Sunday, July 24, 2016

பொய்மையில் மூழ்கடிக்கிற கொடுமை நாளும் தொடர்கிறது.


'சினிமாவுக்குப் போன சித்தாளு' நாவலின் முன்னுரையில் ஜெயகாந்தன் எழுதியது: இன்று நம் சமூகத்தில் சினிமாவுக்கும், சினிமா நடிக, நடிகையருக்கும் இருக்கிற இடம் குறித்து, எப்போதும், பகிரங்கமாகவே கருத்து தெரிவித்துள்ளேன். சினிமாக்காரர்களால், அறியாமையும், பேதைமையும் கொண்ட மக்கள், சுயஅபிமானம் இழந்து விட்டனர். அவர்களின் அறிவும், மனமும், ரசனையும், ஒழுக்கமும் சிதைந்து போனதற்கு, சினிமாக்களும், அது சம்பந்தப்பட்ட நடிக - நடிகையர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களே காரணம்.

சினிமாக்களில் பொய்யொழுக்கமும், போலிப் பண்புகளும் ஒவ்வொருவர் மீதும் நிர்பந்தமாக திணிக்கப்படுகிறது. இதனாலேயே அவர்களின் செயல், சொல், நோக்கம் மூன்றுக்கும் தொடர்பில்லாமல் சுய முரண்பாடு கொள்கின்றனர். 
இந்த வர்த்தக சூதாடிகள், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் நல்லுணர்வுகளை நாசப்படுத்தி, அவர்களின் சொந்த வாழ்க்கையையே சினிமாத்தனப்படுத்தி, பொய்மையில் மூழ்கடிக்கிற கொடுமை நாளும் தொடர்கிறது. 

தங்கள் சொந்த மக்களின் மனமும், தரமும், குணமும், பண்பும் சீரழிவது குறித்து, இந்தப் பண வேட்டைக்காரர்களுக்கு, கொஞ்சமும் உறுத்தல் இல்லை. அப்படிப்பட்ட உள் உறுத்தல், அவர்களறியாமல், அவர்களுக்குள் ஏற்படும் போது தான், புராணம், தமிழ்மொழி, கற்பு, பெண்மை, கடமை, தியாகம், தர்க்கம் மற்றும் கலை போன்ற ஆர்ப்பாட்டமான பெரிய வார்த்தைகளை, லாப வேட்டை கருதி, பொய்யாக பிதற்றி, அந்த கேவலத்திலேயே, மேலும் அமிழ்ந்து போகின்றனர்!