Saturday, June 18, 2016

வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல 25 வழிகள்!

வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல 25 வழிகள்!



1. இன்றுதான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்பதைப் போல ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர், விபத்தில் சிக்கிப் பிழைத்தவர், நெருங்கிய ஒருவரை இழந்தவர்... இவர்களை பாருங்கள்! வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதமே, 'பாசிடிவ்'வாக இருக்கும்.

"அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்!" என்று எதையும் தள்ளிப் போட மாட்டார்கள். எங்கேயாவது போக வேண்டுமா... ஒரு நண்பரை பார்க்க வேண்டுமா... ? உடனே, செய்து விடுவார்கள். அவர்களிடம், 'பிறகு' என்ற வார்த்தையே இருக்காது.

2. நமக்கு நடக்கும் நல்ல விஷயங்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதுங்கள். பேச ஆரம்பிக்கும்போது, உங்கள் அருமை குழந்தை என்ன என்ன வார்த்தைகள் பேசினாள் என்பதையும் எழுதி வையுங்கள். அவற்றையெல்லாம் எழுதி வைக்காவிட்டால், பிறகு ஞாபகம் இருக்காது. பிரச்னைகளை எழுத ஆரம்பியுங்கள்; தீர்வு கிடைக்கும்.

3. உங்கள் வாழ்க்கையை பற்றி உங்கள் பேரக் குழந்தைகளிடம் என்ன நினைவுக் கூற விரும்புகிறீர்கள்? எப்படி உங்களை மற்றவர்கள் நினைவு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் குழந்தையின் பள்ளி ஆண்டு விழாவை தவிர்த்து, ஆபீஸ் மீட்டிங்தான் முக்கியம் என்று செல்வதும்...  பெட்ஷீட் வாரா வாரம் மாற்றப்பட வேண்டும், தரை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதும்தான் மற்றவற்றை விட முக்கியம் என்பதுபோன்று நீங்கள் நடந்துகொண்டதுதான் அவர்களின் நினைவில் நிற்க வேண்டுமா...?

4. சின்ன, சின்ன தவறுகளை பெரிதுபடுத்தாதீர்கள். ஓவர் டேக் செய்ய, உங்களை அனுமதிக்காத டிரைவரின் மீது ஏன் கோபம்? புன்சிரிப்பு செய்யுங்கள்; உங்கள் மீது அவருக்கு கோபமாக இருந்தால் அது அவர் பிரச்னை. ரயிலை தவற விட்டு விட்டீர்களா? போகட்டுமே! அதற்கு ஏன் டென்ஷன், ஸ்டேஷனில் ஒரு காபி குடித்துவிட்டு, அடுத்த ரயிலில் போகலாமே!

5. பிடிக்காத வேலை, கஷ்டமான வேலை என்றால் ஏன் தள்ளிப் போடுகிறீர்கள்? தள்ளிப் போடுவது, நம் சக்தியைத்தான் விழுங்குகிறது; வீணாக்குகிறது. கூடவே, 'இந்த வேலையை இன்னும் பண்ணவில்லையே...' என்ற கவலை வேறு. எனவே அந்த வேலையை உடனே செய்து முடிப்பதே நல்லது.

6. புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள். ஞாயிற்றுக்கிழமை என்றால் நிறைய தூங்கி லேட்டாகதான் எழ வேண்டுமா? சீக்கிரம் எழுந்து, அருகே உள்ள பூங்காவில் காலை ப்ரேக் ஃபாஸ்ட்டை ஏன் சாப்பிடக் கூடாது? மற்றவர்கள் வருவதற்கு முன் திரும்பி விடலாம். அன்றைய நாள் நீண்டதாக இருக்கும். மத்தியானம் எப்போதும் தூங்காதவரா? ஒரு,"ஞாயிறு' நன்றாக தூங்குங்கள்.

7. அடுத்த வீட்டுக்காரர் புது கார், புது ஸ்டீரியோ சிஸ்டம் வாங்கினால் என்ன? நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர் சனி, ஞாயிற்றுக் கிழமையிலும் ஆபீசுக்கு போக வேண்டியிருக்கும். உங்களை மாதிரி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அவர் இருக்கிறாரா...? உங்களை மாதிரி, நண்பர்களை அவர் சந்திக்கிறாரா? இருக்காது.

8. அணியாத டிரஸ், வெளியே எடுக்காத கிச்சன் பாத்திரங்கள், பயன்படுத்தாத படுக்கை,  பொம்மைகள், புத்தகங்கள், மரச்சாமான்கள் இவற்றை தர்ம ஸ்தாபனத்திற்கோ, ஏழை, எளியவருக்கோ தானமாக கொடுத்து விடுங்கள்! நிறைய மகிழ்ச்சி கிடைக்கும்; வீட்டிலும் நிறைய இடம் மிஞ்சும்.

9. 'நோ' சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். ஏற்கனவே மிகவும், 'பிசி'யாக இருக்கிறீர்கள் என்றால், இன்னும் அதிக வேலை என்றால், 'நோ' சொல்லுங்கள். உங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

10. சில ஆண்டுகள் தொடர்ந்து ஓடினால், மெஷினுக்கும் ரிப்பேர் பார்க்க வேண்டும்; அதே போலத்தான் மனித உறவுகளும். காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள், முன் மாதிரி இன்னும் காதலிக்கிறீர்களா? கணவர், மனைவி, பார்ட்னர் எல்லா உறவுக்கும் ரிப்பேர் தேவை; நேரம் ஒதுக்குங்கள்.

