Monday, January 25, 2010

இதயம் பேசுகிறது...


இதயம் பேசுகிறது...

டாக்டர் செரியனுடன் சில நிமிடங்கள்...

ஐந்தேகால் அடி கம்பீரமான உயரம். எப்போதும் மாறாத 66 கிலோ எடை. இதயத்தோடு தொடர்புடையவர். இதய அறுவை சிகிச்சை உலகின் முடிசூடா மன்னர், டாக்டர் கே.எம்.செரியன்.

ஓர் அதிகாலை நேரத்தில் நிகழ்ந்தது இந்தச் சந்திப்பு. கையில் காபிக்குப் பதிலாக நெல்லிக்காய் ஜூஸுடன் வந்தமர்கிறார் செரியன். பெரிய நெல்லிக்காயை அரைத்து சர்க்கரை போடாமல் வெறும் இஞ்சி மட்டுமே அதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. தினம் காலையில், டாக்டர் தவறாமல் அருந்தும் ஆரோக்கிய பானம் இது.

இவருக்கான சுப்ரபாதம் காலை ஆறு மணிக்கு ஐ.சி.யூ.வில் இருந்து ஆரம்பிக்கிறது. அடுத்த இருபது நிமிடங்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அனைத்து நோயாளிகளின் விவரங்களையும் கேட்டறிகிறார். சற்று நேரத்தில் கொதிக்கக் கொதிக்க பிளாக் டீ. அதை முடித்துவிட்டு ட்ரெட் மில்லரில் ஏறுகிறார். முப்பது நிமிட நடைப்பயிற்சி. வியர்வைப் பெருக்கெடுத்து ஓட, அதிலிருந்து இறங்கி இருபது நிமிடங்கள் ஓய்வு. அன்றைய நாளிதழ்கள் அத்தனையையும் புரட்டி முடிக்கிறார். மருத்துவக் குணம் அதிகமுள்ள 'பப்பாளி'யின் காதலர் இவர். அது நேர்த்தியாக நறுக்கப்பட்டு இவருக்காக காத்திருக்கிறது. பிறகு, குளியல் முடித்து எட்டு மணிக்கு சென்னை முகப்பேரில் இருக்கும் 'ஃப்ரான்டியர் லைஃப்லைன்' மருத்துவமனையில் ஆஜர். வாரத்தின் ஆறு நாட்களும் இதே ஷெட்யூல்தான். ஞாயிறு மட்டும் சென்னையை அடுத்த எலவூர் கிராமத்தில் இருப்பார். பல கோடி ரூபாயில் உருவாகிவரும் தனது லட்சிய சின்னமான 'நேஷனல் மெடிக்கல் சயன்ஸ் பார்க்'கை மேற்பார்வையிட கிளம்பிவிடுவார். அன்றைக்கு மட்டும் மத்தியான தூக்கம் உண்டு. ''அந்தத் தூக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும்'' என்கிறார். பின்னே, சும்மாவா? ஒரு நாளில் பதினான்கு மணி நேரம் உழைக்கிறாரே. அதேபோல், இரவு படுத்ததும் உடனே தூக்கம்தான்.

''பதற்றமான சூழ்நிலை உங்கள் பணியில் தவிர்க்க முடியாததாயிற்றே! டென்ஷனை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?''

''யோகா, தியானம் என்று எதுவுமே நான் செய்வதில்லை. எனக்கு டென்ஷனே கிடையாது. ஒருவேளை என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு

இருக்குமோ என்னவோ! கன்ஃப்யூசியஸ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. 'உனக்கு மிகவும் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுத்துவிடு. பிறகு ஒரு நாள்கூட வேலை செய்ய வேண்டியிருக்காது. ஒவ்வொரு கணமும் ஆனந்தமாக நகரும்.''

டாக்டர் செரியனின் சொந்த ஊர் கேரள மாநிலத்திலுள்ள செங்கனூர். இவரது தந்தை டீ மற்றும் ரப்பர் விவசாயி. அந்தக் குடும்பத்திலிருந்து மருத்துவத்துறைக்கு நுழைந்த முதல் நபர் செரியன்தான்.

''நீங்கள் மருத்துவத் துறைக்கு வரக் காரணம்?''

''ஒருவர் பிறப்பதைத் தேர்ந்தெடுக்கும் கடவுள், பிறப்புக்கு முன்னரே அதற்கான காரணத்தை தீர்மானித்துவிடுகிறார். கிரேக்க ஞானி ஒருவரின் கருத்து இது. நான் இந்த வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.''

