Tuesday, May 24, 2016

பெண் துணையற்ற ஆண் சவம்தான்

 
ஏதேச்சையா சேனல் மாத்திகிட்டே வரும்போது மக்கள் தொலைக்காட்சில சின்னச் சின்ன ஆசை நிகழ்ச்சில பலூன் விக்கிற பெரியவர் ஒருத்தர சந்திக்கிற நிகழ்ச்சி ஓடிட்டிருந்துச்சி....

நாள் முழுக்க இப்பிடி சைக்கிள்ல சுத்தி பலூன் விக்கிற ஒரு அறுவது வயசு (இருக்கலாம்) பெரியவர் பேசிகிட்டிருந்தாரு....

பேரப்பிள்ளைங்க கிட்டேருந்து ஃபோன் வரும்.... வரும்போது என்ன வாங்கிட்டு வரணும்ன்னு உத்தரவு போடுவாங்க.... பரோட்டா, முட்டை தோசைன்னு அவங்கவங்களோட விருப்பத்துக்கு கேப்பாங்க. வாங்காம வீட்டுக்கு போவ முடியாது.....

நாலு ஆம்பளைப்பசங்க... அவங்கள்ல மூனு பேருக்கு ரெண்டு ஆப்பிளைப்பசங்க... கடைசி மகனுக்கு மட்டும் ஒரு பொண்ணு, ஒரு பையன்.....

வீட்டுக்கு போனதும் தாத்தா ன்னு வந்து கைய கால புடிச்சிகிட்டு ஏறி குதிச்சி விளையாடுவாங்க...

என்னருந்தாலும் எனக்குன்னு தனியா ஒரு இடமில்ல.... மனைவியோட எல்லாமே போச்சு.... நம்ம வீடுன்னா நம்ம விருப்பத்துக்கு தூங்கலாம், சாப்புடலாம், டிவி பாக்கலாம்... பிள்ளைங்கன்னாலும் அங்க நம்ம விருப்பதுக்கு இருக்கமுடியாது....

எனக்கு ஒடம்பு சரியால்லாம போனப்ப ராயப்பேட்டை ஆஸ்பத்திரில.... ராத்திரி ஒன்னரை மணி.... லிஃப்ட் ஆபரேட்டர் இல்ல... சக்கர நாற்காலில என்ன உட்காரவச்சி ரெண்டு மாடி தள்ளிகிட்டு போயி எக்ஸ்ரே எல்லாம் எடுத்து வைத்தியம் செய்யவச்சி காப்பாத்துனவ.... அவள என்னால காப்பாத்தமுடியாம போச்சி....

அவள ஆஸ்பத்திரில சேர்த்திருந்தப்ப பத்துநாளாச்சி.... அவருக்கு சாப்பாடு கூட குடுக்க யாருமில்லாம போச்சின்னு என்னபத்திதான் கவலப்பட்டு பேசிகிட்டிருந்தா....(கண் கலங்குறாரு)

அப்ப அவங்கள ராணி மாதிரி பாத்துகிட்டீங்கன்னு சொல்லுங்க... அவங்க பேர தெரிஞ்சிக்கலாமா?

ராணிதான்....

அப்ப நீங்க ராஜா.... உங்க பேரு?

ராஜாவேதான்....

மனைவியோட எல்லாம் போச்சு... வீட்டுக்கு போகப்பிடிக்காம (என்னருந்தாலும் நமக்குன்னு ஒரு இடமில்லாததால) இப்பிடியே பலூன்கள வச்சிகிட்டு தெருத்தெருவா ராத்திரி ஒன்பது வரைக்கும் சுத்துவேன். எப்பிடியாவது கொஞ்சம் பணம் சேர்த்து ஒரு ரூம் பார்த்துக்கனும்.

மனைவியோட ஃபோட்டோவ காட்டுறாரு.

கணவனுக்கப்புறம் நம்ம வாழ்க்கை எப்படியாகுமோ... பிள்ளைங்க நம்மள பாத்துக்குவாங்களோன்னு பயந்து அழுவுற பெண்களத்தான் பார்த்திருக்கோம். ஆனா மனைவிய இழந்த ஆணோட வலிய நேர்ல பார்க்குறோம். என்ன அவரோட மகளா நெனைச்சி அத்தனையும் கொட்டிகிட்டிருக்காரு. இவர ஆரம்பத்துல சந்திக்க வரும்போது இவர் மனசுல இத்தனை சோகமிருக்கும்ன்னு நமக்கு தெரியாது.

சரி அய்யா.... இப்ப பேரப்பிள்ளைகளுக்கு பரோட்டா வாங்கனுமில்லையா? அதுக்கு பணம் வேணும்.... அதுக்கு இந்த பலூனெல்லாம் விக்கனுமில்லையா?

வாங்க... எல்லாத்தையும் குடுங்க... 

(பணம் கொடுத்ததும்) வாங்க பரோட்டா வாங்கலாம்...

ஹோட்டல்
-------------

மூனு செட் பரோட்டா பார்சல்....

நீங்க என்ன சாப்புடறீங்க...

பரோட்டாதான்....

அப்ப இன்னொன்னும் குடுங்க...

இருங்கய்யா நானே பணம் குடுத்துடறேன்...

வேணாம்மா.... இப்பதான பலூனையெல்லாம் வாங்கிகிட்டு பணம் குடுத்திருக்கீங்க.... நானே தர்றேன்.... என்னோட பேரப்பிள்ளைகளுக்கு என்னோட உழைப்புல வந்த பணத்துலதான் வாங்கனும்.....

(செயற்கைத்தனம் இல்லாம அந்த எளிய மனிதரோட இன்டர்வியூ ரொம்ப அருமையா இருந்துச்சி. மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி.)


இளமையில் என்ன ஆடினாலும், முதுமையில், பெண் துணையற்ற ஆண் சவம்தான்