11. நண்பர்களுக்கு கொடுக்கும் நேரத்தில், கொஞ்சம் உங்கள் குடும்பத்தினருக்கும் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உங்கள் நேரம் கண்டிப்பாக தேவை.

12. உங்கள் குடும்பத்தினர், பார்ட்னர், நண்பர்கள் இவர்களிடம் நீங்கள் விரும்பும், பாராட்டும் நல்ல குணங்களைப் பற்றி சொல்லுங்கள். நன்றாக ஒரு விஷயத்தை செய்தால், அவர்களை வாய்விட்டு பாராட்டுங்கள்; நல்ல டானிக் போன்று அது உதவும். நீங்கள் செய்யும் பல காரியங்களை  அவர்களும் பாராட்டக் கூடும்.

13. எல்லா பிரச்னைகளையும் உங்கள் மீது போட்டு விடுகின்றனரா உங்கள் நண்பர்கள்? அது தவறு. அதற்கு, இனி மேலும் இடம் கொடுக்காதீர்கள். அவர்கள் பிரச்னைகள் உங்களையும் பாதிக்க ஆரம்பித்தால், கொஞ்சம் ஒதுங்குங்கள். தங்கள் பிரச்னையை சந்திக்க, தீர்த்துக் கொள்ள அவர்கள் ஆரம்பித்துக் கொள்ளட்டும்.

14. நண்பர்கள், தூரத்து உறவினர்கள் - இவர்களுடன், "டச்' விட்டு போய் விட்டதா? பரவாயில்லை... இன்று துவங்குங்கள்... போனில் பேசலாம், இ-மெயில் அனுப்பலாம், லெட்டர் எழுதலாம். அவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவர்.

15. உங்கள் மனதுக்கு பசுமை நல்லது. தோட்டத்திலிருந்து புதுப் பூக்களை பறித்து வையுங்கள். விடியற்காலையில் எழுந்து மார்கெட்டிற்கு சென்று, குறைந்த விலையில் காய்கறி பழங்களை வாங்கி வாருங்கள். தொட்டிகளில் செடி வளர்ப்பது கூட, வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

16. நிறைய அலைகள், கடல் மணல், வெறும் கால்கள் இவை எல்லாம் உடலுக்கும், உள்ளத்திற்கும், மகிழ்ச்சி அளிப்பவை. கடற்கரைக்குச் செல்லுங்கள்; முடியாதவர்கள், நதிக்கரை செல்லுங்கள். இயற்கை மிகவும் சிறப்பானது.

17. ஏதாவது புதியதாக உருவாக்குங்களேன்... சித்திரம் வரைவது, தைப்பது, கேக் செய்வது, தோட்டத்தில் செடி வளர்ப்பது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

18. வீட்டுக்கு வெளியே சென்று, நிறைய சுத்தமான காற்றை சுவாசியுங்கள். நுரையீரலின் அடித்தளத்திலிருந்து நிறைய காற்றை உட்கொள்ளுங்கள். பழைய காற்றெல்லாம் போவதை சுகமாக உணர்வீர்கள்.

19. வாக்கிங் செல்லுங்கள் - மெதுவான, ஆனால், நிச்சயம் பயனுள்ள எக்சர்சைஸ். உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது. ரெகுலராக வாக்கிங் செல்வதால் தினமும் நன்றாக இருப்பதை உணருவீர்கள்.

20. நல்ல, பழைய - புதிய நகைச்சுவை வீடியோக்கள், திரைப்படங்களை வீட்டில் போட்டு பார்த்து, குடும்பம் முழுவதும் நிறைய சிரித்து மகிழுங்கள்.

21. வீட்டில் பர்னிச்சர், பொருட்களை இடம் மாற்றி வையுங்கள்; அந்த மாதிரி வீட்டை மாற்றி அமைப்பதே ஒரு நல்ல ஹாலிடேதான்!

22. நல்ல மகிழ்ச்சியான விஷயத்தை விரும்பி, காத்திருந்து அனுபவியுங்கள். விடுமுறையில் ஒரு சுற்றுலாப் பயணம்; வெளியே சென்று சாப்பிடுவது போல!

23. உங்கள் வீட்டுக்கு, டின்னருக்கு நண்பர்களை கூப்பிடுங்கள். சாப்பிடும் அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்யுங்கள். விசேஷ மெனு தயாரித்து, அதற்காக பொருட்கள் வாங்குவதும், டின்னரை தயாரிப்பதுமே மகிழ்ச்சியான 'சுமை'. வருபவர்களும் மகிழ்ந்து பாராட்டுவர். அன்று இரவு எல்லாருக்கும் மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.

24. சிரியுங்கள். சிரிப்பு ஒரு தொற்று வியாதி! அனைவருக்கும் பிடிக்கும்.

25. யாராவது ஒருவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குங்கள். சமயம் கிடைக்கும்போது ஏதாவது நல்ல, தர்ம காரியத்திற்கு உங்கள் நேரத்தை செலவழியுங்கள். குழாயில் தண்ணீர் வரவில்லை, குழந்தையை ஸ்கூலுக்கு அழைத்துப் போக ஆட்டோக்காரர் வரவில்லை, பணிப்பெண் வரவில்லை, பஸ் கிடைக்கவில்லை என்று வாழ்க்கையில் பல கஷ்டங்கள்; இவற்றையெல்லாம் மீறி மகிழ்ச்சியாக இருப்போம்.