''இதய அறுவை சிகிச்சையில் உங்களின் சிறப்பு அம்சம்?''

''ஒவ்வொரு நோயாளியையும் அவரவர் வயதுக்கு ஏற்ப என் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, என் குழந்தை, என் பேத்தி என்று உள்ளார்ந்த அன்புடன் அணுகுவேன். நான் நோய்களுக்கு கட்டுப் போடுகிறேன். இறைவன் அதைக் குணமாக்கி நோயாளியை மட்டுமின்றி என்னையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான்.''

''சினிமாவுக்குப் போவதுண்டா?''

''விமானப் பயணத்தின்போது ஏதேனும் படம் பார்ப்பதுண்டு. பதினைந்து ஆண்டுகள் கழித்து அண்மையில் தியேட்டருக்குச் சென்று 'ஹாரிபாட்டர்' படம் பார்த்தேன். என் பேத்திகள் என்னை வற்புறுத்தி இழுத்துச் சென்றார்கள். குழந்தைகளுடன் குழந்தைகளாக ரசித்தது மறக்க முடியாத பேரின்பம்.''

''பிடித்த உணவு?''

''கறி மீன். இது கத்தோலிக்க சிரியன் கிறிஸ்துவர்களின் ஸ்பெஷல். இதைச் செய்வதற்கு கொடம்புளி என்ற கேரள வகை புளியைப் பயன்படுத்துவார்கள். இந்தப் புளியில் இயற்கை மருத்துவக் குணங்கள் அதிகம். இதைச் சாப்பிட்டால் அலர்ஜி நீங்கும். கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனை தெரிந்துகொண்ட அமெரிக்கர்கள், கொடம்புளியை கேப்ஸ்யூல் வடிவாக்கி, ஒரு கேப்ஸ்யூல் ஐம்பது டாலர் விலைக்கு விற்கின்றனர். இதனால் இப்புளியின் விலை இந்தியாவிலும் ஏறிவிட்டது. ஒரு கிலோ நூற்றைம்பது ரூபாய். இந்தப் புளி கொண்டு தயாரிக்கப்பட்ட மீன் வாழை இலையில் சுற்றப்பட்டு வேக வைக்கப்படும். மிகச் சுவையாக இருக்கும். ஆரோக்கியமும் அடங்கியது.''

''நீங்கள் மிகவும் விரும்பும் நபர்?''

''என்னைப் பெற்ற தாய். பெற்றோரை நேசியுங்கள். ஆசிரியரை மதியுங்கள். வாழ்வு நிச்சயம் உயரும். இதைத்தான் அடுத்த தலைமுறைக்கு நான் சொல்ல வருகிறேன்.''

''உங்கள் இலக்கு என்ன?''

''இதய அறுவை சிக ¤ச்சையில் உள்ள அனைத்து வகையான சிக்கலான சிகிச்சைகளையும் செய்துவிட்டேன். இனி புதுவிதமாக ஏதாவது இதய நோய் ஏற்பட்டாலும் அதற்கு சிகிச்சை அளிக்கக் காத்திருக்கிறேன். இளமைப் பருவத்தில் சில மருத்துவமனைகளில் கடும் பணி ஆற்றியிருக்கிறேன். அருகிலிருப்பவர்களிடம் வியாபாரம் கலந்த சுயநலப் போக்கு இருப்பதைக் கண்டு அதிர்ந்தேன். மருத்துவர் என்பவர் மக்கள் சேவகர் அல்லவா! உடனே அவர்களை விட்டு விலகினேன். எந்தப் பின்புலமும் பணபலமும் இன்றி நல்ல வெற்றிகரமான டாக்டர் என்பதை மட்டுமே மூலதனமாக வைத்தேன். இறைவன் அருளால் இந்த மருத்துவமனையைத் தொடங்கினேன். இதோ நான் சர்வதேச தரத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கும் 'நேஷனல் மெடிக்கல் சயன்ஸ் பார்க்' பலருக்கும் உதவப்போகிறது. என் இலக்கைத் தொட்டுவிட்ட திருப்தியைத் தரப்போகிறது.''

மென்மையான சிரிப்புடன் விடைகொடுக்கிறார் டாக்டர் செரியன். நினைவிலேயே நிற்கிறது நெல்லிக்காய் ஜூஸ். ட்ரை பண்ணுங்க பாஸ்!