இரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 விஷயங்கள்!
என்னதான் நேரம், காலம் பார்த்து திருமணம் செய்தாலும், சில திருமணங்கள் தோல்வியில் முடிவதுதான் சோகம். முதல் திருமணத்தில் ஏதாவது பிரச்னை அல்லது தோல்வி அடையும் போது அதிலிருந்து விலகிவிடுவது வழக்கம். முதல் திருமண வாழ்க்கையிலிருந்து விலகிய பிறகு, பல்வேறு காரணங்களினால் மீண்டும் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகி வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான சமூக மாற்றம்தான் என்றால், இரண்டாவது திருமணத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
அப்படி என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுதா இங்கே பகிர்கிறார்...
1. இரண்டாவது திருமணம் செய்யும் பெண்கள் தேர்ந்தெடுக்கும் ஆணுக்கு இது முதல் திருமணம் எனில், அதை நன்கு விசாரித்துக்கு கொள்வது நலம். அதாவது அவர் ஏன் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை திருமணம் செய்கிறார். அதற்கான காரணம் என்ன? அவர் கூறும் காரணம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தால், அந்த ஆணை திருமணம் செய்வது குறித்து யோசிக்கலாம்.
2. திருமணம் செய்துக் கொள்ளும் நபர் விவாகரத்து பெற்றுள்ளார் எனில், அதற்கான சான்றிதழ்களை சரிபார்ப்பது மிக முக்கியம். அந்த விவாகரத்து சான்றிதழில் என்னென்ன விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை பார்க்கவும். அதாவது, முதல் மனைவிக்கு குழந்தை இருந்தால் அந்த குழந்தைக்கு என்ன உரிமை உள்ளது. முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமா? என்பதையும் கவனிக்க வேண்டும். ஒருவேளை முதல் மனைவி இறந்துவிட்டார் எனில், அதை உறுதி செய்வதோடு, எந்த காரணத்தினால் அவர் இறந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
3. இணையதளங்களில் வரன் தேடும்போது, அதிலுள்ள விவரங்களை அப்படியே நம்பிவிடக்கூடாது. அதனுடைய உண்மை தன்மையை மணமகனின் உறவினர்கள், தெரிந்தவர்களிடம் விசாரிப்பது அவசியம். ஏனெனில், இணையதளங்களில் பொய்யான தகவல்கள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அவர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் ஆகியவற்றில் அவருடைய நடவடிக்கைகளை எப்படி இருக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். மேலும் அவரின் முகவரி, எத்தனை வருடங்களாக அந்த முகவரியில் வசித்து வருகிறார் என்பதையும் விசாரிப்பது அவசியம்.
4. மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணமாக உடல் ரீதியான பிரச்னை சற்று அதிகமாகி வருகிறது. இது போன்ற பிரச்னை உள்ள ஆண்கள், இரண்டாவது திருமணம் செய்யும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு குழந்தை பிறக்கவில்லை எனில் அந்த பிரச்னையை உங்களின் மீது குறையாக கூற வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து விசாரித்து, மருத்துவ ரீதியாக விசாரித்துக் கொள்வது அவசியம். அதே சமயத்தில் இது சற்று கடினமான வேலைதான்.
5. இரண்டாவதாக, திருமணத்துக்காக தேர்வு செய்து வைத்திருக்கும் நபரின் மீது ஏதாவது கிரிமினல் வழக்கு உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும். அப்படி ஏதாவது சிக்கல் இருந்தால் அவர்களை தவிர்ப்பது நல்லது.
6. அடுத்தது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு குழந்தை இருந்தால், அந்த குழந்தையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை அவருக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைதான். எனவே இதில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பதில் தெளிவாக இருங்கள்.
7. முதல் திருமண வாழ்க்கையில், பிரச்னையில் சிக்கி விவாகரத்து பெற்று இருக்கும் பெண்கள் அல்லது எதிர்பாரத விதமாக கணவர் மரணம் அடைந்ததது போன்ற பிரச்னையில் இருக்கும் பெண்கள், இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு முன் மனநல ஆலோசகரை கலந்து ஆலோசித்து, மன ரீதியாக தயார் ஆவது முக்கியம். இதில் ஏதாவது சிக்கல் இருந்தால் திருமணத்தை சில மாதங்களுக்கு ஒத்தி வைப்பது நல்லது.
8. 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'தமிழ்நாடு கட்டாய திருமணப் பதிவு சட்டத்தின்' படி இரண்டாவது திருமணத்தை பதிவு செய்வது அவசியம். இதை திருமணமான 3 மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் திருமணம் செய்யும் நபர், ஏற்கனவே திருமணம் செய்து, அதை பதிவு செய்து வைத்துள்ளாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.
மேற்கூறிய, விஷயங்கள் அனைத்தும், முதல் திருமணம் செய்பவர்களுக்கும் பொருந்தும். இரண்டாம் திருமணம் செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இது, பெண்களுக்கு மட்டும் அல்ல...ஆண்களுக்கும் பொருந்தும்!