பது வயதிலும் மஞ்சள் குங்குமமும் மலர்ந்த முகமுமாக காட்சியளிக்கும் கருப்பாயி பாட்டி, அந்தப் பகுதிக்கே மருத்துவக் கடவுளைப் போல.
கருப்பாயிப் பாட்டி வீட்டில் எப்போதும் வெளியாட்களின் கூட்டம்தான் இருக்கும். இப்போது பொங்கலுக்காக மகன் குடும்பம் பட்டணத்திலிருந்து வந்திந்தது. பத்தாவது படிக்கும் பேத்தி மரகதமும் பெற்றோருடன் வந்திருந்தாள். பேத்தி மேல் பாட்டிக்கு கொள்ளை பிரியம். மளமளவென்று வளர்ந்திருந்த பேத்தியைப் பார்த்து கருப்பாயி பாட்டிக்கு பெருமை பிடிபடவில்லை.
ஆனால் வந்ததிலிருந்தே மரகதத்தின் முகம் மட்டும் வாட்டமாக இருப்பதைப் பாட்டி கவனிக்கத் தவறவில்லை.
"அடியே... பேத்திக்குட்டி... இங்க வாடீ.. எஞ் செல்லம்... வந்ததுலருந்து பாட்டிக்கிட்ட சிரிச்சு கூட பேசமாட்டங்கிரியே... என்னடி ஆச்சு ஒனக்கு..."
பேத்தியின் தலையைக் கோதியபடியே கருப்பாயி பாட்டி கொஞ்சலாகக் கேட்டாள்
"அது.. அது... பாட்டி... எனக்கு... போ பாட்டி.. எனக்கு வெக்கமா இருக்கு..."
சிணுங்கியபடியே எழுந்து ஓட எத்தனித்த பேத்தியை வலுவந்தமாகப் பிடித்து இழுத்து உட்காரவைத்து அணைத்துக்கொண்டு மீண்டும் துருவித் துருவிக் கேட்டாள்.
மரகதம் தயங்கித் தயங்கி, பாட்டியிடம் தன் பிரச்சனையை மெல்ல மெல்லச் சொல்லத் தொடங்கினாள்..
"அது வந்து பாட்டி...மாதத்துல அந்த மூனு நாள் ரொம்ப கஷ்டமா இருக்கு பாட்டி... அடி வயிறெல்லாம் வலிக்குது... காலு கையெல்லாம் அசதியா இருக்கு... வாந்தி வாந்தியா வருது... எந்திரிக்கவே முடியாம என்னென்னமோ செய்யுது பாட்டி..."
"அட கழுத... இதுக்கா வாடிப் போயி இருக்கே... அது அப்படித்தாண்டி செல்லம் இருக்கும் ... நாமதான் அதுக்கு தக்கபடி நடந்துக்கணும். முதல்ல வேளா வேளைக்கு நல்லா சாப்பிடு... நெரைய பழங்க, கீரையெல்லாம் சேத்துக்க..."
"அப்பறமா நா ஒரு மருந்து தரேன்.. அதக்குடி.. எல்லாம் சரியாப் போகும்..."
பாட்டி சொன்னதைக் கேட்ட மரகதம் முகத்தில் 1000 வால்ட் பல்ப் எரிந்தது போன்ற பிரகாசம் தெரிந்தது.
"அது என்ன மருந்துன்னுதான் எங்கிட்ட சொல்லேன் பாட்டி..." என்று துளைத்தெடுக்கத் தொடங்கிவிட்டாள்.
"சொல்றேண்டி கண்ணு... நீயும் தெரிஞ்சுக்க..."
"வெத்துல - - - 4
சீரகம் - 2 கரண்டி
சின்ன வெங்காயம் - 4
பூண்டுப் பல்லு - 4
இது எல்லாத்தையும் சேர்த்து அரைச்சு, கொதிக்க வைச்சு, அந்தச் சாறோட வெண்ணெய் கலந்து, மாதவெலக்கு வாரதுக்கு முன்னாடியும், வந்த பின்னாடியும் குடிக்கணும்... இது மாதிரி 3 இல்ல 4 மாசத்துக்கு, குடிச்சிக்கிட்டு வந்தால் குணம் தெரியும் டீ கண்ணு...."
"இது மட்டுமில்ல... இன்னொரு மருந்தும் சொல்றேன்.. கேட்டுக்க..."
"சடமாஞ்சில், திரிகடுகு, சிற்றரத்தை சேர்த்து இடிச்சி கஷாயம் செஞ்சு குடிக்கலாம். இந்த ரெண்டு மருந்தையும் செஞ்சு குடிச்சா, மாதவெலக்கு காலத்துல வர்ற தலைவலி, வாந்தி, வெள்ளைப் படறது, அசதி எதுவுமே வராது... கருப்பையும், சினைப்பையும் கூட வலுப் பெறும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க...."
பாட்டி சொன்ன மருந்து உள்ளே செல்லும் முன்பே வேலை செய்யத் தொடங்கிவிட்டதை பேத்தியின் முகமே சொல்லியது.